Sunday Jun 30, 2024

திருநாகை சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், பெருமாள் சன்னதி, நாகப்பட்டினம், தமிழ்நாடு 611003, இந்தியா தொலைபேசி + 91-94422 13741, 4365 – 221 374.

இறைவன்

இறைவன் நீலமேகப்பெருமாள் இறைவி: சௌந்தர்யவல்லி

அறிமுகம்

திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம். இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன. நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.

புராண முக்கியத்துவம்

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் “செளந்தரராஜப் பெருமாள்’ என்றழைக்கப்படுகிறார். பெயர்க்காரணம்: நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு “சாரபுஷ்கரணி’ என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.

நம்பிக்கைகள்

காலசர்ப்பதோஷம் நீங்கவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள். இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

திருவிழாக்கள்

1. பங்குனியில் 10 நாள் பிரம்மோற்சவம் 2. ஆணி உத்திரம் 10 நாள் 3. ஆடிபூரத்தில் ஆண்டாளுக்கு 10 நாள்விழா 4. தை, புரட்டாசி சனிகிழமைகளில் விசேஷ பூஜைகள்

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநாகை

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top