Thursday Nov 21, 2024

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு ஒப்பிலியப்பன்திருக்கோயில், திருநாகேஸ்வரம்அஞ்சல்,கும்பகோணம்வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் -612 204. போன்: 0435-2463385

இறைவன்

இறைவன்: ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) இறைவி: பூமாதேவி

அறிமுகம்

உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பதிமூன்றாவது திருத்தலம். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது. பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர். கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், “”எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,” என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், “”நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,” என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், “”சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது,” என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

நம்பிக்கைகள்

இங்கு வேண்டிக்கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் “உதயகருடசேவை’ அருள்கிறார். பின், “தெட்சிண கங்கை’ என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன்பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு சுவாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது. பஞ்சகோல சுவாமி: இத்தலத்தில் சுவாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, “மாம் ஏகம் சரணம் விரஜ’ என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு “என்னை சரணடைபவர்களை காப்பேன்’ என்று பொருள். நம்மாழ்வார் இவரை “யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்’ என்ற பொருளில் மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்கு திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் சுவாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம்.இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள்விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு “பகலிராப்பொய்கை’ என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம். மனைவியை பிரியாத பெருமாள்: பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், சுவாமிக்கு வலதுபுறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது ஒருபோதும் தன் மகளை விட்டு பிரியக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

திருவிழாக்கள்

1. வைகாசியில் வசந்த உற்சவம். 2. புரட்டாசியில் 10 நாள் பிரம்மோத்சவம். 3. ஐப்பசியில் 12 நாள் திருக்கல்யாண உற்சவம். 4. மார்கழியில் பகல் பத்து, இராபத்து. 5. தைமாதம் 5 நாள் தெப்போத்சவம். 6. பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநாகேஸ்வரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top