Sunday Jun 30, 2024

திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்), தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்)அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்-612 602. போன்: 0435-2467167, 2466857

இறைவன்

மூலவர்:திருநறையூர் நம்பி அம்மன்: வஞ்சுளவல்லி

அறிமுகம்

திருநறையூர் நம்பி கோயில் அல்லது சீனிவாசப் பெருமாள் கோயில் அல்லது நாச்சியார்கோயில் , தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோயில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் வைணவ திருநரையூர் நம்பி திருக்கோயில் எனும் சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சோழ நாட்டு பதினான்காவது திருத்தலமாகும். இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும். இக்கோயிலிலில் நடைபெறும் கல் கருடச் சேவை புகழ் பெற்றது. நாச்சியார் கோவிலில் உள்ள திருநரையூர் நம்பி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கல் கருடச் சேவை புகழ்பெற்றதாகும். இவ்வூரில் தயாரிக்கப்படும் நாச்சியார் கோயில் விளக்கு புகழ்பெற்றதாகும்.

புராண முக்கியத்துவம்

மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு “வஞ்சுளாதேவி’ எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், “”தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்,” என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், “”நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்” என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் “நாச்சியார் கோயில்’ என்ற பெயரும் பெற்றது.

நம்பிக்கைகள்

வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.

சிறப்பு அம்சங்கள்

திருமங்கையாழ்வாருக்கு அருளிய பெருமாள் நீலன் எனும் குறுநிலமன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்தபோது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து “முத்ராதானம்’ செய்து வைத்தார். (முத்ராதானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக்கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும், சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக்கொண்டதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை, “நம்பி’ என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப்பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்துள்ளார். சாவிக்கொத்துடன் தாயார்: ஸ்ரீரங்கம் கோயில், ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பதுபோல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது. கல் கருடசேவை: இங்கு கருடாழ்வார் தனிச்சன்னதியில் உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால், இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். நாயனார் வணங்கிய பெருமாள்: கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம்பிடித்தவர். 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்ட இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், கோபுரத்திற்கு அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல இக்கோயிலைக் கட்டினான் கோச்செங்கட்சோழன். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை “மணிமாடக்கோயில்’ என்று பாடியுள்ளார். பஞ்சகிருஷ்ண கோயில்களில் முதலாவதான இத்தலம் முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது. கல் கருடன் அமைந்த விதம்: தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன். செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன். தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன். அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்” என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா” என்றார் தேவசேனாபதி. சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது. இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா” என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?” என்றும் வினவினார். மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு” என்று. ‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு. மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான். மயூரா… ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?” என்றான் மன்னன். மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செதுக்க வேண்டிய சிற்பம் எது?” மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது. இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்” என்றான் மன்னன். மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும். மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்.” மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்” என்றான் மயூரசன்மன். சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?” என்றான் மன்னன். மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும். பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்” என்றான் மயூரசன்மன். செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்” என்றான் மன்னன். தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது. மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!

திருவிழாக்கள்

மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநறையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top