Saturday Nov 23, 2024

திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோயில், (சிவாலய ஓட்டம் – 4), கன்னியாகுமரி கன்னியாகுமரி

முகவரி

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருநந்திக்கரை, கன்னியாகுமரி மாவட்டம் – 629 161.

இறைவன்

இறைவன்: நந்தீஸ்வரர்

அறிமுகம்

நந்தீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரையில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். சிவராத்திரியின் போது நடத்தப்படும் புகழ்பெற்ற சிவாலய ஓட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கோவில் உள்ளது. வரிசையில் இது நான்காவது கோவில். இக்கோயில் நந்தியாறு கரையில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த சிவன் கோயிலுக்கு வந்து காளையை அடக்கும்பிடி சிவனிடம் வேண்டினர். சிவபெருமான் அந்த காளையை இழுத்துவந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது. இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது.

நம்பிக்கைகள்

சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்தக் கோயிலை விட ஏற்ற கோயில் எதுவுமே இல்லை எனலாம். அறிந்தோ, அறியாமலோ கொலைப்பழி பாவம் ஏற்பட்டவர்கள் நந்தீஸ்வரரை வணங்கி மனம் திருந்தப்பெறலாம்.

சிறப்பு அம்சங்கள்

பொதுவாக பிரகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்கின்றனர். சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலும் ஒன்று. காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். காளை அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என அழைக்கப்படுகிறது. நட்சத்திர மண்டபம் : இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது. பரசுராமர் தன் தாயைக் கொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது தாயைக்கொன்ற பாவம் தீர பரசுராமர் நந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து இங்குதான் அவரது பாவம் நீங்கியது.

திருவிழாக்கள்

மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி, சோமவாரத்திலும், பிரதோஷ நாளிலும் விசேஷ பூஜைகள் உண்டு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநந்திக்கரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

குழித்துறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top