Sunday Nov 24, 2024

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை வழி, தஞ்சாவூர் மாவட்டம் – 614628.

இறைவன்

இறைவன்: புராதனவனேஸ்வரர் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் அமைந்திருக்கிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள். அப்படிப்பட்ட திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான், பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

வனவாசமும் வாழ்க்கையின் அவசியமே என உலகிற்கு உணர்த்திட இறைவன் தன் தேவியுடன், வனப்பிரதேசமாக விளங்கிய இப்புராதனவனத்தில் தங்கி, தேவர்களும், சித்தர்களும், துறவிகளும் சூழ வந்தமர்ந்தார். இத்தலத்தில் சிவபெருமான் நீண்ட கால நிஷ்டையில் அமர்ந்தார். இதனால் உலகில் அசுரர் பலம் மிகுந்ததால், தேவர்களும், ரிஷிகளும் அசுரர்களின் செயல்கண்டு துன்பம் அடைந்தனர். எல்லோரும் ஒரு சேர தேவியிடம் முறையிட்டனர். தேவியரோ மன்மதனை அழைத்து சிவனின் தவத்தை கலைக்கலாம் என்றாள். உலக நன்மைக்காக மன்மதனும் மலர்க்கணைகளை பூவானமாக தொடுத்து எய்தான். அவன் நின்று மலர்களை எய்த இடம் “பூவனம்’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது. மலர்க்கணையால் நிஷ்டை கலைந்த முக்கண்ணன், மலர்க்கணை வந்த திசை நோக்க, மன்மதன் வெப்பசக்தியால் தகித்தான். இந்த இடம் “மதன்பட்டவூர்’ என்று ஆயிற்று. நிஷ்டை கலைய நாங்களே காரணமென்றும், மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென தேவர்களும், ரிஷிகளும் கேட்டுக் கொண்டனர். மன்மதன் பால் தெளித்து உயிர்ப்பிக்கப்பட்டான். இந்த இடம் பாலத்தளி என்று விளங்குகிறது. இத்தலத்தில் காமனை எரித்ததற்கு சான்றாக “காமன் கொட்டல்’ என்ற இடத்தில் காமன் பண்டிகை விழா நடக்கிறது. லிங்கத் திருமேனியில் சிவபெருமான் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு பார்த்தும் வீற்றிருக்கிறார்கள். இங்கு கொடிமரம் இல்லை. ஆலயத்தின் வெளியே நந்திகேஸ்வரர், அவருக்கு எதிர்புறம் வடக்கு பகுதியில் இரட்டை விநாயகர் சன்னிதி உள்ளது. உள்பிரகாரத்தின் வடக்கில் மகா கணபதி, தன் தும்பிக்கை முகத்தை வடக்குபுறமாக தலைசாய்த்து வித்தியாசமான முறையில் காணப்படுகிறார். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும். மேலும் மகாலட்சுமி, வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை மற்றும் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கோள்களுடன் கூடிய லிங்கத் திருமேனி என பல்வேறு கடவுளர் சிலைகளை ஆலயம் முழுவதும் நாம் காணமுடியும். இந்த ஆலயத்தின் தலவிருட்சம், வில்வ மரமாகும். இத்தல இறைவனின் பெயரைப் போலவே, இந்தக் கோவிலின் அமைப்பும், உருவச் சிலைகளும் புராதன காலத்தைச் சேர்ந்தவை போல் காட்சி தருகின்றன. இந்த ஆலயமானது திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது.

நம்பிக்கைகள்

சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணத்தில் எமதர்மன் சன்னிதி இருக்கிறது. கையில் சூலாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கி, வலது காலை மடக்கி, இடதுகாலை தொடங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இந்த எமதர்மனை தரிசித்தாலே பாவங்கள் விலகிவிடுவதாக நம்பிக்கை. சனிக்கிழமை தோறும் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, எமகண்ட நேரத்தில் ஆயுள் விருத்திக்கான பூஜைகள் இங்கு செய்யப்படுகின்றன. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கீற்று கொட்டகையில் சுதை சிற்பமாக இருந்த எமதர்மனுக்கு, தற்போது கற்சிலை வடித்து வைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி பரிவார தெய்வங்கள் உள்ளனர். எமன் சன்னிதிக்கு தெற்கு பகுதியில் ஆண்கள் மட்டும் நீராடும், ‘எம தீர்த்தக்குளம்’ அமைந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இக்கோயிலில் அம்பாள் சன்னதியில் வலப்புறம் பழம் பெருமை வாய்ந்த விநாயகர் உள்ளார். இவரது செவியில் உள்ள துவாரங்களில், நமது வேண்டுதல்களை நினைத்து வைக்கப்படும் “பூ’க்களை, இவ்விநாயகர் உள்ளே இழுத்துக் கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும். பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் பூவைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த விநாயகரால் இத்தலத்தின் பெயரே பூவிழுங்கி விநாயகர் கோயில் என்றே மருவி வருகிறது. பெரிய நாயகி அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும். நோய்கள் தீரும். காளையர்களுக்கும், கன்னியர்களுக்கும் நல்ல மணமாலையும், வாழ்வும் அமையும் என்பது நம்பிக்கை.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சிற்றம்பலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பட்டுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top