Sunday Jan 26, 2025

திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4368 – 261 447

இறைவன்

இறைவன்: ஐராவதீஸ்வரர், இறைவி: வண்டமர் பூங்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை

அறிமுகம்

திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. கொடிமரத்தின்கீழ் கொடி மர விநாயகர் உள்ளார். அடுத்துள்ள மண்டபத்தில் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக மற்றொரு பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், சம்பந்தர், அப்பர், நாகர், சுந்தரர், பரவை நாச்சியார், கைலாசநாதர், அகஸ்தீஸ்வரர், சுபகமகரிஷி, பைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறம் வண்டமர் பூங்குழலி அம்மன் சன்னதியும், குமார புவனேசுவரர் சன்னதியும் உள்ளது. குமார புனேசுவரர் சன்னதியின் மூலவராக லிங்கத்திருமேனி உள்ளது.

புராண முக்கியத்துவம்

ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை. வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறை வனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது. துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். அவர் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடற்புராண வரலாறு. ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று. சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது. அதைக் கண்ட “சுபர்’ தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார். அக்காலந் தொடங்கி மூலவர் சன்னதியில் தேன்கூடு இருந்து வருகிறது”, தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம். மீண்டும் கூடுகட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் – சுபமக ரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்றத்தில் உள்ளது. முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுகமகரிஷியும் சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் “”இராசஜராஜப் பாண்டி நாட்டு உத்தமச் சோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச்சோழ நல்லூர்” என்று குறிக்கப்படுகிறது. இக்கோயிலைக் கட்டுவித்தவன் “”சோழ மண்டலத்து மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க சோழ கேரள ராஜன்” ஆவான் (காலம் கி.பி.1253), கல்வெட்டில் இறைவனின் பெயர், “”இராஜேந்திர சோழீஸ்வரமுடைய மகாதேவர்” என்று காணப்படுகின்றது.

நம்பிக்கைகள்

திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 116 வது தேவாரத்தலம் ஆகும். கோடு – கரை . வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு எனப்பட்டது. வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு என இத்தலப்பெயர். அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம். உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுபக முனிவர், முருகன், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரிய, சந்திரர், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன. முன்மண்டபத்திற்கு அருகில் குமார புவனேஸ்வரர் கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் உள்ளது. அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம். ஞானசம்பந்தரின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மூலவர் மிகச் சிறியவர்.

திருவிழாக்கள்

ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம்

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கொட்டாரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top