திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி
அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர் தஞ்சாவூர் மாவட்டம்-614 202. போன்:9344303809, 9843665315, 9344303803, 9345267501
இறைவன்
இறைவன்: வையம்காத்த பெருமாள் இறைவி: பத்மாசனவல்லி
அறிமுகம்
திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம்.சோழ நாட்டு எட்டாவது திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அதே பெயர் தான். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.தீர்த்தமும், விமானமும் முறையே சக்ர தீர்த்தம், சுத்தஸத்வ விமானம் என்று அறியப்படுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் பலா ஆகும். ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.
புராண முக்கியத்துவம்
இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை “புகுந்தானூர்’ என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் “வையங்காத்த பெருமாள்’ எனப்படுகிறார்.
நம்பிக்கைகள்
இங்கு வேண்டிக் கொள்பவர் களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பாக இருந்து அவர்களை வழிநடத்தும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரம் உள்ளது. இம்மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது. பெருமாளின் சக்கரம் துர்வாசரை விரட்டி சென்றபோது, இங்கு சங்கு பிரதானமாக இருந்ததாம். இதனை உணர்த்தும்விதமாக இம்மரத்தில் சங்கு வடிவம் இருக்கிறது. பிரயோக சக்கரம், சுயம்புவாக வெளிப்பட்ட சங்கு இவ்விரண்டையும் இங்கு தரிசிப்பது மிகவும் அரிய பலன்களைத் தரக்கூடியது. நவக்கிரக தலங்களில் கேது தலமான இங்கு பவுர்ணமியில் 108 தாமரை மலர்களுடன் “ஸ்ரீ ஷீக்த ஹோமம்’ நடக்கிறது. பெருமாள் இத்தலத்தில் வராக அவதாரம் எடுத்து உட்சென்றவர் என்பதால் கருவறையில் சுவாமியின் திருப்பாதங்களுக்கு மத்தியில் இருக்கும் இடமே உலகின் மையப்பகுதி என்கிறார்கள். நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். எனவே, இவ்வூர் “கூடலூர்’ என்ற பெயர் பெற்றது.
திருவிழாக்கள்
வைகாசி விசாகத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.
காலம்
1000 வருடங்கள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கூடலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி