Friday Jun 28, 2024

திருக்கானப்பேர் (காளையார் கோயில்) சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்- 630 551. திருக்கானப்பேர். சிவகங்கை மாவட்டம். போன் +91- 4575- 232 516, 94862 12371.

இறைவன்

இறைவன்: சொர்ணகாளீஸ்வரர் சோமேசர், சுந்தரேசர் இறைவி:சொர்ணவல்லி, செளந்தரவல்லி, மீனாட்சி

அறிமுகம்

சொர்ணகாளீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதியை, மருது பாண்டியர் ஆட்சி செய்தார். இக்கோயிலை தேவக்கோட்டை ஜமீன் குடும்பத்தாரின் அறகட்டளை நிர்வகித்து வருகிறது. சென்னை-இராமேஸ்வரம் அல்லது திருச்சி-மானாமதுரை இருப்புப்பாதையில் சிவகங்கை தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள காளையார்கோயிலில் உள்ளது. சிவகங்கை நகரத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க காலத்தில், இந்த இடம் கானப்பேர் என்று அழைக்கப்பட்டது. இதற்கான சான்று, புறநானூற்றில், 21ஆம் பாடலில் ஐயூர் மூலங்கிழார், சங்க கால கவிஞ்ர், குறிப்பிட்டுள்ளார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் சுந்தர மூர்த்தி நாயனார், இக்கோயிலிள்ள் மூலவரை காளை என்று விவரித்துப் பாடினார். அன்று முதல், இத்திருக்கோயில் காளையார்கோயில் என்று அழைக்கப்பட்டது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பர். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது. ஆனால், இத்தலத்தில் மூன்று இறைவனும், மூன்று இறைவியும் எழுந்தருளுகின்றனர். சொர்ணகாளீஸ்வரர் – சொர்ணவல்லி சோமேசர் – சவுந்தரநாயகி சுந்தரேசுவரர் – மீனாட்சி இதில் தேவாரப் பதிகம் பெற்றவர் சொர்ணகாளீஸ்வரர்.

புராண முக்கியத்துவம்

ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். “இறைவா! உன்னைக் காண முடியவில்லையே,’ என வருந்திப் பாடினார். தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து மீண்டும் திரும்பிச்சென்றது. அதன் கால் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லையென்றும், அவ்வழியே நடந்து வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, சுந்தரர் மகிழ்ச்சியுடன் அவ்வழியில் சென்றார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் “காளையார்கோவில்’ ஆயிற்று.

நம்பிக்கைகள்

சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

யானை மடு: இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தது. மனிதர்களின் பார்வை இந்த யானை மீது படக்கூடாது என்பது விதி. ஆனால், ஒருமுறை ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால், அந்த யானை தன் தலையால் பூமியை முட்டி பாதாளத்துக்குள் சென்றுவிட்டது. யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு “யானை மடு’ என்று பெயர். ராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. கோயிலுக்குள் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. தல விருட்சம் கொக்கு மந்தாரை. மூன்று சிவன் மூன்று அம்மன்: இங்குள்ள பெரிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், சிறிய கோபுரம் மருது பாண்டியர்களாலும் கட்டப்பட்டது. சோமேசர்- சவுந்தரநாயகி, சுவர்ணகாளீஸ்வரர் – சுவர்ணவல்லி, சுந்தரேஸ்வரர்- மீனாட்சி என மூன்று சிவனும், மூன்று அம்மனும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூன்று சிவன், மூன்று அம்மன் இங்கு மட்டுமே உள்ளனர். இதில் சுவர்ணகாளீஸ்வரர் தான் தேவாரப்பாடல் பெற்றவர். இவரை வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை. சண்டாசுரனைக் கொன்ற காளி, சுவர்ணகாளீஸ்வரரை வழிபட்டு, தன் பாவம் நீங்கி, சுவர்ணவல்லி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். ஆயிரம் கோயிலை தரிசித்த பலன்: இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது. இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க, பல சிவாலயங்களை தரிசித்து வந்தான். இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது. சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தலத்தை பாடியுள்ளனர்.

திருவிழாக்கள்

தைப்பூசத்தில் சுவர்ண காளீஸ்வரருக்கும், வைகாசி விசாகத்தில் சோமேஸ்வரருக்கும், ஆடிப்பூரத்தில் சுவர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த்திருவிழா நடக்கிறது. 11ம் திருமுறையிலும் குறிப்பிடப்பட்ட தலம். மார்கழி பவுர்ணமி, நவராத்திரியில் சிறப்பு பூஜை உண்டு.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காளையார் கோவில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top