Monday Nov 18, 2024

திருக்கண்ணபுரம் ராமநாதசுவாமி திருக்கோவில் திருவாரூர்

முகவரி

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம்- 609 704. திருவாரூர் மாவட்டம். போன் +91-4366 – 292 300, 291 257, 94431 13025

இறைவன்

இறைவர்: இராமனதீசுவரர், இறைவி: சரிவார்குழலி

அறிமுகம்

திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில் (இராமனதீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராமர் வழிபட வரும்போது நந்தி தடுத்ததும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்துக் காட்சி தந்ததும் தொன்நம்பிக்கைகள். இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமனதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவர் திருப்பெயர் : இராமனதீஸ்வரர் ( இராமநாதர்) இறைவியார் பெயர் : சரிவார் குழலி, சூளிகாம்பாள் தலமரம்: வில்வமரம், சம்பகமரம் இப்போது மகிழம்பூ மரம் தான் உள்ளது. தீர்த்தம் : இராம தீர்த்தம் வழிபட்டோர் : இராமர் தேவாரப்பாடல்கள்: சம்பந்தர் : சங்கொளிர் முன்கையர் திருக்கண்ணபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூரின் கிழக்குத் திசையில் உள்ளது ராமநதீச்சரம். இந்த இடத்தில் அமைந்துள்ள இந்த சிவாலயம் ராமநதீசரர் என்றும் இராமநாதர் கோயில் என்றும் கூறப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

ராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பிகை தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ராமர் சிவபூஜை செய்ய உதவினாள். ராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, “ராமநாதேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

நம்பிக்கைகள்

செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும் சிவனுக்கு ருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சரிவார் குழலி முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்ற போது ஓரிடத்தில் 4 பெண் குழந்தைகளை கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும், திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில் கருந்தாழ் குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார் குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள். கரு காத்த அம்பிகை நான்கு அம்பிகையருக்கும், “சூலிகாம்பாள்’ என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக்கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் “சூலிகாம்பாள்’ என்ற பெயர் ஏற்பட்டது. “சூல்’ என்றால் “கரு’ என்று பொருள். “கரு காத்த அம்பிகை’ என்றும் இவளுக்கு பெயர் உண்டு. பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம். புனர்பூச பூஜை இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். ராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை ராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம். சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருச்செந்தூரில் முருகப்பெருமான், வலது கையில் மலர் வைத்தபடி காட்சி தருகிறார். இத்தலத்தில் இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால் ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். ராமர் வழிபட்ட தலம் என்பதால், “ராமநாதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமரை நந்தி மறைத்ததால், “ராமநந்தீச்சரம்’ என்ற பெயரும் உண்டு. சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கண்ணபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top