Sunday Jun 30, 2024

திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி

அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் , ஈங்கோய்மலை – 621 209. திருச்சி மாவட்டம். போன்: +91- 4326 – 2627 44, 94439 – 50031

இறைவன்

இறைவன்: மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்) இறைவி: மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி

அறிமுகம்

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலேஸ்வரர் கோயில், சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து, காவேரி நதியைக் கடந்து செல்கையில், அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர், ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த மலையை மரகதமலை என்பர். காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும், ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது, சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர். நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர், இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்.

புராண முக்கியத்துவம்

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். இந்த விளையாடலுக்கு கட்டுப்பட்ட அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச்செய்தார். ஆதிசேஷன் மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒருபகுதி இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், “மரகதாசலேஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். இவருக்கு “திரணத்ஜோதீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

சக்திமலை: அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை “சக்திமலை’ என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர். அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கேற்ற காட்சி இது. ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று. ஈ வழிபாடு: தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இங்கு வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியபோது, ஈ வடிவம் பெற்றார். பின் இம்மலை மீது பறந்து வந்து, சன்னதி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். பின் மீண்டும் தன் பழைய வடிவம் பெற்று திரும்பினார். அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், “திருஈங்கோய்மலை’ என்றும், சிவனுக்கு “ஈங்கோய்நாதர்’ என்றும் பெயர் உண்டு. புளியமரத்தில் ஒளிந்த சிவன்: சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார். சுந்தரர், சிவனை எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார். சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் “எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,’ என சொல்லிவிட்டு திரும்பி விட்டார். இத்தலத்தின் விருட்சம் புளியமரம். ஆனால், சுந்தரர் புளி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சபித்துவிட்டதால் இங்கு புளியமரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பம்சம்: மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சுந்தரர் மட்டுமின்றி, நக்கீரர் ஈங்கோய் எழுபது என்ற பாமாலையை அருளியிருக்கிறார். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம். தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். ஆடிக்கிருத்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர். ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. கோஷ்டத்தில் ஒரு தெட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தெட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த தெட்சிணாமூர்த்தி என குரு பகவானின் வித்தியாசமான வடிவங்களை காணலாம்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருஈங்கோய்மலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top