Monday Jan 27, 2025

திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் கோயில் திருஆதனூர், சுவாமி மலை (வழி), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்-612 302 போன்: 0435-2000503 (சேஷாத்ரி பட்டாச்சாரியார்)

இறைவன்

இறைவன்: ஆண்டளக்கும் ஐயன், இறைவி : ரங்கநாயகி

அறிமுகம்

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினென்றாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் என அழைக்கப்படுகிறார். கருவறையில் பெருமான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ, பள்ளி கொண்ட தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து இடதுகையில் எழுத்தாணியும் ஏடும் கொண்டுள்ளதால் பெருமாளின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் அரங்கனின் நாயகி, தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார்.இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்த்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது. பணியாளர்களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ்வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், “உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்’ என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னி டம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி “இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்” என்றார். திருமங்கையாழ்வார் பணியா ளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், “மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்‘ என்றார். திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் “நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?’ என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளி கொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர். ரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்த மண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது. பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி “தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்” என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

நம்பிக்கைகள்

இங்கு வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறக்கலாம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சிறப்புகள் : காமதேனு தவமியற்றிய தலம், இங்கு காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு. தலைக்குக் கீழே மரக்காலுடன் இடது கரத்தில் ஓலை மற்றும் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார் பெருமாள். செல்லும் வழி: சுவாமிமலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. புள்ளப் பூதங்குடிக்கு மிக அருகில் உள்ளது. பிரம்மனால் உருவாக்கப்பட்ட சப்தரிஷிகளில் ஒருவர் ஆங்கரீசர். அவருடைய ஏழு பிள்ளைகளில் ஒருவர் பிரகஸ்பதி.சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்த அவர் பல யாகங்களைச் செய்து மிக உன்னதமான நிலையை அடைந்தார். இவருடைய தகுதியை எண்ணி இவருக்கு தேவ குரு பீடத்தை அளித்தார்கள். இந்திரன் முதலான தேவர்களின் சபையில் குருவாகவும் ஆலோசகராகவும் குருபகவான் திகழ்கிறார். நவக்கிரங்களில் குருவுக்குப் பிரதான இடம் அளிக்கப்படுகிறது. குருவின் 5, 7-ம் பார்வை சகல நலன்களையும் தருவதாகும். திருமணத்திற்கு குருபலம் வருவது முக்கியமாகக் கருதப்படுகிறது. குரு பார்வை பெற்றால்தான் திருமணம். குழந்தை செல்வம், சிறந்த பதவி, சொத்து, சுகம் கிடைக்கும். சாத்வீக குணமும் மஞ்சள் நிற மும் உடைய இவரைப் பொன்னான் என்றும் வியாழன் என்றும் அழைப்பார்கள். தயாள சிந்தை உடையவர். தன்னை வழிபடுகிறவர்களுக்குப் பிறரை வணங்காத உயர்வான பதவியையும் மதம் நீதி மனமகிழ்ச்சி புத்திரப்பேறு செல்வம் முதலியவற்றையும் கொடுப்பவர். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளியிருப்பவர் குரு பகவான். ரதத்தில் வில்லும், மீனும் அடையாளமாயிருக்கும். இவருக்கு உகந்த தானியம் கடலை, பிடித்த கல் புஷ்பராகம். பிடித்த மலர் முல்லை. சமித்து அரசு. இவருக்கு பிடித்த சுவை இனிப்பு. குரு பகவானை வழிபட்டால் புகழையும், கீர்த்தியையும் வாக்கு வன்மையையும் அளிப்பார்.

திருவிழாக்கள்

வைகாசி (மே-ஜுன்) யில் நடைபெறும் 10 நாள் பிரம்மோற்சவம் குறிப்பிடத்தக்கது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருஆதனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top