Sunday Jul 07, 2024

தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தாரமங்கலம், ஓமலூர், சேலம் மாவட்டம் – 636502. தொலைபேசி எண்: 04290-252100

இறைவன்

இறைவன்: கைலாசநாதர் இறைவி: சிவகாமசுந்தரி

அறிமுகம்

தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

தாருகா வனத்தில் அமர குந்தி என்ற ஊருக்கு கெட்டி முதலியார் என்பவர் அரசாண்டு வந்தார். பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்கையில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடம் ஒன்றில் பால் சொரிகிறது என்ற தகவல் வந்தது.அந்த தகவல் கேட்டு அந்த இடத்திற்கு சென்று பார்த்தார். தான் கேள்விப்பட்ட தகவல்படி அந்த பசு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்தது.அதை கண்டு பரவசப்பட்ட கெட்டி முதலியார், சுவாமி அங்கு எழுந்தருள்வதாக உணர்ந்த அவர் அங்கு வழிபாடு செய்தார். அதன்பின்னர் பல ஆண்டுகள் கழித்து மகுடேறி மகுடசூடாவடி மன்னன் மணிமன்னன் வணங்கினும் வணங்காமுடி இந்த கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம்,குழந்தை பாக்கியம் கைகூடுகிறது என்று இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி,உத்தியோக உயர்வு,விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வேண்டிக்கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதும். ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் உள்ளது. பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்து பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன. ஜூரகேஸ்வரர் : இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன. எண்கோண வடிவில் அமைந்துள்ள தெப்பக்குளம் உள்ளது. இதன் ஒரு மூலையில் கல்லை எறிந்தால் அது எட்டு மூலைகளிலும் பட்டு மீண்டும் பழைய இடத்திற்கு வந்து சேரும் வகையில் அக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. மன்னர் போருக்குச் செல்லும் முன் இத்தெப்பக் குளத்தில் கல்லை விட்டெறிவார். பழைய இடத்திற்கே வந்தால் போரில் வெற்றி கிடைக்கும். என்பது ஐதிகம். மூன்று தெருக்களை ஒட்டி நீண்ட மதிற்சுவருக்குள் கோயில் அமைந்துள்ளது. உயரமான ஐந்து நிலை கோபுரம் வழியே உள்ளே நுழைகிறோம். மூலவர் கைலாசநாதர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அன்னை சிவகாம சுந்தரி தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுப்ரமணியருக்கு தனி சன்னிதி உள்ளது. அர்த்த மண்டபத்தில் பாதாளத்தில் ஒரு லிங்கம் உள்ளது. குகையில் இறங்கி வணங்க படிக்கட்டு வசதிகள் உண்டு. கட்டணம் செலுத்தி உள்ளே சென்று இறைவனை வணங்கலாம். இப்படி பாதாளத்தில் லிங்க தரிசனம் புதிய அனுபவமாய் உள்ளது. இக்கோயில் சிற்பங்கள் கலைநயம் மிக்கவை சிவசக்தியின் வடிவங்களை கோபமாகவும் சாந்த மாகவும் சித்தரித்து இரு சிலைகள் அருகருகே உள்ளன. அவினாசியப்பர் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். ஆயிரம், லிங்கங்களை வழிபட்ட பலன் தரும் கைலாச நாதரை தரிசிப்போர் வாழ்வில் கவலைகள் யாவும் நீங்கி ஆனந்தம் அடைவர் என்பது நிச்சயம்.

திருவிழாக்கள்

தைப்பூசம் தெப்பத்தேர் – 15 நாள் – 20 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். கார்த்திகை, திருவாதிரை,அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலை மோதும். இவை தவிர வருடத்தின் முக்கிய விசேச தினங்களான தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி,தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு தினங்களின் போது கோயிலில் பக்தர்கள் வருகை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

காலம்

10 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தாரமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top