Saturday Nov 23, 2024

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு- 614712 (திருக்கருப்பறியலூர்) நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 258 833

இறைவன்

இறைவன்: குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர்) இறைவி : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை)

அறிமுகம்

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இக்கோயிலுள்ள இறைவன் குற்றம் பொறுத்த நாதர், இறைவி கோல்வளைநாயகி. இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது. இந்திரன், இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம் பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

புராண முக்கியத்துவம்

ராவணனின் மகன் மேகநாதன். இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு “இந்திரஜித்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் . இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான். இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான். இந்த செய்தியை கேட்ட ராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் “குற்றம் பொறுத்த நாதர்’ எனப்படுகிறார்.

நம்பிக்கைகள்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், ஆண் வாரிசு வேண்டுபவர்களும், பெண் வாரிசு வேண்டுபவர்களும் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு. சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் “தலைஞாயிறு’ என வழங்கப்படுகிறது. இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் என தல புராணம் கூறுகிறது. 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது. சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது ஐதீகம். எனவே தான் இத்தலம் “கருப்பறியலூர்’ என வழங்கப்படுகிறது. அனுமன் தோஷம் நீங்கிய தலம் ராவண யுத்தத்தில் ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் “”இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா”என்றார். உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது. சிவனை குறித்து தவமிருந்தால் சிவ அபராதம் நீங்கும் என ராமர், அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி, “”அனுமனே! நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்,”என அருள்பாலித்தார். அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது “திருக்குரக்கா’ என வழங்கப்படுகிறது.

திருவிழாக்கள்

திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தலைஞாயிறு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top