Thursday Nov 21, 2024

செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர்-604 407 திருவத்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம். போன்: +91- 4182-224 387

இறைவன்

இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: வலகுஜாம்பிகை

அறிமுகம்

வேதபுரீஸ்வரர் கோயில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில், தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்து வந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைவைத்து வளர்த்து வந்தார். அவையாவும் ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் ஆண்பனைகளை பெண்பனைகளாக மாறும்படி திருப்பதிகம் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவோத்தூர். திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் என்று அருளியபோது அவை பெண்பனைகளாயின. தல விருட்சம்:பனைமரம் தீர்த்தம்:மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம்

புராண முக்கியத்துவம்

தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி. இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். ஓத்து என்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்த பெருமான் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இங்கு போந்து வேதபுரீசுவரரையும் இளமுலையம்பிகையையும் வழிபட்டு ஆண்பனை பெண்பனையாய்க் காய்க்குமாறு பதினோறு பாசுரங்கள் பாடியருளினார். தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்கும் பெற்றி மிக்கவனவாய் எழிலோடு விளங்குகின்றன. அப்பனையின் இனிய கனிகளை உண்பார் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் , பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர் என்று பெரியோர்கள் கூறுவதாக தலபுராணம் கூறுகிறது.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிசேகம் செய்தால் திருமணத்தடை நீங்கும். இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது. வெளிநாட்டிலிருக்கும் பக்தர்கள் எல்லாம் கூட இந்த மரத்தின் பனம் பழத்தை வேண்டிக் கேட்டுப் பெறுகின்றதால் பல வெளிநாடுகளுக்கும்கூட அனுப்பப்பட்டு வருகிறது. நாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது. சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ராகு காலத்தில் பூஜை செய்து வழிபட்டால் நாக தோசம் நிவர்த்தி ஆகும். ஆமை தோசமும் நிவர்த்தி ஆகிறது. இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். நேர்த்திக்கடன்: கல்யாண உற்சவம் செய்து வைத்தல், கவசம் சாத்துதல், நாகாபரணம் செய்து வைத்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். நெய்விளக்கு ஏற்றவும் செய்கிறார்கள். பால், தயிர், இளநீர், குங்குமம், விபூதி, பன்னீர், சந்தனம், எண்ணெய் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம். சுவாமிக்கு வேட்டி, அம்பாளுக்கு சேலை வழங்கல்,கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்கிறார்கள். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்கிறார்கள். ஆடிப்பூரத்தின் போது அம்பாளுக்கும் கார்த்திகையில் சுவாமிக்கும் சங்காபிசேகம் நடைபெறுகிறது. தவிர கலசாபிசேகமும் நடக்கிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் திருவோத்தூர் எனப்பட்டது. தற்போது “திருவத்திபுரம்’ என அழைக்கப்படுகிறது. இத்தலத்தை சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இங்கு சிவன் வீர நடனம் புரிந்துள்ளார். சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் “செய்யாறு’ என அழைக்கப்படுகிறது. இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம் : வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பம்சம் இது. அதாவது கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று.சிவபக்தனான தொண்டைமான் என்ற மன்னனுக்காக சிவனின் ஆணைப்படி நந்தி தேவர் படைத்துணையாக சென்றுள்ளார். இதற்காக இங்கு நந்தி சிவனுக்கு எதிர் திசையில் திரும்பியுள்ளார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும்.

திருவிழாக்கள்

தை மாதம் – பிரம்மோற்சவம் – 10 நாட்கள் நடைபெறும் – அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றி காமதேனு கற்பக விருட்சம் – வாகனங்கள் வீதி உலா – கடைசி நாளில் ராவணேசுவரன் கயிலாய காட்சி – மிகவும் அதிக அளவில் பக்தர்கள் திரள்வது வழக்கம். ஆடி மாதம் – லட்ச தீபம் – ஆடி விசாகம் – ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம் சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோசம் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி (வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம்), நர்த்தன கணபதிக்கு சதுர்த்தி அபிசேகம் உண்டு ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்கு சகஸ்ரநாமம் -விளக்கு பூஜை – ஆடி தை மாதங்களுக்கு 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினத்தின் போது சுவாமிக்கு விசேச பூஜைகள் அபிசேகங்கள் செய்யப்படும். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செய்யாறு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top