Thursday Dec 19, 2024

சூலூர் வைத்யநாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி :

அருள்மிகு வைத்யநாத சுவாமி திருக்கோயில்,

சூலூர்,

கோயம்புத்தூர் மாவட்டம் – 641402.

போன்: +91 422- 2300360

இறைவன்:

வைத்யநாத சுவாமி

இறைவி:

தையல் நாயகி

அறிமுகம்:

கொங்கு நாடு முற்காலத்தில் 24 பகுதிகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. அதில் ஒன்று வாயரைக்கால் நாடு. பல்லடம் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்நாட்டில் அமைந்த ஊர் சூலூர். கோவை நகரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் கிழக்கில் 18 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது சூலூர். சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். நொய்யல் நதியின் தென்கரையில் இத் தாவரம் மிகுதியாக காணப்பட்டதால் இப்பகுதி சூரலூர் எனப்பட்டது. சூரலூர் என்பது நாளடைவில் சூலூர் என்றாகி, வழக்கில் வழங்கப்பட்டு நிலைபெற்றதாகி விட்டது.

9ம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் இங்கு காட்டினை அழித்து சமன் செய்து ஊராக்கும் போது சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டார். அதை ஒரு கல்ஹார கோயிலாகக் கட்டி சுயம்பு மூர்த்தத்தை பிரதிஷ்டை செய்து வைத்ய லிங்கமுடையார் என்ற திருநாமத்தை சூட்டி கும்பாபிஷேகமும் செய்தார். நொய்யல் நதியோரம் கொங்கு நாட்டில், முட்டத்திலிருந்து கரூர் வரை 36 சிவன்கோயில்களை கரிகாற் சோழன் திருப்பணி செய்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது. அவர் திருப்பணி செய்த 36 சிவன்கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தமிழ்நாடு அரசு 1950-ம் ஆண்டு வெளியிட்ட சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் இச்செய்தியை உறுதி செய்கின்றது.

நம்பிக்கைகள்:

இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணதடை, ராகு கேது தோஷ நிவர்த்திகள் நிறைவேறுவதால் ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

                இக்கோயிலில் முறையாக சிவபூஜைகள் தங்கு தடையின்றி நடைபெற 1168-1196 ஆண்டுகளில் அரசாண்ட மூன்றாம் வீரசோழன் வரிக்கொடை அளித்த செய்தியினை செலக்கரச்சல் மாரியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணலாம். இதிலிருந்து இக்கோயில் 850 வருடத்திற்கு முற்பட்ட கோயில் என்பது ஊர்ஜிதமாகின்றது. மூலவர் சுயம்பு வைத்ய நாத சுவாமி மிகப் பழமை வாய்ந்த மூர்த்தம் ஆகும். முதலில் கல்ஹார கோயிலாக இருந்து நாளடைவில் பிறகோயில்களைப் போலவே இறைவியையும், பரிவார மூர்த்திகளையும் ஸ்தாபித்து ஒரு பெருங்கோயிலாக உருவெடுத்துள்ளதை தற்போது காணமுடிகிறது. கிழக்கு வாயில் முன்பு தீபஸ்தம்பத்தை அடுத்துள்ள அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் ராகு கேதுவுடன் அருளாசி வழங்குகின்றார்.

வள்ளி தெய்வயானை சமேத முருகன், வைத்யநாத சுவாமி, தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்துள்ள பிரதான சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இத்தல உட்பிரகாரத்தில் மகாகணபதி, அரசமரத்தடி விநாயகர் மற்றும் வன்னிமர விநாயகர் என மூன்று இடங்களில் ராகு கேதுவுடன் அருள்பாலிப்பது சிறப்பு. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மஹாலட்சுமி, மஹா சரஸ்வதி, துர்க்கை, நவகிரஹம், சந்தான பைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர். வைத்யநாத சுவாமியின் பரம பக்தையான கணபதியம்மாள் என்பவர் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ஒருநாள் அவருடைய கனவில் தோன்றிய ஈசன், உங்கள் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இரண்டு கொம்புகளுடன் கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்து என் பூஜைக்கு கொண்டு வந்து கொடு என்றார்.

இக்கனவைக் கண்ட பக்தையின் தூக்கம் போய்விட்டது. எப்போது விடியும் எனக் காத்திருந்தார். விடிந்தவுடன் பணியாளை அழைத்து குறிப்பிட்ட தென்னைமரத்தில் உள்ள தேங்காயை பறித்து வரும்படி கூறினார். என்ன ஆச்சரியம் ஈசன் சொல்லியபடியே அம்மரத்தில் ஏறிபார்த்தபோது இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய் இருந்தது. பொதுவாகத் தென்னை மரத்தில் காய் முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே இருந்தது. அதைப் பறித்துக் கொண்டு வந்து பூஜைக்குக் கொடுத்த அற்புத நிகழ்வைக்கூறி மனம் நெகிழ்ந்து போனார்.

இத்தலம் நொய்யல் நதியின் தெற்காகவும் சூலூர் குளக்கரையில் இருபுறமும் நீரால் சூழப்பெற்று எழிலார்ந்த தோற்றத்தில் விளங்குகிறது. கோயில் கிழக்கு நோக்கி இருந்தாலும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தெற்கு நுழைவாயிலை அமைத்துள்ளனர். கோயில் குளம் அல்லது நதிக்கரை ஓரம் அமைந்திருந்தால் அதற்கு சக்தியும் ஆற்றலும் அதிகம். ஸ்தலம், மூர்த்தி மற்றும் தீர்த்தம் ஆகியவை ஒருங்கே சிறப்பாக அமைந்திருந்தால், அத்தலங்கள் சிறப்பின் அடிப்படையில் தெய்வ சான்னித்யம் அதிகமாக இருக்கும், தெய்வீக அதிர்வுகளை உணரவும் இயலும். இவையனைத்தும் உள்ள இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபடுவது சிறந்த பயனைத்தரும் என்பது திண்ணம்.

மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று தீராத வியாதிகள் கூட இத்தலத்தில் வேண்டி பூஜித்த பின் உடல் நலம் பெற்றோர் ஏராளம். ஒருமுறை திருப்பூரில் உள்ள வங்கி அலுவலர் ஒருவர் உடல் முழுதும் புருடு மற்றும் சிறுசிறு கட்டிகள் தோன்றி விகாரமாகி அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பலன் தரவில்லை. இக்கோயிலின் மகத்துவம் பற்றி கேள்வியுற்று இங்கு வந்து நல்லெண்ணெயை அம்பாளுக்கு பூஜித்து, அதை வைத்திய நாத சுவாமிக்கு அபிஷேகம் செய்தபின் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை முறையாக உட்கொண்டதன் பலனாக 6 மாத காலத்தில் பூர்ண நலம் பெற்றதாக தெரிவிக்கின்றனர்.

திருவிழாக்கள்:

இத்தலத்திலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மாத, வருட வைபவங்கள் நடந்தாலும், இத்தலத்தின் தலையாய பெருவிழாக்களுக்கு உரிய சிறப்பை பெறுவது ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம் மற்றும் ஆடி மாதம் முதல் ஞாயிறு அன்று நடைபெறும் ஏகாதச ருத்ராபிஷேகம் ஆகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சூலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top