Friday Jun 28, 2024

சூலமங்கலம் ஸ்ரீ கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

சூலமங்கலம் ஸ்ரீ கிருத்திவாகேஸ்வரர் திருக்கோயில், சூலமங்கலம், ஐயம்பேட்டை (வழி), பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614206.

இறைவன்

இறைவன்: ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர் இறைவி: அலங்காரவல்லி

அறிமுகம்

தஞ்சாவூர் – கும்பகோணம் பேருந்துப் பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப்பாதையில் வந்து இரயில்வே நிலையச் சாலையில் திரும்பிச் சென்றால் வெகு சமீபத்தில் உள்ளது சூலமங்கலம் (சூலமங்கை) என்னும் இவ்வூர். ஸ்ரீஅலங்காரவல்லி சமேத ஸ்ரீகிருத்திவாகேஸ்வரர் திருக்கோயிலே சூலமங்கை என்பதாகும். சூலமங்கை என்னும் இக்கோயிலின் பெயரே இவ்வூரின் பெயராக வழங்கலாயிற்று; இஃது மருவி தற்போது சூலமங்கலம் என்று இவ்வூர் விளங்குகின்றது. அஸ்திரதேவர் (சூலதேவர்) வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்தவாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தைப் பெற்ற தலமாகும். ஊரின் பெயருக்கேற்ப, கோயில் உள்வாயிலின் புறத்தில் சூலத்தை தலைமீது ஏந்தியவாறு சூலதேவர் உள்ளார். சப்த மங்கையரில் சூலமங்கை வழிபட்டதால் இத்தலம் சூலமங்கை என்றாயிற்று என்போரும் உளர். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்ற சோழ நாட்டு வைப்புத் தலமுமாகும்.

புராண முக்கியத்துவம்

இங்கே உள்ள இறைவனின் திருநாமம் கிருத்திவாகேஸ்வரர். தாருகானவனத்து முனிவர்களின் கர்வத்தை அழிப்பதற்காக, சிவனார் திருவுளம் கொண்டார். அவர்கள் நடத்திய வேள்வியில் இருந்து யானையை ஏவினார்கள். அந்த யானைக்குள் புகுந்தார் சிவபெருமான். அந்த யானையின் உடலைக் கிழித்துக் கொண்டு, உக்கிரத்துடன் வெளியே வந்தார். வேழம் உரித்த வித்தகன் என்று ஈசனைப் புகழ்கிறது புராணம். வேழம் என்றால் யானை என்று அர்த்தம். இதனால்தான் இந்தத் தலத்து இறைவனுக்கு கிருத்திவாகேஸ்வரர் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். சப்தமாதர்களில் வாராஹியும் ஒருத்தி. அதேபோல், சப்தமாதர்களில் கெளமாரியும் ஒருத்தி. சோழ தேசத்தில், சப்த மாதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு தலத்தில் பூஜித்ததாகச் சொல்கிறது புராணம், அப்படி சப்தமாதர்களில் ஒருத்தியான கெளமாரி இங்கு வந்து வழிபட்டு, சிவ பூஜை செய்து, வரம் பெற்றாள் என்று விவரிக்கிறது இந்தக் கோயிலின் ஸ்தல புராணம். சூலத்தேவர் இங்கு வந்து வழிபட்டு சுய உருவத்தை மீண்டும் பெற்றார் என்றும் இதனால்தான் இந்த ஊருக்கு சூலமங்கலம் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.

நம்பிக்கைகள்

கெளமாரி வழிபட்ட சூலமங்கலம் கிருத்திவாகேஸ்வரரை மனதால் நினைத்து வேண்டிக்கொண்டால், பேரும்புகழும் கிடைக்க வாழலாம். நோய் நொடியின்றி வாழலாம். அம்பிகையின் அருளைப் பெற்ற ஐஸ்வரியத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சப்தமாதர்களில், கெளமாரி தனம் வழங்கும் தேவதை. பொன்னும் பொருளும் தரக்கூடிய தேவதை. தனம் தானியம் பெருக்கித் தரும் தேவதையாகவே சொல்கிறார்கள் பக்தர்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சூலமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பசுபதி கோவில் நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top