Sunday Jun 30, 2024

சிவபுரம் சிவகுருநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல் – 612 401 . கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 98653 06840

இறைவன்

இறைவன்: சிவகுருநாதசுவாமி இறைவி: ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி

அறிமுகம்

சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 67ஆவது சிவத்தலமாகும். சாக்கோட்டைக்கு வடகிழக்கில் இரண்டு கி.மீ தொலைவில் அரசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று “சுவாமிகள் துறை’ என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. இவ்வூர் பட்டிடைத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் அமர்ந்த திருக்கோலத்தில் சிலை வடிவாய் உள்ளார். ஒருமுறை கைலாயத்திற்கு ராவணன் தூய்மையற்றவனாக வந்தான். அவனை நந்தி தேவர் தடுத்து நிறுத்தினார். தன் சகோதரனான ராவணனை கைலாயத்திற்குள் அனுமதிக்கும்படி குபேரன் பரிந்து பேச, கோபமுற்ற நந்தி, குபேரனை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். இதனால் பதவியிழந்த குபேரன், தனபதி என்னும் பெயருடன் மன்னனாக பூமியில் வாழ்ந்தான். சிவபக்தனான தனபதிக்கு சிவனுக்கு பரிகார பூஜை செய்து இழந்த பதவியைத் திரும்பப் பெற்றான். குபேரன் பூஜித்த லிங்கம் சிவகுருநாதர் என்னும் திருநாமம் பெற்றது. இத்தல நடராஜர் மிக அழகிய திருவுருவம் கொண்டவர். இத்தல நடராஜப் பெருமானை வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டதும், பெரும் வழக்குகளுக்குப்பின் மீண்டும் கிடைத்ததும் உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகும். இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார். குபேர பூஜை: இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கிறார். தீபாவளி நாளில் இத்தலத்தில் நடக்கும் குபேர பூஜை சிறப்பு மிக்கது. அப்போது வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம். அம்பாள் சிங்காரவல்லி என்னும் ஆர்யாம்பாள். பெரியநாயகி என்றும் பெயருண்டு. குபேரன் தனபதியாக இருந்த போது, அவனுக்கு தந்தையாக இந்திரனும், தாயாக இந்திராணியும், குழந்தையாக அக்னியும் வந்தனர். அவர்கள் பிரகாரத்தில் லிங்க வடிவில் வீற்றிருக்கின்றனர். இங்கு வந்த சம்பந்தர் இத்தலத்தை காலால் மிதிக்க அஞ்சி அங்கப்பிரதட்சணம் செய்து ஆலயத்தை வலம் வந்து சிவனைப் பாடி வழிபட்டார். அதனடிப்படையில், சிவனுக்கு அங்கப் பிரதட்சண வழிபாடு நடக்கிறது. பட்டினத்தாரின் சகோதரி இங்கு வாழ்ந்ததாகச் சொல்வர். அம்மனுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, குழந்தையை சந்நிதியில் கிடத்தி வேண்டிக் கொள்கின்றனர். ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களுடன் மற்ற கோயில்களில் சண்முகராக காட்சி தரும் முருகன் இங்கு ஒருமுகம், நான்கு கைகளுடன் வீற்றிருப்பது வித்தியாசமான தரிசனம். தட்சிணாமூர்த்தியின் காலடியில் ராகு இருப்பது மற்றொரு சிறப்பம்சம். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும். பைரவர் கோயில்: இத்தல பைரவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். இரண்டாம் கோபுர வாசலின் இடப்புறம் கோயில் உள்ளது. உளுந்து, வடை மாலை சாத்தி, தயிர் சாதம், கடலை உருண்டை நைவேத்யம் செய்து இவரை வழிபட வழக்கு விவகாரம், எதிரிபயம் நீங்கும். அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட இத்தல நடராஜர் சிலை மீட்கப்பட்டு, திருவாரூர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. புதிய நடராஜர், சிவகாமி சிலை தற்போது இங்குள்ளது. நால்வர், சுந்தரரின் மனைவி பரவையார், விநாயகர்,முருகன், கஜலட்சுமி, துர்க்கை, சூரியன், சந்திரன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

நம்பிக்கைகள்

குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இங்குள்ள அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து, விரதமிருந்து 11 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்ய குழந்தைப் பேறு கிடைக்கப்பெறுவர். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கவும், உடல் மெலிவைப் போக்கவும் இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 130 வது தேவாரத்தலம் ஆகும். குபேரபுரம், பூ கயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும். திருமால் (சுவேதவராக) வெள்ளைப்பன்றி உருவில் பூஜித்த தலம். திருமகள், குபேரன், ராவணன், அக்னி முதலானோர் வழிபட்ட தலம். சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும். குபேரன் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்ற தலம். கோஷ்ட மூர்த்தங்களாக நடன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை முதலானோர் அருள்பாலிக்கின்றனர். தெட்சிணாமூர்த்திக்குப் பக்கத்து சுவரில் திருமால் வெண் பன்றியாக இருந்து தாமரை மலர்களைக் கொண்டு வழிபடும் ஐதீக சிற்பம் உள்ளது. வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதியும், அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் “”பாரவன்காண்” என்று தொடங்கும் பாடலில் “”பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்” என்று பாடியுள்ளார்.

திருவிழாக்கள்

சித்திரை மாதப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top