Saturday Jan 11, 2025

சிவகிரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,

சிவகிரி,

திருநெல்வேலி மாவட்டம் – 627 757.

போன்: +91- 4636 – 251 015, 99448 70058, 99448 73484.

இறைவன்:

பாலசுப்பிரமணியசுவாமி

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரியில் அமைந்துள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானம் பால சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். உற்சவர் முத்துக்குமாரர். இக்கோயிலின் தீர்த்தம் சரவணப் பொய்கை.

சிவகிரி மதுரையிலிருந்து குற்றாலம் வழித்தடத்தில் 108 கிமீ தொலைவில் உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோயில் 1 கி.மீ. அருகிலுள்ள ரயில் நிலையம் ராஜபாளையத்திலும், அருகிலுள்ள விமான நிலையம் மதுரை மற்றும் திருவனந்தபுரத்திலும் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்துவிட்டு, தெய்வானையை மணந்து கொள்ள திருப்பரங்குன்றம் திரும்பினார். அப்போது முருகனின் தரிசனம் காண விரும்பிய அகத்தியர் இத்தலத்திலுள்ள குன்றில் தவம் செய்து கொண்டிருந்தார். இவ்வழியே வந்த முருகன், குன்றின் மீது அகத்தியருக்கு காட்சி கொடுத்தார். அவரது வேண்டுதல்படி இங்கேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சூரபத்மனை போரிட்டு அழித்த முருகன் இங்கு பால வடிவில் காட்சி தருவதால், “பாலசுப்பிரமணியர்’ என்று அழைக்கப்படுகிறார்.

நம்பிக்கைகள்:

கிரக தோஷம், புத்திரதோஷம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்ள நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

முருகன் பாதத்தில் நவக்கிரகம்: இக்கோயிலில் முருகன், தனது ஜடாமுடியையே கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது பாதத்தில் நவக்கிரகங்களின் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளது. கிரக தோஷம் நீக்குபவராக இவர் அருளுவதால், இவ்வாறு வைத்துள்ளனர். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது அரிது. தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் முருகனை வழிபட தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. திருச்செந்தூர் முறையிலேயே, இங்கு சுவாமிக்கு பூஜை செய்யப்படுகிறது.

பொதுவாக கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடக்கும். சில தலங்களில் திருக்கல்யாணத்துடன் சேர்த்து 7 நாட்களாக நடத்துவர். ஆனால் இக்கோயிலில் இவ்விழா 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் ஆறாம் நாளில் முருகன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்வது விசேஷம். மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 11ம் நாளன்று முருகனுக்கு தங்க கிரீடம் அணிவித்து, கையில் செங்கோல் கொடுத்து “மகுடாபிஷேகம்’ செய்கின்றனர். அதன்பின்பு இவர் ராஜ அலங்காரத்தில் “பட்டினப்பிரவேசம்’ என்னும் வீதியுலா செல்கிறார். இந்த திருவிழா இங்கு பிரசித்தி பெற்றது.

முருகன் வடிவில் சம்பந்தர்: குழந்தையாக இருந்தபோதே, அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தி அவளது அருள் பெற்றவர் திருஞானசம்பந்தர். இவரை முருகன் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் சொல்வர். இத்தலத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் சம்பந்தருக்கு, அம்பாள் ஞானப்பால் கொடுத்த வைபவம் நடக்கிறது. அப்போது முருகனையே, சம்பந்தராக பாவித்து பால் கொடுக்கின்றனர். விழாவின் ஏழாம் நாளன்று இரவில் நடக்கும் முதல் கால பூஜையில் முருகன் சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து சிவன் அம்சத்துடனும் (சிவப்பு சாத்தி), இரண்டாம் காலத்தில் வெண்ணிற வஸ்திரம் அணிந்து பிரம்மா அம்சத்துடனும் (வெள்ளை சாத்தி), மறுநாள் அதிகாலை மூன்றாம் கால பூஜையில் பச்சை வஸ்திரம் அணிந்து திருமால் அம்சத்திலும் (பச்சை சாத்தி) காட்சி தருவது விசேஷம். பங்குனி உத்திரத்தன்று சுவாமி தீர்த்த நீராடச்செல்கிறார்.

சோமாஸ்கந்த தலம்: சுற்றிலும் தண்ணீர், மலைகள் சூழ அமைந்த அழகிய தலம் இது. கோயில் அமைந்துள்ள குன்று “சக்தி மலை’ எனப்படுகிறது. இதற்கு இடப்புறத்தில் “சிவன் மலை’ உள்ளது. அதாவது சிவன், அம்பாளுக்கு நடுவே முருகன் “சோமாஸ்கந்த’ வடிவில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். முருகன் சன்னதிக்கு வலப்புறம் சுந்தரேஸ்வரர், இடப்புறம் மீனாட்சியம்மனுக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சண்முகர் பங்குனி பிரம்மோற்ஸவத்தில் ஏழாம் நாள், கந்த சஷ்டியின்போது திருக்கல்யாணம் மற்றும் இவ்விழாவின் 11ம் நாள் ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே கோயிலில் இருந்து வெளியேறி தரிசனம் தருகிறார். மற்ற நாட்களில் இவரை கோயிலுக்குள் மட்டுமே தரிசிக்க முடியும்.

திருவிழாக்கள்:

பங்குனியில் பிரம்மோற்ஸவம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசிமகம்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிவகிரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ராஜபாளையம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை மற்றும் திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top