Friday Dec 27, 2024

சிறப்புமிகு இராமாயண சிற்றுருவச்சிற்பங்கள்

ஆலயம்: கோதண்டராம ஸ்வாமி கோயில், திருப்பதி நகரம், ஆந்திரப் பிரதேச மாநிலம்.

காலம்: இக்கோயிலின் ஆரம்பகாலக் கட்டுமானம் 10-11 ஆம் நூற்றாண்டு சோழர்காலத்தைச் சேர்ந்ததாகக்கருதப்படுகிறது. இன்று நாம் காணும் வடிவில் 1480ல் நரசிம்ம முதலியார் என்பவரால், விஜயநகர கட்டடக் கலையம்சத்தில் கட்டப்பட்டது.

திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் ஆலயம், பழம்பெருமை மிக்கது. பேரழகுத் தோற்றத்தில் கோதண்டராமர், வலப்புறம் சீதாதேவி மற்றும் இடதுபுறத்தில் லட்சுமணன் ஆகியோருடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இவ்வாலயத்தின் துவக்கக்கட்டுமானம் 10-11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தில் எழுப்பப்பட்டதாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுச் சான்றுகளின்படி, தற்போதைய வடிவில், நரசிம்ம முதலியார் என்பவரால் பொ.ஆ 1480-ல் விஜயநகரக் கட்டடக் கலையம்சத்தில் கட்டப்பட்டது. விஜய நகர வம்சத்தின் அரச சின்னங்கள் வெளிப்புற மண்டபங்களின் சுவர்களில் காணப்படுகின்றன. உயரமான சுற்றுச்சுவர்களால் சூழப்பட்டிருக்கும் இக்கோயிலின் ஒரு பகுதி சுவரில், ராமரின் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் ராமாயணப் புடைப்புச் சிற்பங்கள் நிறைந்துள்ளன.

பல சிற்பங்கள் கால மாற்றத்தின் காரணமாக சிதைவுற்று பொலிவு இழந்திருந்தாலும், அவற்றின் கருப்பொருள் வெளிப்படும் காட்சியமைப்பு பெரிதும் ஈர்க்கிறது. விஸ்வாமித்திர முனிவருடன் ராமரும் லட்சுமணனும் நிற்பது, ராம சகோதரர்களின் திருமணக்காட்சி, ராவணன் சீதையைக் கடத்துவது, பறவைகளின் அரசன் ஜடாயு ராவணனைத் தடுத்தல், ராமரின் அம்பு ஏழு மரங்களைத் துளைத்தல், வாலி சுக்ரீவன் சண்டை, ராமர் வாலியைக் கொல்ல முயற்சித்தல், தனது நீண்ட வாலினால் ஆன ஆசனத்தில் ராவணன் முன் அனுமன் அமர்ந்திருத்தல், சீதை அனுமனிடம் கணையாழி அளித்தல், லங்கா தகனம், வானரங்கள் இலங்கையை அடைய பாலம் கட்டுதல், ஊர்வலக்காட்சி, ராமரையும் சீதையையும் வணங்கும் அனுமன் ஆகிய சிற்றுருவச் சிற்பங்கள் வெகுநேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

References:

https://www.dinakaran.com/sculpting-and-excellence-2/

For Temple details

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top