Friday Nov 22, 2024

சிதம்பரத்தின் காவல் தெய்வம் (தில்லைக்காளி)

அகிலத்தை ஆட்சி செய்பவள் அம்பிகை. இவள் அருட்சக்தியாக விளங்கும்போது பார்வதியாகவும், புருஷசக்தியாக விளங்கும் போது திருமாலாகவும், கோபசக்தியாக விளங்கும்போது காளியாகவும், போர்சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் திருக்கோலங் கொண்டு அருளுகிறாள். இதில் காளி வடிவம் கொடியோரை வேரறுத்து நல்லோரை காப்பதற்கான வடிவமாகும். உக்கிர சிவனான காளனின் கனல் கண்களிலிருந்து தோன்றியவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘காளி’ என்ற பெயர் ஏற்பட்டது.

தில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரத்தின் புறநகர்ப்பகுதியில் இந்த கோயில் உள்ளது. தெய்வமாகிய காளி தேவியின் சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு தேவி இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. ‘’சிவம்’ (சிவன்) அல்லது சக்தி (பார்வதி) யார் மேலானவர் என்று ஒரு வாதம். இதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் பிற தெய்வங்களின் முன் சிதம்பரத்தில் ஒரு நடன நிகழ்ச்சி நடத்தினார். அவர்கள் நடனம் ஆடுகையில், சிவன் தோற்கடிக்கப்பட விருந்தார். ஆனால் சிவன் ருத்துர தாண்டவம் ஆடினார். அதாவது அவரது தலைக்கு மேலே ஒரு கால் உயர்த்தினார். இந்த “ருத்துரதாண்டவம்” நடனத்தில் ஒன்றாகும். பெண்களின் தாழ்மையும், கூச்சமும் காரணமாக பெண்கள் இந்த நடனம் ஆட முடியாது. பார்வதிக்கு இந்த தோரணையில் சமமாக நன்றாக நாட்டியம் ஆட முடியவில்லை மற்றும் அவரது தோல்வியை ஒப்புக்கொண்டார். அவளது அகந்தையைக் கட்டுப்படுத்தவும் சிவம் மற்றும் சக்தி இருவருமே நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவா்கள் என ஒரு பாடம் கற்பிக்கவும் நகரத்தின் எல்லைகளுக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. ‘தில்லை காளி’ கோபத்தின் ஒரு தெய்வம். இந்த கோபம் பிரம்மாவின் வேதம் கற்பிப்பதன் மூலமும் காளியின் புகழ் பாடர்களாலும் சமாதானப்படுத்தப்பட்டது. பிரம்மா ‘காளி’ தவம் இருந்த காரணத்தால் காளி சாந்தம் ஆனார். எனவே, இந்த கோவிலில் அம்மன் தெய்வம் நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறது.

சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடி காளியின் கோபத்தை அடக்கி தில்லையில் அமரச் செய்தார்.

சாந்தம் அடைந்த காளி, தில்லைவனத்தை அடைந்து ஈசனிடம் ஐக்கியமடைய வேண்டிய தருணத்தை எதிர்பார்த்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள மூலநாதரை பூசித்து தவம் மேற்கொண்டாள். காளியின் அம்சம் முடிவுறும் வேளை நெருங்கி சாபவிமோசனம் பெறும் நிலையில் இருந்தமையால் ‘காளி உரு இனி இல்லை, காளி உருவுக்கு இதுவே எல்லை’ என்றாகி ‘எல்லைக்காளி’ என அழைக்கப்பட்டாள். எல்லைக்காளியாக அவள் தில்லையில் எழுந்தருளியமையால் தில்லைக்காளி என்றும் பெயர் பெற்றாள்.

இந்த ஆலயத்தில் உள்ள காளிசிலை விசுவாமித்திர மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தனது யாகத்திற்கு தடையாய் இருந்த தாடகை என்னும் அரக்கியை கொன்ற காரணத்தினால் ராமர், லட்சுமணர்களுக்கு ஏற்பட்டது. அவர்களின் தோஷத்தை போக்க யாகம் செய்ய விரும்பிய விசுவாமித்திரர், தில்லைவனக்காடாக இருந்த இப்பகுதிக்கு ராமர், லட்சுமணர்களுடன் வந்தார். பின்னர் இங்கு காளிதேவியை பிரதிஷ்டை செய்து யாகத்தை நடத்தியதாக வரலாறு சொல்கிறது.

இரணியனை வதம் செய்த நரசிம்மமூர்த்திக்கு, அதன் பின்னரும் கோபம் குறையவில்லை. அவர் இந்த உலகத்தையே விழுங்க நினைத்தார். இதைக் கண்ட சிவபெருமான் சரபமூர்த்தியாக வடிவம் கொண்டு திருமாலை கட்டுப்படுத்த முயன்றார். அதுசமயம் அவர் தனக்கு கூடுதல் சக்தி வேண்டி வடக்கில் அமர்ந்திருந்த காளியை துணைக்கு அழைத்து, நரசிம்மரை அடக்கியருளினார். இதனால் தில்லைக்காளிக்கு ‘உத்தர பிரத்யங்காரகாளி’ (வடபத்ரகாளி) என்ற பெயரும் ஏற்பட்டது.

ஆலய அமைப்பு:

மேற்கு நோக்கிய திருக்கோவிலுக்கு கம்பீரமான ராஜகோபுரம் அழகு சேர்க்கிறது. கோபுரத்திற்கு முன்னால் சிவப்பிரியை தீர்த்தம் உள்ளது. இது இவ்வாலயத்திற்கான தீர்த்தமாகவும், நடராஜபெருமானின் பத்து தீர்த்தங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. கோபுரத்திற்கு உள்ளே மகாமண்டபமும், அதன் தென் புறத்தில் பிரசன்ன விநாயகர், வடபுறத்தில் வள்ளி-தெய்வானை சமேத கார்த்திகேயன் சன்னிதிகள் இருக்கின்றன.

மகாமண்டபத்தைத் தாண்டி பிரகார வாசலில் துர்கா, ஜெயதுர்கா என்னும் துவார சக்திகள் உள்ளனர். அவர்களைக் கடந்து உள்ளேச் செல்ல பிரம்மசாமுண்டீஸ்வரி எனப்படும் தில்லையம்மன் நான்கு முகங்களும் நான்கு திருக்கரங்களும் கொண்டு சாந்தசொரூபியாகக் காட்சியளிக்கின்றாள். வலது மேல்கரத்தில் ருத்ராட்ச மாலையும், கீழ்கரத்தில் கமலகிண்ணியும், இடது மேல்கரத்தில் சூலமும், கீழ் கரத்தில் அமலோற்பவமும் தாங்கி அமர்ந்தகோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த அன்னை ‘நான்முகி’ என்றும் குறிப்பிடப்படுகிறாள்.

அர்த்தமண்டபத்தில் தாரகாசுரனை வதம் செய்து, சினம் தணிந்து, ஈசனை நாடும் நிஷ்டை கோலத்தில் தில்லைக்காளி அருள்பாலிக்கிறாள். இவளது திருவுருவம் வெள்ளை வஸ்திரம் சூடப்பெற்று குங்குமகாப்பு செய்து கண்களை மட்டுமே காணும் வண்ணம் உக்கிரகோலத்தில் அலங்கரிக்கப்படுகிறது. கருணையே வடிவாக கண்களால் நம்மை அரவணைக்கும் அன்னையை கரங்குவித்து கண்மூடி வணங்குவோருக்கு அவள் அருள்பாலிக்கிறாள்.

தில்லைகாளியின் சன்னிதிக்கு அருகில், அவளது உற்சவமூர்த்தி சன்னிதி மற்றும் அகோரவீரபத்திரர் சன்னிதி காணப்படுகின்றன. வடக்கு பிரகாரத்தில் துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர் அருள்கின்றனர். கருவறைச்சுற்றில் நான்கு முகத்துடன் கையில் ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணி கொண்டு வடக்கு நோக்கி பிரம்மசொரூபிணியாகவும், ஒரே முகத்துடன் கரத்தில் சங்கு-சக்கரம் தாங்கி கிழக்கு நோக்கி நாகவைஷ்ணவ ரூபிணியாகவும், மான்-மழுவேந்தி தெற்கு நோக்கி தட்சணசொரூபிணியாகவும் அருள்பாலிக்கிறாள். இந்த மூன்று திருமேனிகளும் படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்தும் நானே என்பதை உணர்த்துகின்றன.

தெற்கு பிரகாரத்தில் விநாயகப்பெருமான் ஏழு திருக்கரங்களுடன் கூத்தாடும் கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு அருகாமையில் கலைமகளை நினைவூட்டும் விதமாக நின்ற நிலையில் வீணைவாசிக்கும் அபிநயத்துடன் சர்வவித்யாம்பிகை அருள்பாலிக்கிறாள்.

சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் சிவன், ஆனந்த தாண்டவம் மற்றும் நிருத்தத் தாண்டவம் ஆடிய திருத்தலம் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு இணையாக சக்தியும் நடனமாடிய இடம் என்பதை இவ்வாலயத்தை தரிசிப்பவர்களால் மட்டுமே அறியமுடியும்.

கல்வெட்டுச் செய்தி:

இக்கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய படைத்தலைவனும், பல்லவகுல சிற்றரசனுமாகிய கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1229-1278) எழுப்பியதாக கூறப்படுகிறது. தன் ஆட்சியை நிறுவுவதில் ஏற்பட்ட இடையூறுகளை களைந்து வெற்றியருளவேண்டும் என்று காளிதேவியை கோப்பெருஞ்சிங்கன் வேண்டினான். அதை அன்னை நிறைவேற்றிக்கொடுத்ததன் அடிப்படையில் தில்லை காளிக்கும், பிரம்மசாமுண்டீஸ்வரிக்கும் ஆலயம் எழுப்பினான் என்கிறது கல்வெட்டுச் செய்தி ஒன்று.

ஓம் சக்தி ?

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top