சாமியம் சிவமயநாதர் சிவன்கோயில்
முகவரி
சாமியம் சிவமயநாதர் சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 108.
இறைவன்
இறைவன்: சிவமயநாதர் இறைவி : பெரியநாயகி
அறிமுகம்
சாமியம் சிவன்கோயில் கொள்ளிடம் – சீர்காழி சாலையில் உள்ளது. ஆனைக்காரன்சத்திரம், கொள்ளிடம் பாலத்தில் இருந்து சரியாக இரண்டு கிமி வந்தால் வலதுபுறம் ஒரு கதரியா மசூதி ஒன்றுள்ளது அதனை ஒட்டிய சிறிய சாலையில் அரைகிமி தூரம் மேற்கு நோக்கி சென்று இடதுபுறம் திரும்பினால் சாமியம் எனும் சிறிய கிராம பகுதியை அடையலாம். கோபாலசமுத்திரம் என்ற ஊராட்சியில் சாமியம், குமிலங்காடு, ஆனந்தகூத்தன், கடுக்காமரம், குத்தவைக்கரை, மேலவல்லம் சரஸ்வதிவிளாகம் எனும் கிராமங்கள் உளளன. இவ்வூர் பல வரலாற்று தகவல்கள் உள்ளடக்கி உள்ளது. முதலில் சாமியம் என்றால் என்ன என பார்ப்போம். இரு + அகசு + இயம் = இரகசியம், இலக்கு+இயம்=இலக்கியம்,, காப்பு+இயம்=காப்பியம் வார்த்தை+இயம்= வாத்தியம் அதைபோல் சாம(வேதம்)+இயம்=சாமியம்.
புராண முக்கியத்துவம்
இறைவன் சிவமயநாதர் பெரிய ஆவுடையார் கொண்டு கிழக்கு நோக்கி கம்பீரதோற்றம் கொண்டுள்ளார். இறைவி பெரியநாயகி தென்முகம் கொண்டு சிறிய மாடம் ஒன்றில் சன்னதி கொண்டுள்ளார். இதன் செவிவழி கதை ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள்- 13-14ம் நூற்றாண்டில் முஸ்லிம் படையெடுப்பில் தில்லை நடராஜரை தெற்கு நோக்கி ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு சென்றபோது இங்கு சில காலம் வைக்கப்பட்டு பின்னர் தென் தமிழகம் கொண்டு செல்லப்பட்டதாம். குமிழ், கடுக்காய், வாழை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் குமிழ்காடு, கடுக்காமரம், வல்லம் என பெயர்பெற்றுள்ளன. இப்பகுதியில் நடராஜர் வைக்கப்பட்ட இடம் கூத்தன் வைத்த கரை = குத்தவக்கரை என்றும் ஆனந்த கூத்தன் எனவும், சாம(வேதம்) +இயம்(ஒலி) சாமவேதம் இசைக்கப்பட்டதால் சாமியம் எனப்பட்டது. இந்த சாமியத்தில் இருந்த பழமையான சிவாலயத்தில் தான் நடராஜர் வைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அக்கோயில் இன்று இல்லை, முற்றிலும் சிதிலமடைந்து விட்டது. பழமையான கோயிலின் மூல லிங்கம், அம்பிகை, தென்முகன் லிங்கோத்பவர், பிரம்மன் முருகன் மட்டும் இன்றும் உள்ளன. சாமியம் இரண்டு தெருக்களை கொண்ட ஊர் தான், ஒரு குளக்கரையில் பெரிய ஆலமரங்கள் கொண்ட இடத்தில் முனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த முனீஸ்வரர் கோயிலின் பின் புறம் உள்ள பகுதியில் தான் இந்த கோயில் இருந்துள்ளது, தற்போது பெரிய மண் மேடாக உள்ளது. மீண்டும் கோயில் புத்துயிர் பெற தொடங்கி உள்ளது லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டு கருவறை கட்ட கான்கிரீட் தூண்கள் மட்டும் போடப்பட்டு நான்கு புறமும் ஆளுயர சுவர்கள் எழுப்பப்பட்டு உள்ளளன. அதற்க்கு மேல் கீற்று கொட்டகைமட்டும் போடப்பட்டுள்ளது. முகப்பில் கல்நார் ஓடுகள் கொண்டு முகப்பு பகுதி உள்ளது. இறைவன் சிவமயநாதர் பெரிய ஆவுடையார் கொண்டு கிழக்கு நோக்கி கம்பீரதோற்றம் கொண்டுள்ளார். இறைவி பெரியநாயகி தென்முகம் கொண்டு சிறிய மாடம் ஒன்றில் சன்னதி கொண்டுள்ளார். இறைவனை சுற்றி வரும்போது தென்முகன் உள்ளார் அவரின் முன்னம் ஒரு சோழமன்னன் கைகூப்பியபடி உள்ளார், அவர் யாரென அறியமுடியவில்லை. இறைவனின் பின் புறம் லிங்கோத்பவர், அருகில் சுப்பிரமணியர் என்றே நினைக்கிறேன். வடபுறம் பிரம்மன் உள்ளார். சண்டேசர் இறைவன் சன்னதி அருகிலேயே உள்ளார். தென்மேற்கில் விநாயகர் சன்னதி ஒன்று புதிதாய் கட்டப்பட்டுள்ளது. இறைவன் ஆலயத்தின் வடக்கில் இருபது படிகள் உயரம் கொண்ட மலைக்கோயில் சுப்பிரமணியர் உள்ளார். இது புதிய கட்டுமானம். இக்கோயிலின் எதிரில் சிறிய மாடம் ஒன்றில் சூரியன் உள்ளார். கோயில் எடுத்துக்கட்டப்பட்டு இன்னும் சரியாக முடிக்கப்பெறாமல் உள்ளது, எல்லா சன்னதிகளும் அரைகுறையாகவே உள்ளன. அன்றாட பூஜை சிறுவயது சிவனடியார் ஒருவர் நீறு பூசிய மேனியராக இருசுற்று உருத்திராக்க மாலையணிந்து ஆத்மார்த்தமாக இறைவனுக்கு திருமஞ்சனம் செய்ததை காணமுடிந்தது. போற்றிதிருஅகவலையும் முழுமையாக பாடிமுடித்தார். விரைவில் திருப்பணிகள் முடிவுற வேண்டுவோம். ஐம்புலனுக்கும் எட்டாமல் பொறிவாயில் ஐந்தும் அவித்து ஆளும் இறைவனை காண சாமியம் வாருங்கள். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி