Saturday Oct 05, 2024

சாத்தனூர் காசி விஸ்வநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

சாத்தனூர் காசி விஸ்வநாதர் திருக்கோயில்,

சாத்தனூர், திருவிடைமருதூர் தாலுக்கா,

தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு- 612 101

மொபைல்: +91 96984 07067

இறைவன்:

காசி விஸ்வநாதர்

இறைவி:

விசாலாக்ஷி

அறிமுகம்:

 காசி விஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் தாலுகாவில் ஆடுதுறை நகருக்கு அருகில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் காசி விஸ்வநாதர் என்றும் அன்னை விசாலாக்ஷி என்றும் அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற 18 தமிழ் சித்தர்களில் ஒருவரும் திருமந்திரத்தை எழுதியவருமான சித்தர் திருமூலரின் அவதார ஸ்தலமாகவும் சாத்தனூர் கருதப்படுகிறது. இக்கோயில் வீர சோழன் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

திருமூலர் அவதரித்த சாத்தனூர்: திருக்கயிலாயத்தில் இருந்து யாத்திரையாக பல தலங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்த சிவனடியார் ஒருவர், காவிரிக் கரையோரம் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்தார். அங்கே, மேயச்சலுக்கு வந்த பசுக்கள், ஓரிடத்தில் பெருங் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. அருகில் வந்து பார்த்தால் சிவனடியாருக்கு அதிர்ச்சி… எல்லாப் பசுக்களின் கண்களிலிருந்து கரகரவென வழிந்துக்கொண்டிருந்தது நீர்!இன்னும் அருகே வந்த சிவனடியார், பசுக்களின் கூட்டத்துக்கு நடுவே எட்டிப் பார்த்தார்; அதிர்ந்து போனார். அங்கே, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தவன், ஏதோ விஷ ஜந்து தீண்டி இறந்து போயிருந்தான். ஐந்தறிவு உயிர்கள், வாயில்லா ஜீவன்கள் இந்தப் பசுக்கள். இத்தனை நாளும் தங்களைத் தொட்டுத் தடவிக் குளிப்பாட்டியவன், தங்கள் பசியறிந்து உணவு கொடுத்தவன், காடு – மேடுகளைக் கடந்து கவனமாகவும் கரிசனத்துடனும் மேய்ச்சலுக்கு ஓட்டி வந்தவன், இருள் கவியத் துவங்கியதும் ஜாக்கிரதையாக, பத்திரமாக இப்பிடத்துக்கு அழைத்துச் சென்றவன் இறந்துக்கிடக்கிறானே…! என அந்தப் பசுக்கள் கலங்குவதை உணர்ந்து சிலிர்த்தார் சிவனடியார்.

நெற்றியில் விபூதி பூசியிருக்கிறான்; கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறான், நம்மைப் போலவே இவனும் சிவபக்தியில் திளைத்தவன்போல.. என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பசுக்கள் இறந்துகிடந்த தங்கள் மேய்ப்பனையும் வந்திருக்கும் சிவனடியாரையும் மாறி மாறிப் பார்த்தன. இவனது ஆத்மா சாந்தியடையட்டும். நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் என்று கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்து அந்தச் சிவனடியார் உரக்கச் சொன்னதும், மாடுகளின் உடலில் மெல்லிய அசைவு தெரிந்தது. அதனைக் கவனித்த சிவனடியார், இதோ… இறந்து கிடப்பவன் கூட அடிக்கடி நமசிவாயம், நமசிவாயம் என்ற சிவ நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பான்போல! என்று யோசிக்கும்போதே, இருள் கவியத் துவங்கியது. மாடுகள், அடிவயற்றிலிருந்து குரல் எழுப்பின. அந்தக் குரலில் ஒருவித சோகமும் பயமும் தெரிந்தது. அப்போது, அந்தச் சிவனடியாருக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கேயுள்ள மறைவான இடத்துக்குச் சென்றார்; புல்தரையில் அப்படியே படுத்துக்கொண்டார். கண்கள் மூடினார்; உயிரின் மையப் புள்ளியை உற்றுக் கவனித்தார்; இன்னும் கூர்ந்து கவனிக்க, அது அசைந்தது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நகர்ந்தது; சட்டென்று உடலிலிருந்து நழுவி வெளியேறி, மேய்ப்பனின் உடலைத் தேடிச் சென்று, அவனது உடலுக்குள் புகுந்தது.

ஆம்… சிவனடியார் கூடு விட்டுக் கூடு பாய்ந்துவிட்டார். மேய்ப்பவனின் உடல் மெள்ள அசைந்தது; கை, காலகள், உணர்வு பெற்று துடித்தன; கண் திறந்தான். சட்டென்று எழுந்தான் தென்னாடுடைய சிவனே போற்றி ! திருச்சிற்றம்பலம் என்றும் வானம் பார்த்துக் கை கூப்பினான். மாடுகளை ஒன்று திரட்டி ஓட்டிகொண்டு, ஊருக்குள் நுழைந்தான். அதனதன் இருப்பிடங்களில் பத்திரமாகச் சேர்த்தான். இன்றைக்கு இவ்வளவு நேரமாகியும், அவரைக் காணோமே! என்று மேய்ப்பவனின் மனைவி துடித்துப் போனாள் வீட்டுக்கும் வாசலுக்குமாக ஓடி ஓடி, கை பிசைந்து தவித்தாள். இதுவரை மூலன் இப்படி வராம இருந்தது இல்லியே ! என் அவனுடைய தந்தையார் புலம்பியபடி இருந்தார். அப்போது, உள்ளே நுழைந்தான் மூலன். அவனைக் கண்டதும் பரவசமாக ஓடிவந்து மூச்சு வாங்க நின்றாள் அவன் மனைவி உங்களைக் காணாம எப்படித் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா… என்றபடி அவன் கையைப் பற்றினாள். சட்டென்று அவளது கையை உதறி உன் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லி, முழு விவரத்தையும் தெரிவித்தார் மூலன் உருவில் இருந்த சிவனடியார். அதைக்கேட்டு, அவள் மயக்கமுற்று விழுந்தாள்; தந்தை நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்; ஊர்மக்கள் திரண்டு வந்து புலம்பினர். பின்பு அந்தச் சிவனடியார், தன் உடலை விட்டுவிட்டு வந்த இடத்துக்குச் சென்றார்; அதிர்ந்தார். அங்கே அவரது உடலைக் காணோம். இதென்ன கொடுமை ! வேறொரு உடலில்தான் இனி நான் வாழவேண்டுமா ? என்று கலங்கினார். அப்போது, அங்கே அவருக்குத் திருக்காட்சி தந்தார் சிவனார். எல்லா உடலும் ஒன்றுதான்; எல்லா உயிரும் ஒருவருடையதுதான்! உனக்குள் இருப்பது மட்டுமல்ல… அவனுக்குள், இவனுக்குள் அந்தச் செடிகொடிகளுக்குள், மாடுகள், பூச்சிகள் எனச் சகல உயிர்களிடமும் நீ இருக்கிறாய், மூலனது பிறப்பின் ரகசியம் இதுதான் ! பிறப்பு இறப்பு குறித்து உலகத்துக்கு விளக்கப்போகிறான் மூலன். எனவே உனது யாத்திரையைத் தொடர்வாயாக ! என்று அருளி மறைந்தார். இறைவன் திருக்காட்சி தந்த ஊர் சாத்தனூர் எனும் கிராமம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது இது. மூலனுக்குக் காட்சி தந்த சிவனார் காசிவிஸ்வநாதர் எனும் திருநாமத்துடன் இங்கே கோயில்கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் விசாலாட்சி. அந்த மூலன் வேறு யாருமல்ல… திருமந்திரங்களையும் சிவஞான நெறிகளையும் நமக்குப் போதித்து அருளிய திருமூலர்தான் அவர்!

நம்பிக்கைகள்:

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள திருமூலரை வணங்கி செல்கின்றனர்.

திருவிழாக்கள்:

மகா சிவராத்திரி மற்றும் மாதாந்திர பிரதோஷம் ஆகியவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

காலம்

1800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சாத்தனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top