Thursday Dec 26, 2024

கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்(வழி) அஞ்சல் வலிவலம் – 610 207. திருவாரூர் மாவட்டம். போன்: +91 -4365 – 204 144, 94424 59978

இறைவன்

இறைவன்: நடுதறியப்பர் இறைவி: வள்ளி நாயகி

அறிமுகம்

கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 120ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தினின் திருவாரூர் வட்டத்தில் கோயில் கண்ணாப்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் நடுதறியப்பர், தாயார் மாதுமைநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக கல்பனை மரமும், தீர்த்தமாக கங்காமிர்தம், சிவகங்கை , ஞானாமிர்த்தம் மற்றும் ஞானகுபம் ஆகியவை உள்ளன. இத்தலத்தில் வைணவனுக்கு மனைவியான சைவப்பெண் ஒருவர் சிவலிங்க வழிபாடு செய்வது கண்டு அதனைக் கிணற்றில் எறிந்த பின்னர் அந்த சைவ பக்தை, பசுவின் கன்றைக் கட்டப் பயன்படும் முளையை (ஆப்பு) சிவலிங்கமாக வழிபட, கணவன் சினம் கொண்டுகோடரியால் அந்த முளையை வெட்ட இறைவன் வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தலவரலாறு. வெட்டப்பட்ட தழும்பு சுவாமி மீது உள்ளது. இடும்பம் வழிபட்ட தலம்.

புராண முக்கியத்துவம்

(கன்று – பசுங்கன்று. ஆப்பு – அக்கன்றைக் கட்டும் சிறு முளை, நடுதறி – நடப்பட்ட தறி. தறி – முளை) ஒரு காலத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் கயிலாய மலையில் வீற்றிருந்தார். படைத்தல் முதலிய தொழில்கள் பிரமதேவனை முதலாகக் கொண்ட தேவர்களால் நடத்தப்பெற்றன. அப்பொழுது இறைவன் முன்பு சுதாவல்லி என்னம் வித்யாதரப் பெண் உமை உருவம் தாங்கி நடித்து இறைவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கினாள். இதைக்கண்ட உமாதேவியார் சுதாவல்லியை நோக்கி தன்னுருக்கொண்ட அவளிடத்தில் சினங்கொண்டு, “”நீ மண்ணுலகத்தில் பிறக்க’ எனச் சபித்தார். பின் நிகழ்ச்சி அறியாது நடித்த சுதாவல்லி கண்கலங்கினாள். என்ன செய்வேன் என பதறினாள். அப்பொழுது இறைவி, “”நீ மண்ணுலகம் அடைந்து சிவனை பூஜித்து எம்மை அடைவாய்’ எனக்கூறி அருள்பாலித்தாள். அப்படியே சுதாவல்லி தென்தமிழ் நாட்டை அடைந்து, தேவூருக்குத் தென்பால் திகழ்கின்ற இத்திருத்தலத்தில் பரம்பரை சைவ வேளாளர் மரபில் சிவஞானம் நிரம்பப் பெற்று பிறந்து கமலவல்லி என்னும் திருப்பெயருடன் வளர்ந்துவந்தாள். இடையறாது சிவபெருமானை சிந்தித்து வந்தாள். கமலவல்லி சைவ நெறியில் வளர்ந்து வந்தாள். பழவினைத் தொடர்பால் சிவபூசனை செய்துவந்தாள். திருமுண பருவத்தை அடைந்தாள். பெற்றோர் கோத்ரம் – குலம் பார்த்து தக்கவன் என்று கருதிய ஒருவனுக்கு கமலவல்லியை மணம் செய்வித்தனர். அந்த ஊரிலேயே தனி மாடம் மருங்கமைத்து பெற்றோர் இல்லறத்தை நடத்தச் செய்தனர். கமலவல்லி காரைக்கால் அம்மையாரைப் போன்று இவ்விறைவனுக்கு இனியளாய் நடந்துவந்தாள். எனினும் உயிரிறைவனாகிய சிவபெருமானிடத்து பேரன்பு பூண்டு, தக்க அறங்ளை செய்து வாழ்ந்துவந்தாள். சிவனை இடைவிடாது பூஜை செய்தாள். கணவன் கமலவல்லியின் உயர்வை உணராமல் அவள் சிவனை பூஜிப்பதில் வெறுப்புகொண்டு சிவலிங்கத்தை ஒரு கிணற்றில் எறிந்துவிட்டான். கமலவல்லி இதை உணர்ந்து, இல் இறைவனுக்கு மாறாக சிவனை பூஜிப்பதா அல்லது சிவபூஜையை விடுவதா என சிந்தித்தாள். கணவன் அறியாதவாறு சிவபூஜை செய்வது என்ற முடிவிற்கு வந்தாள். தன் வீட்டு பசுங்கன்று கட்டும் தறி ஒன்றை சிவலிங்கமாக பாவித்து பூஜை செய்துவந்தாள். இப்படி இவள் தன் கருத்துக்கு மாறாக நடக்கிறாள் என்பதை அறிந்த கணவன் சினம்கொண்டு, அக்கன்று கட்டும் தறியை கோடறி கொண்டு தாக்கினான். உதிரம் வெளிப்பட்டது. கமலவல்லியின் பக்தியை உலகவரும் அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் லிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார். கமலவல்லியும், கணவனும் சிவலோகம் அடைந்தனர். கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர் என வழங்கப்பெற்றது. இந்த லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுதறிநாதர் எனப்பட்டார். அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுதறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடறி வெட்டு உள்ளதைக் காணலாம். இடும்பன் என்னும் அசுரன் இத்தலத்தில் நடுதறி நாதரை வழிபட்டு அருள்பெற்றான்.

நம்பிக்கைகள்

கண் நோய் நீங்க ஞானகுப தீர்த்தத்தில் நீராடியும், குழந்தைப்பேறு, புகழ் பெற இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடுதறிநாதர் திருமுடியில் கோடரியின் வெட்டுக்காயம் இன்றும் உள்ளதைக் காணலாம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 184 வது தேவாரத்தலம் ஆகும். இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அருள்மிகு நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம். சிதம்பரம், திருக்காளத்தி, கீழ்வேளூர், நாகைக்காரோணம் முதலிய தலங்களில் மேம்பட்டு கன்றாப்பூர். இத்தலத்தை இருமுறை வழிபட்டால் உலகிலுள்ள எல்லா சிவத்தலங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இத்தலத்தின் வழியே நடந்துசென்றால் இத்தலத்தில் தங்கி வாழ்ந்த புண்ணியத்தைப் பெறலாம். இத்தலத்தில் தங்கி அறம் புரிவோர் நல்ல மனைவி – நல்ல மகள் எய்தப்பெற்று, எல்லா நலங்களையும் பெறுவர். கன்றாப்பூர் என்று ஒருமுறை சொன்னாலேயே பாவம் கெடும். நோய் நீங்கும். நல்வாழ்வு கிட்டும்.

திருவிழாக்கள்

5 கால பூஜை. வைகாசி விசாகத்தில் மூன்று நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது. இங்கு உற்சவராக எழுந்தருளியிருக்கும் மாரியம்மனுக்கு (சீதளாம்பிகை) ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் சிறப்பாக பெருவிழா நடைபெறுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆதமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top