Sunday Jun 30, 2024

கோடரங்குளம் சங்கரலிங்கசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில்,

கோடரங்குளம்,

திருநெல்வேலி மாவட்டம்.

போன்: +91- 4634 – 223 821, 93602 19237.

இறைவன்:

சங்கரலிங்கசுவாமி

இறைவி:

கோமதி அம்பாள்

அறிமுகம்:

சங்கரலிங்கசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே கோடரங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் ராகு/கேது வழிபாட்டிற்காகவும், மிகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. கொட்டாரக்குளம் சின்ன சங்கரன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த சிவபக்தர் உஞ்சவிருத்தி (தானம்) பெற்று வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் காகத்திற்கு சாதம் வைத்தபோது அவை சாதத்தை வனத்திற்குள் கொண்டு சென்றதை கண்டு பின்தொடர்ந்தார். காகம் ஓரிடத்தில் சாதம் வைத்து, மலர் தூவி வழிபட்டதைக் கண்டு தோண்டியபோது சுயம்பு லிங்கம் இருந்ததைக் கண்டார். அதற்கு பூஜை செய்து வழிபட்டார். ஒருசமயம் அவர் ஊருக்கு வராமல் போகவே, மக்கள் வனத்தினுள் சென்று பார்த்தனர். அங்கு அவர் சிவன் குடியிருப்பதாக கூறிவிட்டு லிங்கத்தில் ஐக்கியமானார். அதுவே சங்கரலிங்கம் ஆனது. பின் மக்கள் இவ்விடத்தில் கோயில் எழுப்பினர்.

ராகுகேது லிங்கம் இக்கோயிலில் சிவன், பாறை வடிவில் சுயம்பு லிங்கமாக, வடக்கு நோக்கி இருக்கிறார். இவரது மேனியின் முன்புறத்தில் ராகு, இடது புறத்தில் கேது ஆகிய இரு நாகங்கள் உள்ளன. இதனால் தான் விஷக்கடி தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் இத்தலத்தில் இறைவனுக்கு நாகம், தேள் முதலான உருவங்களை வாங்கி உண்டியலில் போடுவர். உப்பு, மிளகும் காணிக்கையாக்குவதுண்டு.

அன்னை உமையவள், பூலோகத்திற்கு தவமிருக்க வந்த போது, தேவர்கள் பசுக்களாக மாறி அவளைத் தரிசிக்க வந்தனர். அவள் பிரகாசமான முகமுடையவள். எனவே அன்னையை “கோமதி’ என்றனர். “கோ’ என்றால் “பசு’. “மதி’ என்றால், “நிலாபோன்ற முகமுடையவள்’. இவர் “ஆ’ ஆகிய பசுக்களை (தேவர்கள்) காத்தமையால் இவள் “ஆவுடையம்மாள்’ என்றும் அழைக்கப்படுகிறாள்.

நம்பிக்கைகள்:

ஆடித்தபசு விழாவில் கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங்கை செய்கிறார்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

 பெண் வீட்டுக்காரன் பெரியவனா, மாப்பிள்ளை வீட்டுக்காரன் உயர்ந்தவனா என்ற சண்டை நம் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் நடக்கும் பிரச்னை. இரண்டும் சமம் தான்; இதில் உயர்வு தாழ்வுக்கே இடமில்லை என இந்த பிரச்னைக்கு முதல் முற்றுப்புள்ளி வைத்தவள் அன்னை உமையவள் தான். தன் கணவரையும், அண்ணனையும் ஒருசேர காணும் எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது. சிவபெருமான் நாராயணருடன் இணைந்து, சங்கரநாராயணராக அவளுக்கு காட்சி தந்தார். இந்தக் காட்சி சாதாரணமாக கிடைத்து விடுமா? அதற்காக “தபஸ்’ (தவம்) செய்தாள். அதையே “ஆடித்தபசு’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

இந்த விழா திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசேஷம். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்திலும் ஒரு சங்கரன்கோவில் உள்ளது. இதை “தெற்கு சங்கரன்கோவில்’ என்பர். தாமிரபரணியும், மணிமுத்தாறும் கலக்குமிடத்திலுள்ள இந்த கோயிலும் தபசு விழாவுக்கு வெகு பிரசித்தம். இங்குள்ள சிவன், ராகு, கேது அம்சமாக இருப்பது சிறப்பம்சம்.

ஆடித்தபசு திருவிழாவின் போது இவள் தாமிரபரணி நதிக்கரையில் தபசு மண்டபத்தில் எழுந்தருளுகிறாள். முதலில் சிவன் சங்கரநாராயணராகவும், பின் சங்கரலிங்கமாகவும் காட்சி தருகிறார். அதன்பின் திருக்கல்யாணம் நடக்கிறது. சுவாமி, கோமதி அம்பாள் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் அருளுகின்றனர். சிவத்தலங்களில் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் அதிகாரநந்தி, இங்கு அம்பாள் சன்னதி முன்பு இருக்கிறது. சங்கரநாராயணர் தனி சன்னதியில் இருக்கிறார்.

திருவிழாக்கள்:

வைகாசியில் 11 நாள் பிரம்மோற்ஸவம், ஆடித்தபசு விழா. இக்கோயிலில் ஐக்கியமான ராமலிங்கருக்கும் சன்னதி உள்ளது. ஆடிமாத பரணி நட்சத்திரத்தில் இவருக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. சிவத்தலங்களில் சிவன் சன்னதி முன்பாக இருக்கும் அதிகாரநந்தி, இங்கு அம்பாள் சன்னதி முன்பு இருக்கிறது.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோடரங்குளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அம்பாசமுத்திரம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை, திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top