Thursday Nov 21, 2024

கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை – 609 203, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4365-22389

இறைவன்

இறைவன்: வீரட்டேஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை

அறிமுகம்

திருக்குறுக்கை – கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.எட்டு வீரட்டத்தலங்களுள் இறைவனார் மன்மதனை எரித்த தலமிது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 26வது சிவத்தலமாகும். இத்தலத்து இறைவன் வீரட்டேஸ்வரர், இறைவி ஞானாம்பிகை.

புராண முக்கியத்துவம்

சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர்.ஆனால் முருகனோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்று ஒதுங்க கடைசியில் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார்.ஆனால் கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது. உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க, உனது வேண்டுகோளுக்காக ஒருநாள் மட்டும் மன்மதனை உண்டுபண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார்.அதுபடி மன்மதன் உயிர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும் அத்துடன் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. இறைவன் யோகேஸ்வரர் என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார். இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக்கூடிய பீமரதசாந்தி கல்யாணம் ஆகியன இத்தலத்தில் முக்கியமானவை. யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும், காம குரோதங்கள் விலகும். இறைவனின் நெற்றிக்கண் மகரக் கொடியோனை சுட்டு எரித்தது(அனங்கன்) பின் வணங்கி மறுபிறவி எடுத்த தலம்.

திருவிழாக்கள்

மாசி மகம் – காமதகன விழா – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம் – இத்தலத்தில் சிறப்பாக நடைபெறும் திருவிழா -பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு – வீதியுலா. மார்கழி மாதம் – திருவாதிரை உற்சவம்- சுவாமி புறப்பாடு- இதுவும் சிறப்பான விழா ஆகும்.. நவராத்திரி மற்றும் மாதாந்திர பிரதோசம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கொருக்கை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top