கொடிமங்கலம் கோடீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
கொடிமங்கலம் கோடீஸ்வரர் சிவன்கோயில்,
கொடிமங்கலம், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612201.
இறைவன்:
கோடீஸ்வரர்
இறைவி:
மங்களாம்பிகை
அறிமுகம்:
கொரடாச்சேரி- கண்கொடுத்த வனிதம் வந்து மேல திருமதிக்குன்னம் சாலையில் நான்கு கிமீ தூரம் சென்றால் கொடிமங்கலம் கிராமத்தினை அடையலாம். சிறிய கிராமம் இங்கு சிவன் கோயில், பழமையான மாரியம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. ஊரின் வடபுறத்தில் தொடர்வண்டி பாதை செல்கிறது. இதனை ஒட்டி உள்ளது சிவன்கோயில். கோயில் கிழக்கு நோக்கி இருப்பினும் வழி மேற்கு புறம் உள்ளது. மேற்கில் ஒரு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இறைவன் கோடீஸ்வரர் கிழக்கு நோக்கியவர், நடுத்தர அளவிலான லிங்கமூர்த்தி, அம்பிகை மங்களாம்பிகை தெற்கு நோக்கி அருள்பாளிக்கிறார்.
இறைவன் பெயர் கோடீஸ்வரர் எனப்படுவதால் கோடீஸ்வரர் மங்கலம் என அழைக்கப்பட்டு இப்போது கோடிமங்கலம் எனப்படுகிறது. இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர். இறைவன் இறைவி இருவரது சன்னதிகளையும் இணைக்கிறது மண்டபம் ஒன்று. நந்தி அம்மண்டபத்தின் வெளியில் உள்ளார். பிரகாரத்தில் தென்மேற்கில் விநாயகர் சன்னதி உள்ளது, வடமேற்கில் தனித்த முருகன் சன்னதி உள்ளது வடகிழக்கில் பைரவர் தனி சன்னதி கொண்டுள்ளார். அருகில் நவகிரகங்கள் உள்ளன. கிழக்கு வாயிலின் அருகில் பெருத்த வன்னி மரம் உள்ளது. தென்புற வாயில் அருகில் இடும்பன் சிலை உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
கர்கமகரிஷியால் வணங்கப்பட்ட இறைவன் எனப்படுகிறார், குழந்தை பேறு இல்லாத பெண்கள் காலில் சீந்தில் கொடியினை வளையமாக கட்டிக்கொண்டு கார்த்திகை அல்லது சஷ்டி திதியில் விரதமிருந்து இங்குள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் சந்தன தீர்த்தத்தை பருகினால் அவர்களுக்கு குழந்தை பேறு நிச்சயம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கை. அவ்வாறே செய்து நலம் பெற்றோர் பலரும் இங்குள்ளனர். சீந்தில் கொடி அணைந்து வழிபடும் வழக்கம் இருப்பதால் இவ்வூரினை கொடி மங்கலம் என அழைக்கலாயினர்.







காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொடிமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி