Friday Dec 27, 2024

குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்

முகவரி

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை – 639 104. கரூர் மாவட்டம். போன்: +91- 4323 – 225 228

இறைவன்

இறைவர்: கடம்பவனேஸ்வரர், கடம்பவன நாதேஸ்வரர் இறைவி: பாலகுஜாம்பாள்

அறிமுகம்

கடம்பவனேசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65வது தேவாரத்தலமாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.

புராண முக்கியத்துவம்

தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

நம்பிக்கைகள்

பெண்கள் இங்கு வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு சிவன் துணையாக இருந்து காப்பார் என்பது நம்பிக்கை. பொதுவாக பெண்கள் தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

கருவறையில் சப்தகன்னிகள்: கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருக்கின்றனர். சிவன் சாபவிமோசனம் கொடுத்தபோது, சப்தகன்னியர்கள் மீண்டும் தூம்ரலோசனனை அழித்தால் தோஷம் பிடிக்குமே! என அஞ்சி, அசுரனை எதிர்க்க முன்வரவில்லை. எனவே, அசுரனை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டனர். சிவன் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, அசுரனையும் அழித்தார். இவர் இத்தலத்தில் சப்தகன்னிகளுக்கு பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம். இங்கு சுவாமிக்கு நேர்பின்புறத்தில் இருக்கும் சாமுண்டியை, துர்க்கையாக வழிபடுகின்றனர். எனவே, துர்க்கைக்கு சன்னதி இல்லை. பெண்கள் துர்க்கைக்குரிய வழிபாட்டை சிவன் சன்னதி முன்பாகவே செய்வது விசேஷம். ராகுகால வேளையில் இவளுக்கும், சிவனுக்கும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது. காலையில் வணங்கவேண்டிய சிவன்: இக்கோயிலில் சிவன் சுயம்புவாக, வாமதேவ முகமாக (வடக்கு திசையை நோக்கி) இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி இருக்கிறது. கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது. சப்தகன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் இவர் காவிரியில், அம்பாளுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள 7 சிவன்களும் எழுந்தருள்கின்றனர். அன்று ஒரே நாளில் 8 சிவன்களையும் தரிசிக்கலாம். இத்தலத்தில் ஐப்பசி முதல்கட்ட துலாஸ்நானம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. “”காலைக்கடம்பர், மதியம் சொக்கர் (ரத்தினகிரி), மாலை ஈங்கோய்நாதர் (ஈங்கோய்மலை)” என்ற வரிசையில் வழிபடுவது குறைவிலாத பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். அதன்படி, இவரை காலை வேளையில் வழிபட்டால் காசியில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்திற்கு “தெட்சிணகாசி’ என்றொரு பெயரும் உண்டு. அகத்தியர், கண்ணுவ முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர். அம்பாள் முற்றிலாமுலையம்மை தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறாள். இச்சன்னதிக்கு முன்புறம் “பரமநாதர்’ காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என நம்புகிறார்கள். முருகன் சிறப்பு: சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார். இவர் பிரகாரத்தில் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். “ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர்’ என்ற பொருளில் இவரைக்குறித்து அருணகிரியார் பதிகம் பாடியுள்ளார். இவரது சன்னதிக்கு நேர் எதிரே, சிவன் கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் வணங்கியபடி இருக்கின்றனர். இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் இரண்டு நடராஜர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை. இவரது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறார்.

திருவிழாக்கள்

மாசியில் 13 நாட்கள் பிரம்மோற்ஸவம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குளித்தலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

குளித்தலை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top