Tuesday Oct 08, 2024

குளத்துப்புழா ஐயப்பன் திருக்கோயில், கேரளா

முகவரி

குளத்துப்புழா ஐயப்பன் திருக்கோயில், செங்கோட்டை-திருவனந்தபுரம் சாலை, குளத்துப்புழா, கொல்லம் மாவட்டம், கேரளா

இறைவன்

இறைவன்: ஐயப்பன்

அறிமுகம்

குளத்துப்புழை ஐயப்பன் கோவில் (அ) குளத்துப்புழா ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இங்கு ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் பால சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது. இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள குளத்துப்புழா எனும் சிற்றூர், செங்கோட்டை-திருவனந்தபுரம் சாலையில் செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை – கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். நடுவில் கருவறையும் சுற்றி மரத்தாலான கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார். பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறையம்மன், பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

புராண முக்கியத்துவம்

கொட்டாரக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியாளர்கள் சிலருடன் ராமேஸ்வரத்திற்குப் புனிதப் பயணம் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். காட்டின் வழியாக வந்து கொண்டிருந்த அவர், வழியில் இருந்த கல்லடையாற்றின் கரையில் தங்கி ஓய்வெடுத்தார். அவருடன் வந்த பணியாளர்கள், அங்கே உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கினர். நிலத்தில் புதைந்திருந்த ஒரு கல்லைப் பார்த்த பணியாளர் ஒருவர், அந்தக் கல்லுடன் மேலும் இரு கற்களை வைத்து, அந்த இடத்தில் அடுப்பு மூட்டுவதென்று முடிவு செய்தார். பின்னர் அவர், அங்கே கிடைத்த இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு போய் நிலத்தில் புதைந்திருந்த கல்லின் அருகில் வைத்தார். அடுப்புக்காக வைத்திருந்த மூன்று கற்களில், நிலத்தில் புதைந்திருந்த கல் மட்டும் சிறிது உயரமாக இருந்தது. உடனே அந்தப் பணியாளர், நிலத்தில் புதைந்திருந்த கல்லை, அதைவிடப் பெரிதான ஒரு கல்லை எடுத்துக் கொண்டு வந்து உடைக்க முயன்றார். அப்போது, நிலத்தில் புதைந்திருந்த கல் உடையாமல், உடைக்கப் பயன்படுத்திய பெரிய கல் எட்டுத் துண்டுகளாக உடைந்து போனது. உடைந்து போன எட்டுத் துண்டுக் கற்களில் இருந்தும் ரத்தம் வழியத் தொடங்கியது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர், மற்ற பணியாளர்களை அழைத்து உடைந்த கற்களில் இருந்து ரத்தம் வழியும் செய்தியைச் சொன்னார். அவர்களும் அதனைக் கண்டு பயந்தனர். பின்னர் அவர்கள், தங்கள் உரிமையாளரான யாத்ரிகரிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தனர். அவர் உடைந்து கிடக்கும் கற்களிலிருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. ராமேஸ்வரத்திலிருந்து தான் கொண்டு வந்திருந்த புனித நீரை உடைந்த கற்களின் மீது தெளித்தார். உடனே கற்களிலிருந்து வழிந்த ரத்தம் நின்று போனது. அப்போது யாத்ரிகருக்கு, உடைந்து கிடப்பது சாதாரணமான கல் இல்லை என்பதும், அந்தக் கல் பரசுராமரால் நிறுவப்பட்ட தர்ம சாஸ்தா ஐயப்பன் உருவம் என்பதும் தெரிந்து மறைந்தது. அதனைத் தொடர்ந்து அவர், ஐயப்பனை நினைத்து வணங்கி, தனது பணியாளர்கள் தெரியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டினார். பின்னர் அவர், தனது பணியாளர்கள் செய்த தவறுக்குப் பரிகாரமாக, அந்த இடத்தில் பாலகன் உருவில் ஐயப்பனுக்குச் சிலையமைத்துக் கோவில் கட்ட முடிவு செய்தார். அங்கு நடந்ததைக் கேள்விப்பட்டக் கொட்டாரக்கரை மன்னர் அவ்விடத்திற்கு வந்து, பிராமணரின் கோவில் கட்டுமானப் பணிக்குத் தேவையான நிலத்தை வழங்கிப் பொருளுதவிகளையும் செய்தார் என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது. இக்கோவில் பந்தளம் மன்னரால் கட்டப்பட்டது என்றும், இவ்விடத்தை யாத்ரிகர் கண்டறிந்து சொன்னார் என்றும் மற்றொரு வரலாற்றுத் தகவலும் தெரிவிக்கப்படுகிறது

நம்பிக்கைகள்

இக்கோவிலில் விஜயதசமி நாளில் ‘வித்யாரம்பம்’ எனப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில், பள்ளியில் புதிதாகச் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பாலகனான சாஸ்தா நல்ல கல்வியைத் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இங்குள்ள யட்சி அம்மன் சன்னிதி முன்பாகத் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. கோவில் வளாகத்திலுள்ள நாகராஜரை வழிபடுபவர்களுக்கு, நாகதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்கின்றனர். கோவிலுக்கு அருகில் இருக்கும் கல்லடையாற்றில் மீன்களுக்குப் பொரி வாங்கிப் போட்டால், தீராத தோல் நோய்கள் எதுவாக இருப்பினும் நீங்கும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது.

சிறப்பு அம்சங்கள்

கேரளக் கட்டுமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் கருவறையில் ஐயப்பன் பாலகன் வடிவில் பால சாஸ்தாவாகக் காட்சி தருகிறார். இவரைக் குளத்துப்புழா பாலகன் என்றும் அழைக்கின்றனர். இக்கோவில் கருவறையில், பரசுராமர் நிறுவியதாகக் கருதப்படும் மூல சாஸ்தா சிலையின் உடைந்து போன எட்டு துண்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில் கருவறையின் நுழைவு வாசல் சிறுவர்கள் செல்லும் அளவிற்கான உயரத்தில் இருக்கிறது. கோவில் வளாகத்தில், நாகராஜர், யட்சி சன்னிதிகளும், சிவபெருமான், விஷ்ணு, கணபதி, பூதத்தான், மாம்பழத்துறை அம்மன் மற்றும் கருப்பசாமி சிலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.

திருவிழாக்கள்

இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வழிபாட்டின் போது, கருவறையில் வைக்கப்பட்டிருக்கும் மூலச் சிலையாகக் கருதப்படும் எட்டு கற்களும் ஒன்று சேர்க்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பின்னர், அந்த எட்டு கற்களும் வழக்கமான இடத்தில் வைக்கப்பட்டு விடுகின்றன.மலையாள நாட்காட்டியின்படி, மேஷம் (சித்திரை) மாதம் வரும் விசுப் பெருவிழா இக்கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குளத்துப்புழா

அருகிலுள்ள இரயில் நிலையம்

கொல்லம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top