Saturday Jun 29, 2024

குலசேகரபட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில், தூத்துக்குடி

முகவரி

குலசேகரபட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில், முத்தாரம்மன் திருக்கோவில் சாலை, குலசேகரபட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு 628203 தொலைபேசி: 04639 250 355

இறைவன்

இறைவன்: ஞானமூர்த்தி ஈஸ்வரர் இறைவி: முத்தாரம்மன்

அறிமுகம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினம் ஊரின் கடற்கரையில் அமைந்த 1000 ஆண்டுகள் பழமையான தலமாகும். திருச்செந்தூர் – கன்னியாகுமரி சாலையில் அமைந்த இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை வட்டார வழக்கில் தசரா என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தில் ஒரே பீடத்தில் வடக்கு திசை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக இருந்து அருள்பாலித்து வரு கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

அகத்தியரின் சாபத்தால் வரமுனி என்ற முனிவர், எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட ‘மகிஷ’ உருவத்தில் அழையும்படி ஆனது. அசுர குலத்தில் பிறந்த மகிஷன், கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும், பிரம்மதேவரிடமும் பல வரங்களை வரமாகப் பெற்றான். அந்த வரங்களின் காரணமாக அவன் தேவர் களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், பார்வதி தேவியை உதவி புரிய கோரினார். இதையடுத்து அன்னை தேவர்களுக்கும், முனிவர்களுக்கு அபயம் அளிக்க முன்வந்தாள். பின்னர் மகிஷா சுரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவமிருந்து, பத்தாம் நாளில் காளி வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தாள். குலசேகரப்பாண்டியன் என்னும் மன்னனே இந்த கோவிலை கட்டியுள்ளான். மேலும் இந்த ஊரில் உள்ள அறம் வளர்த்த நாயகி சமேத கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலையும் இந்த அரசனே கட்டி முடித்துள்ளான். அக்கசாலை விநாயகர் கோவில், விண்ணகரப் பெருமாள் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், வீரகாளி, பத்ரகாளி, கருங்காளி, முப்புடாதி, உச்சினி, மகாகாளி, அங்காளம்மன், ஈஸ்வரி அம்மன், வண்டி மறித்த அம்மன் என அஷ்ட காளி கோவில்களும் குலசையில் அமைந்துள்ளன. முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரரின் சுயம்பு விக்கிரகங்களை ஆரம்ப காலத்தில் வழிபட்டு வந்த பக்தர்கள், அம்மையப்பன் இருவரையும் பெரிய திருஉருவில் வழிபட விருப்பம் கொண்டனர். அப்போது கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய முத்தாரம்மன், ‘எங்கள் திருமேனியை கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி என்ற ஊரில் உள்ள சிற்பி சுப்பையா என்பவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என கூறி மறைந்தாள். அம்மனின் அருளால் சிலையை செதுக்கிய சிற்பியிடம் இருந்து அம்மையப்பனின் சிலையைப் பெற்று வந்து 1934-ம் ஆண்டு கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். பழைய சுயம்பு சிலைகள் தற்போது கருவறையின் அடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தல கருவறையின் எதிரில் நின்றாலே ஆன்மிக அதிர்வுகளை பக்தர்கள் உணர்வார்கள். இத்தல ஞானமூர்த்தீஸ்வரர் இடது காலை மடக்கிய நிலையில் இரண்டு திருக்கரங்களுடன், வலக்கரத்தில் செங்கோலும், இடக்கரத்தில் விபூதிக் கொப்பரையும் கொண்டு அருள்பாலிக்கிறார். முத்தாரம்மன் வலது காலை மடக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன், வலது மேல் கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் நாகபாசமும், கீழ் கரத்தில் விபூதி கொப்பரையும் கொண்டுள்ளாள்.

நம்பிக்கைகள்

முத்தாரம்மனுக்கு எலுமிச்சை பழ மாலையும், செவ்வரளி மாலையும் உகந்தவையாகும். ஆலய மகா மண்டபத்தில் கருப்பசாமி, பேச்சியம்மன், பைரவர் சன்னிதிகள் உள்ளன. பேய், பிசாசு, காத்து கருப்புகளை நம்மை அண்ட விடாது கருப்பசாமி காத்தருள்வார். மூன்று வயதாகியும் சரியாக பேச்சு வராத குழந்தைகளை இந்த தலத்திற்கு அழைத்து வந்து பேச்சியம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். இங்குள்ள பைரவரை அஷ்டமி நாட்களில் மாலை வேளையில் நெய் தீபம் ஏற்றி, வில்வ இலையால் அர்ச்சித்து, உளுந்துவடை மாலை சாற்றி வழிபட்டால் வறுமை அகலும். வளங்கள் பெருகும். கோவில் பிரகாரத்தை வலம் வரும் போது, விநாயகர், துர்க்கை, அர்த்த நாரீஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களையும் வழிபடலாம். தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் சக்தியாக முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். குறிப்பாக அம்மை நோய். உடலில் அம்மை நோய் முத்து முத்தாக இருந்தால், ஆமணக்கு விதை வாங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்து கின்றனர். பொடிப் பொடியாக இருந்தால் அரிசியும், தடிமனாக இருந்தால் பூசணிக்காயும் வாங்கி முத்தாரம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்கு உடனடி பலன் கிடைப்பதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். முத்து + ஆற்று + அம்மன், உடம்பில் உள்ள அம்மை முத்துக்களை ஆற்றும் அம்மன் முத்தாரம்மன். செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். ராகு தோஷம் அகல செவ்வாய்க் கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும். எலுமிச்சை பழத்தின் மேற்புறத்தில் துவாரமிட்டு, சாற்றை எடுத்து விட்டு, அதனுள் சிறிது நெய்விட்டு, திரியிட்டு எலுமிச்சை பழ தீபமேற்ற வேண்டும்.

திருவிழாக்கள்

முத்தாரம்மன் ஆலயத்தில் ‘தசரா திருவிழா’ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் 9 நாட்கள் அம்மன் தவம் செய்யும் நிகழ்வும், 10-ம் நாளான விஜயதசமி அன்று, மகிஷாசுரனை அன்னை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இந்த விழாவிற்காக பக்தர்கள் பலர் காப்பு கட்டி, பல்வேறு வேடங்கள் தரித்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.புரட்டாசி மாத அமாவாசை கழிந்த மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது ‘தசரா திருவிழா’. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். ஆடி மாதம் 3-ம் செவ்வாய் அன்று திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பில் சிறப்பு வழிபாடு உண்டு.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்செந்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்செந்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top