குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்)-609 117 கொண்டத்தூர் போஸ்ட், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 94422 58085
இறைவன்
இறைவன்: கண்ணாயிரமுடையார் இறைவி: முருகுவளர்க்கோதை நாயகி
அறிமுகம்
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 12 கி.மி. தெற்கே அமைந்துள்ளது. பாகசாலை எனுமிடத்திலிருந்து இடப்புறமாக மூன்று கி.மீ தொலைவிலுள்ளது. இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும். திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது. இத்தலத்தின் தலமரம் சரக்கொன்றை. திருமால் வாமன மூர்த்தியாக (குறுமாணி) வழிபட்ட தலம்.
புராண முக்கியத்துவம்
தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே அனுப்பிவிட்டு, அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். எனவே இந்திரன், முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்க சென்றான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய தானும் சம்மதித்தாள். இதற்குள் முனிவர் திரும்பி வர, இந்திரன் பூனை வடிவமெடுத்தான். அகலிகை பயந்து நின்றாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் முழுவதும், ஆயிரம் பெண்களுக்கான பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க,””ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்,”என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன் குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறி, இறைவன் ஏற்றுக்கொண்டார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் “கண்ணாயிரமுடையார்’ ஆனார்.
நம்பிக்கைகள்
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அர்த்த ஜாம பூஜையில் பால், பழம் நைவேத்யம் செய்து, அன்னதானம் போட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட வாமனமூர்த்தியாகிய குறுமாணி வழிபட்டதால் இத்தலம் “குறுமாணக்குடி’ எனப்படுகிறது.
திருவிழாக்கள்
கார்த்திகை சோமவாரத்தில் பிரம்மோற்சவ திருவிழா. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குறுமாணக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி