குடுமியான்மலை ஸ்ரீ சிகாநாதர் கோவில், புதுக்கோட்டை
முகவரி
குடுமியான்மலை ஸ்ரீ சிகாநாதர் கோவில், உருக்கம் பட்டி, குடுமியாமலை, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு 622104 +91 4322 221084, 98423 90416
இறைவன்
இறைவன்: சிகாநாதர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து (தமிழ்நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன. தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
உலகெங்கும் லிங்கவடிவில் அருள்பாலிக்கும் சிவபெருமான் குடுமியான்மலையிலும் எழுந்தருளினார். “குடுமியான்’ என்றால் “உயர்ந்தவன்’ என்றும், “குடுமி’ என்றால் “மலையுச்சி’ என்றும் பொருள்படும். உயர்ந்தமலையை ஒட்டி இவர் கோயில் கொண்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். இக்கோயிலில் பணிபுரிந்த அர்ச்சகர் ஒருவருக்கு காதலி ஒருத்தி இருந்தாள். இவள் தினமும் சிவனை வழிபட வருவாள். அர்ச்சக காதலருடன் சிறிதுநேரம் பேசிவிட்டு செல்வாள். ஒருநாள் காதல் மோகத்தில் இருவரும் தங்களை மறந்து பேசிக் கொண்டிருக்க, அப்பகுதி அரசர் முன்னறிவிப்பின்றி கோயிலுக்கு வந்துவிட்டார். அர்ச்சகர் அதுவரை இறைவனுக்கு பூ கூட போடவில்லை. பதட்டமடைந்த அவர், இனி பூத்தொடுத்து இறைவனுக்கு சூட்டுவதற்கு கால அவகாசமில்லை என்பதை உணர்ந்து, தன் காதலியின் தலையிலுள்ள பூவை எடுத்து லிங்கத்திற்கு அவசரமாக சூட்டிவிட்டார். அரசர் வந்தார். பூஜை முடிந்து அப்பூவை பிரசாதமாக அரசரிடம் அர்ச்சகர் கொடுத்தார். அதில் தலைமுடி இருந்தது. கோபமடைந்த அரசர் அதுபற்றி அர்ச்சகரிடம் விசாரிக்க, என்ன செய்வதென அறியாத அர்ச்சகர் கணநேரத்திற்குள், “”இறைவா! மாட்டிக் கொண்டேனே! உனக்கு இதுகாலம் வரை தவறாமல் சேவை செய்தேன். இன்று காதல் மோகத்தில் சிக்கி, அறியாமல் தவறிழைத்து விட்டேன். என்னைக் காப்பாற்று,” என மனதிற்குள் வேண்டினார். இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு, “”அரசே! லிங்கத்தின் தலையில் குடுமி இருக்கிறது. அதிலுள்ள முடி ஒட்டிக் கொண்டிருக்கிறது,” என்றார் அர்ச்சகர். இதை அரசர் நம்பவில்லை. “”பொய் சொல்லாதே,” என கர்ஜித்தவர், லிங்கத்தின் அருகே சென்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! கருணைக்கடலான சிவனின் தலையில் ஒரு குடுமி இருந்தது. அரசர் ஆச்சரியப்பட்டார்.
நம்பிக்கைகள்
சிவாலயமாக இருந்தாலும் பெருமாளின் தசாவதார சிலைகள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. அதிலும் குதிரையில் அமர்ந்துள்ள வீரனின் சிலை கல்கி அவதாரம் என்றே கருதப்படுகிறது. ஒரு குதிரையில் இளைஞனும், மற்றொரு குதிரையில் முதியவர் ஒருவரும் உள்ளனர். கல்கி அவதாரத்தின்போது இளைஞர், முதியவர் என்ற பாகுபாடின்றி, இவ்வுலகத்தில் உள்ளோர் அழிக்கப்படுவார்கள் என்ற நியதியின் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நவக்கிரகங்களின் அடிப்படையில் இதை சனித்தலமாகக் கொள்ளலாம். பத்தாம் நூற்றாண்டில் இத்தலம் ” திருநலக்குன்றம்’ என்று அழைக்கப் பட்டது. சனீஸ்வரனால் சோதிக்கப்பட்ட நளன் இத்தலத்தில் வந்து சிகாநாதரை வணங்கி அருள்பெற்றான் என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது. எனவே சனி பார்வையால் துன்பப்படுபவர்கள் இத்தல இறைவனை வணங்கி அருள்பெறலாம். சங்கீத கல்வெட்டு: சங்கீத வித்வான்கள் அவசியம் செல்ல வேண்டிய கோயில் இது. இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் கொண்ட கல்வெட்டைக் காணலாம். கிரந்தத்தில் இங்கு எழுதப்பட்டுள்ளது. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரமமகேஸ்வரன் என்ற மன்னன் இந்த ராகங்களை பாடியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதன் அருகே நெருங்கமுடியாத அளவுக்கு தேனீக்கள் கூடுகட்டி வாழ்கின்றன.
சிறப்பு அம்சங்கள்
இது ஒரு சனித் தலம் ஆகும். நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது. கோயில் பிரகாரம் சுற்றி வரும்போது, இந்தச் சிற்பங்களை மலையுச்சியில் ஏறாமல், கீழிருந்தபடியே தெளிவாகப் பார்க்கலாம். பொதுவாக சிவாலயங்களில் துவார பாலகர்கள் கண்டிப்பான முகத்தோற்றத்துடன் கிழக்கு நோக்கி வாயில் காப்பார்கள். ஆனால், இங்கோ தெற்கும், வடக்குமாக நின்ற நிலையில் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் புன்னகை பூத்தநிலையிலும், மற்றொருவர் சற்றே கடுமையான முகத்தோடும் செதுக்கப்பட்டுள்ளனர். இது ஒரு ஆன்மிக அதிசயமாகும். இங்கே அம்பிகை அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். மற்றொரு அம்பிகை சன்னதியும் இங்குள்ளது. உமையாள்நாச்சி என்ற தேவதாசி, அம்மன் சன்னதி ஒன்றை கட்டினாள். அவளுக்கு மலையமங்கை என பெயர் சூட்டினாள். காலப்போக்கில் அது சவுந்தரநாயகி சன்னதியாக மாறியிருக்கக்கூடுமென தெரிகிறது.
திருவிழாக்கள்
மகாசிவராத்திரி
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி