கீழசெங்கல்மேடு கைலாசநாதர் சிவன் கோயில்
முகவரி
கீழசெங்கல்மேடு கைலாசநாதர் சிவன் கோயில், கீழசெங்கல்மேடு, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606 111.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி
அறிமுகம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கீழசெங்கல்மேடு சிவன்கோயில் சிதம்பரம்- கந்தகுமாரன் சாலையில் துணிசிரமேடு அடுத்து உள்ளது துரைப்பாடி நிறுத்தம். இங்கிருந்து ஒருகிமி தூரம் வடக்கு நோக்கிய சாலையில் சென்றால் கீழ செங்கல்மேடு கிராமத்தை அடையலாம். சிதம்பரத்தில் இருந்து ஆறு கிமி தூரம் உள்ளது. சிதம்பரம், நடராஜர் கோயில் கட்டுமான பணிக்கு தேவையான செங்கற்கள் இங்கிருந்தே அனுப்பப்பட்டன. அதனால் இவ்வூர் செங்கல்மேடு என அழைக்கப்பட்டது. தயாரிப்பு பணிக்கான கூலி தருமிடம் தற்போது கூலி அம்மன் கோயில் என வழங்கப்படுகிறது. இவ்வூரில் பிள்ளைமார் சமூகத்தினர் வேளாண்தொழில் செய்து வந்தனர். அவர்களில் ஒரு குடும்பத்தினர் வீராணம் ஏரியில் இருந்து தனித்த இரு வாய்க்காலை அமைத்து இப்பகுதி வளம் பெற வைத்த பெருமையுடையவர்கள். இன்றும் அப்பகுதி வாய்க்கால்கள் இரண்டும் அவர்தம் பெயரை தாங்கி நிற்கின்றன. இவர்கள் தங்கள் வழிபாட்டிற்கென தனி சிவாலயம் ஒன்றினை அமைத்து வழிபட்டுவந்தனர். இக்கோயில் 350 வருடம் பழமை வாய்ந்தது என கூறலாம். ஒரு பிரகாரம் கொண்டு அமைந்திருந்த இக்கோயில் காலப்போக்கில் சுருங்கி சிறியதாக உள்ளது. பிள்ளைமார் சமூகத்தினர் இக்கோயிலுக்கு நிலங்கள் அர்ப்பணித்து வைத்திருந்த போதிலும் கவனிக்க உள்ளூரில் அவர்களின் சந்ததியர் இல்லாமல் போகவே கோயிலும் சிதிலமடைந்து வருகிறது. இறைவன் கைலாசநாதர். இறைவி காமாட்சி கிழக்கு நோக்கி உள்ள இறைவன், இறைவி தெற்கு நோக்கி அதே கருவறையில் உள்ளார். கருவறை வாயிலில் பெரிய விநாயகரும் முருகனும் உள்ளனர். வேளாண்மை தொழில் விட்டு பிள்ளைமார் அனைவரும் ஊர் விட்டு சென்றுவிட இக்கோயிலை காமாட்சி எனும் அப் பரம்பரையை சார்ந்த அம்மையே பூஜை செய்து வருகிறார். அவர்களது குலதெய்வத்திற்கு ஆலயம் எழுப்பி வருகின்ற நிலையில் நான் சென்றிருந்தேன். சிவாலயமே ஒரு கிராமத்தின் மையப்புள்ளியாக கொளல் வேண்டும் அதனால் சிவாலய பணியினையும் சேர்த்தே செய்யுங்கள், இயன்ற உதவிகள் பெற்று தருகிறேன் என உறுதி கூறிவந்துள்ளேன். அவர்களும் சிவாலய பணியினை துவக்க மகிழ்வுடன் இசைந்துள்ளார்கள். தில்லை பெருங்கோயிலுக்கு பொருள் தந்த கிராம ஈசனுக்கு நாம் பொருள் தரவேண்டிய காலம் வந்துள்ளது. இயன்றதை அளிக்க முன்வாருங்கள். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
துரைப்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி