கீழகாசாக்குடி ஸ்ரீஆதிபுரீஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
கீழகாசாக்குடி ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் சிவன்கோயில்,
கீழகாசாக்குடி, கோட்டுச்சேரி கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609609.
இறைவன்:
ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர்
இறைவி:
ஸ்ரீ மனோன்மணி
அறிமுகம்:
காரைக்காலில் இருந்து வடக்கில் செல்லும் NH32நெடுஞ்சாலையில் நான்கு கிமீ தூரத்தில் உள்ளது கீழகாசாக்குடி, இதற்க்கு நேர் மேற்கில் நெடுங்காடு சாலையில் உள்ளது மேலகாசாகுடி. ராஜராஜன் காலத்தில் உய்யக்கொண்டார் வளநாடு எனப் பெருமையுடன் அழைக்கப்பட்ட பகுதியில் காயாகுடி சதுர்வேதிமங்கலம், உதயசந்திரகிரி என வரலாற்றில் இடம் பெற்றுள்ள இவ்வூர் தற்போது காசாக்குடி எனப்படுகிறது. கடற்கரையோர சிவாலயம் என்பதால் இங்கே முனிவர் பெருமக்கள் பலரும் நெடுநாள் தவம் இருந்து, சிவதரிசனம் பெற்றுள்ளனர் என்கிறது தல வரலாறு. குறிப்பாக, காசிப முனிவர் தவம் இருந்து சிவனருள் பெற்ற தலங்களில், கீழகாசாகுடி தலமும் ஒன்று என்பர். அதனால் காசிபர் குடி என அழைக்கப்பட்டு காசாகுடி என ஆனது எனவும் கூறலாம். தற்போது மேலகாசாக்குடி கீழகாசாக்குடி என இரு ஊர்களாக உள்ளது. இன்றைய காசாக்குடி இவை ஏதும் அறியாத சாலையோர சிறு நகரம். இங்கு கிழக்கு நோக்கிய சிவாலயம் உள்ளது. சமீப வருடங்களில் திருப்பணி செய்யப்பட்ட சிவாலயம்.
ராஜேந்திர சோழனின் மகனுமான இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டிய பிரமாண்ட ஆலயம்தான் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில். பல வருடங்களாக சிதிலமடைந்து கிடந்த இக்கோயில் புதுவை அரசினரால் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 800 வருடங்கள் பழைமைமிக்க ஆலயம்
செங்கல் மற்றும் கருங்கல் என திருப்பணி செய்து, அற்புதமாக ஆலயம் அமைத்துள்ளான் இரண்டாம் ராஜராஜன். பிரமாண்டமான கோபுரமும் மதிலும் இருந்திருக்கிறது. இறைவன் கருவறையின் முன்னம் நீண்ட வௌவால்தொற்றா மண்டபம் சிதிலமடைந்து போயிருந்தது. அவற்றையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு சிமெண்டில் கட்டப்பட்டு காட்சியளிக்கிறது.
இறைவன் –ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் இறைவி- ஸ்ரீ மனோன்மணி கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் சுற்றிலும் சிறிய மதில் சுவர், மையத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் கருவறை எண்ணூறு ஆண்டுகள் பழமையானது. பிரஸ்தரம் வரை கருங்கல்லும், அதற்கு மேல் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. அதிட்டானப்பகுதியில் பல நிவந்தங்கள் கொடுக்கப்பட்டதன் தகவல்கள் கல்வெட்டாக்கப்பட்டுள்ளன.
கருவறை கோஷ்ட மூர்த்திகள் தற்காலத்தை சேர்ந்தவை. குமுத பந்த அதிட்டானம் என்ற வகையை சேர்ந்தது. பிரகாரத்தில் விநாயகர் முருகன் மகாலட்சுமி இவர்களுக்கு தனி சிற்றாலயங்கள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன. வடகிழக்கில் மேற்கு நோக்கிய பைரவர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். இக்கோயிலில் மிக சிறப்பான ஒரு மூர்த்தமும் உள்ளது; அது என்னவென்றால் ஒரு சதுரவடிவ பீடம் அதனை நான்கு சிங்கங்கள் தாங்குகின்றன, அதன்மேல் ஒரு எட்டுப்பட்டை கொண்ட கல்லில் ஒவ்வொரு பட்டை பகுதியிலும் ஒரு கிரகம் செதுக்கப்பட்டுள்ளது, இதன் மேல் உள்ள தாமரை பீடத்தில் மேற்கு நோக்கி சூரியபகவான் நிற்கிறார். இப்படி ஒரு நவக்கிரக தோற்றத்தை வேறெங்கும் நாம் காண இயலாது. சிற்பிகளின் கற்பனைக்கு எல்லையே இல்லை எனலாம். பைரவரின் அருகில் இதனை காணலாம்.
சிறப்பு அம்சங்கள்:
திருமுற்றம், திருமடை வளாக நந்தவனம், காழிக்கற்பக நந்தவனம், திருமுகை நந்தவனம், நாற்பத்தெண்ணாயிரவன் நந்தவனம் என ஏராளமான நிலப்பகுதிகளை கோயிலுக்கு வழங்கியுள்ளான் இரண்டாம் ராஜராஜன். காடுவெட்டியான் கொல்லை, சேய்ஞனூர் வளாகம், திருவிளக்கு புரம், நன்னிகுழி ஆகிய நிலங்களும் பொன்னம்பல மடம், திருஞானசம்பந்தர் மடம் ஆகிய சத்திரங்களும் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட தகவல்களைத் தெரிவிக்கின்றன கல்வெட்டுகள்.









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழகாசாக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி