கிரிஸ்னேஸ்வரர் திருக்கோயில் (ஜோதிர்லிங்கம்), ஔரங்கபாத்
முகவரி
கிரிஸ்னேஸ்வரர் திருக்கோயில், வெருல், மகாராஷ்டிரா 431102
இறைவன்
இறைவன்: கிரிஸ்னேஸ்வரர்
அறிமுகம்
கிரிஸ்னேஸ்வரர் கோயில் அல்லது குஷ்மேஸ்வரர் கோயில் எனப்படும் கோயில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோராவிலிருந்து ஒரு கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையையும் சிற்ப செதுக்கல்களையும் கொண்ட இக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து ஜோதிலிங்க தலங்களில் ஒன்றாகும். இக்கோயில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் இங்கே திருத்த வேலைகளைச் செய்வித்தார். வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோயிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார்.
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் இத்தலம் ஒரு சிறுகிராமமாக இருந்தது. அக்கிராமத்தில் சுதர்மன் என்ற பிராமணன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சுதேஹா என்பதாகும். இருவரும் இனிதே இல்லறம் நடத்திவந்தனர். நீண்ட நாட்களாக அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாமையினால் சுதேஹா மிகவும் மனம் வருந்தினாள். எனவே தனது வருத்தம் நீங்கத் தன் தங்கை கிருஷ்ணை என்பவளைத் தனது கணவனுக்கு இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து வைத்தாள். கிருஷ்ணை மிகுந்த சிவபக்தி கொண்டவள். தினமும் 108 சிவலிங்கங்களைக் களிமண்ணால் செய்து சிவவழிபாடு செய்து, அந்த சிவலிங்கங்களைச் சிவாலய ஏரியில் போட்டு விடுவாள். சிவபெருமான் அருளால் கிருஷ்ணைக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. யாவரும் மகிழ்ந்து அக்குழந்தையை அன்புடன் கவனமாக வளர்த்து வந்தனர். அதுவரை சலனமின்றி இருந்த சுதேஹைக்கு இப்போது பொறாமையும், தனக்கு மதிப்புக் குறைந்துவிட்டது என்ற தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விட்டது. அதனால் பெரிதும் மனம் புழுங்கினாள். இவ்வளவுக்கும் காரணம் கிருஷ்ணையின் மகன்தான் என எண்ணி, அம்மகன் தூங்கும் போது கொன்று, உடலைச் சாக்கில் கட்டி சிவாலய ஏரியில் போட்டு விட்டாள். இதை அறிந்த கிருஷ்ணை கலங்காமல் சிவபெருமான் தன் மகனைக்காப்பாற்றுவார் எனத்திடமான நம்பிக்கைகொண்டு, அன்றும் 108 சிவலிங்கங்கள் செய்து சிவலிங்கப்பூசையில் ஈடுபட்டாள். சிவ பெருமானிடம் அழுதுமுறையிட்டு தன் மகனைக் காக்க வேண்டினாள். வழக்கம் போல் லிங்கங்களைக் சிவாலய ஏரியிலிட்டாள். என்ன ஆச்சரியம்! அவளது மகன் மிகவும் பிரகாசமான ஒளியுடன் ஏரியின் நீரிலிருந்து எழுந்து வந்தான். சிவபெருமான் கிருஷ்ணைக்குக் காட்சி தந்து ஆசீர்வதித்தார். கிருஷ்ணையின் வேண்டுதலின்படி சிவபெருமான் இங்கேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாக வரமளித்தார். அதன்படியே இங்கே சிவன் கோயில் உண்டாகியது. அக்கோயிலுக்கு கிருஷ்ணேசுவரம் என்னும், சிவலிங்கத்திற்குக் கிருஷ்ணேசுவரர் என்றும் பெயர் வழங்கலாயிற்று.
நம்பிக்கைகள்
இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டுச் சென்றால் மறுபிறவி என்பதே கிடையாது.
சிறப்பு அம்சங்கள்
குங்குமணேசுவரம் மகாராட்டிராவிலுள்ள ஐந்து ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. சிவலிங்கமும், கோயிலும் சிவப்பாகக் காணப்படுகிறது. சிற்பக் கலை நுணுக்கம் வாய்ந்த கோயில். பார்வதி தேவியால் ஜோதிர் லிங்கம் ஆக்கப்பட்ட தலம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து வழிபட்டுச் சென்றால் மறுபிறவி என்பதே கிடையாதாம். சிவாலயத் தீர்த்தத்தில் நீராடியவர்கள் சுவர்க்கம் புகுவார்கள். மகா சிவராத்திரி அன்று இத்தீர்த்தமாடி ஈசனை வழிபட்டவர் மோட்சம் அடைவார்களாம். உலகப் புகழ் பெற்ற எல்லோராக் குகைக்கோயில் ஒரு கிலோ மீட்டருக்கு அருகே உள்ளதால், எல்லோரா தரிசிக்க வரக்கூடியவர்கள் இங்கே வந்து சாமி தரிசனம் செய்து விட்டுப் போகிறார்கள். பார்வதி தேவியானவர் சிவ பெருமானை நோக்கி இங்கு ஒரு சமயம் தவம் செய்து கொண்டிருந்தார். அம்பிகை இங்குள்ள ஏலா என்னும் நதியில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு வந்தார். பார்வதி தேவியார் குங்குமம் கொண்டு சிவலிங்கத்தை அர்ச்சனை செய்து வந்தார். சிவலிங்கம் குங்குமம் போன்று சிவந்து காணப்பட்டது. குங்குமேசுவரர் எனப்பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் தாபிக்க சிவனும் பார்வதியும் திருவுளம் கொண்டனர். ஒருநாள் பார்வதி தேவியார் ஏலாநதியில் நீராடி, மாற்றாடை அணிந்து சிவபூசையில் அமர்ந்தார். பார்வதி தேவியார் தமது இடது உள்ளங் கையில் சிறிது குங்குமத்தை வைத்து வலது கை ஆள்காட்டி விரலால் ஓம் நம சிவாய எனக் கூறித் தேய்த்தார். அப்போது அவரது கையில் மிகவும் பிரகாசமான ஜோதி தோன்றியது. அப்போது ஈசனும் பார்வதி தேவி வழிபட ஒரு ஜோதிர்லிங்கம் படைப்பதற்காக இந்த ஜோதி தோன்றியது என அசரீரியாகக் கூறினார். பார்வதி தேவியின் கையினின்றும் தோன்றிய ஜோதியானது, பார்வதி தேவி வழிபட்ட சிவலிங்கத்தில் ஐக்கியமாகியது. அப்போது சிவலிங்கம் மிகவும் பிரகாசமான ஜோதிர்லிங்கமாகப் பிரகாசித்தது. மேலும் குங்குமம் போன்று சிவப்பாகவும் ஜொலித்தது. பார்வதி தேவியும் மிகுந்த பக்தியுடன் வணங்க, சிவபெருமான் நேரில் வந்து பார்வதி தேவியைத் திருமணம் செய்து கயிலைக்குக் கூட்டிச் சென்றார். இவ்விதமாக இங்கு ஜோதிர் லிங்கம் தோன்றியது. மக்களும் பக்தியுடன் இன்றும் வழிபட்டு வருகின்றனர்.
திருவிழாக்கள்
சிவராத்திரி, பிரதோஷம் முதலிய திருவிழாக்கள் காணப்படுகின்றன.
காலம்
2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
மகாராஷ்டிரா
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அவுரங்காபாத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அவுரங்காபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
அவுரங்காபாத்