காக்கையாடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
காக்கையாடி கைலாசநாதர் சிவன்கோயில்,
காக்கையாடி, கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614101.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
சுமார் எண்ணூறு ஆண்டுகளாக இவ்வூரில் சிவாலயம் உள்ளது. கூத்தாநல்லூர் – வடபாதிமங்கலம் சாலையில் உள்ள பழையனூர் வெண்ணாற்று பாலம் தாண்டினால் சாத்தனூர், இவ்வூரின் கிழக்கு பகுதியே காக்கையாடி. கிழக்கு நோக்கிய கோயில், முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட சோழர்கால பாணி கட்டுமானம் கொண்டது. அழகான அகன்ற கருவறை, முகப்பு மண்டபம் என உள்ளது, அதில் இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். பெரிய அளவிலான வட்ட ஆவுடையார் கொண்ட லிங்க திருமேனி. அம்பிகையும் நான்கு அடி உயரத்தில் தெற்கு நோக்கி கருவறை கொண்டு உள்ளார். முகப்பு மண்டபத்தின் வெளியில் தனி மண்டபத்தில் நந்தி பலிபீடம் உள்ளது. இறைவன் –கைலாசநாதர் இறைவி- அகிலாண்டேஸ்வரி
பல்வேறு சித்தர்களும் கார்த்திகை அன்று இறைவனை பூசிப்பதாக ஐதீகம். அதனால் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்றைய தினம் வழிபட எல்லா நலமும் பெறலாம். கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன், லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை உள்ளனர். தென்மேற்கில் விநாயகரின் சிற்றாலயம் உள்ளது வடமேற்கில் முருகனின் சிற்றாலயம் சற்று பெரியதாக உள்ளது. வீரபார்த்திப சித்தரால் பூஜிக்கப்பட்ட சத்ரு சம்ஹார ஆறுமுக சுப்பிரமணியர், கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார்.
பொரவாச்சேரி எட்டுக்குடி கோயில்களில் உள்ளதை போன்றே இந்த முருகரும் உள்ளார். இவரை அனுதினமும் அக்னி வடிவில் இவர் பூஜிப்பதாக ஐதீகம். இவருக்கு ஈசானிய மூலையில் சிறிய சன்னதி உள்ளது. அருகில் பைரவர் மற்றும் நவகிரகங்களுக்கு ஒரு சன்னதி உள்ளது. இவ்வூர் பெரிய நகரங்களில் இருந்து தொலைவில் உள்ளதாலும், உள்ளூர் மக்கள் அதிக ஆர்வம் காட்டாததாலும், ஒரு கால பூஜை கோயில் என்ற அளவிலேயே உள்ளது. கோயில் சுற்று புறங்களும் போதிய பராமரிப்பின்றியே இருப்பது வருத்தத்துக்கு உரியது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
800 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காக்கையாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி