கல்யாணபுரம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
கல்யாணபுரம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
கல்யாணபுரம், திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
சோழமன்னர்களின் தலைநகராய்த் திகழ்ந்த தஞ்சையிலிருந்து நோக்கி வடக்காகச் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருவையாறு. திருவையாற்றின் தெற்கில் ஓடும் காவிரிக்கும், குடமுருட்டிக்கும் இடைப்பட்ட பகுதிதான் கல்யாணபுரம், இந்த கல்யாணபுரம் முதல் சேத்தி எனப்படுகிறது. ஆயிரத்தளி கோயில் அர்ச்சகர் முதல் கோயில் சிப்பந்திகள் வரை தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியாக இந்த கல்யாணபுரம் இருந்திருக்கலாம். இவர்களது தனிப்பட்ட வழிபடு தெய்வமாக இங்கிருக்கும் காசி விஸ்வநாதர் இருந்திருக்கலாம்.
திருவையாற்றின் தெற்கில் ஒரு கிமீ தூரத்தில் நடுக்கடை என்னுமிடத்தில் பிரதான சாலையில் ஒரு பெரிய மசூதி உள்ளது அதன் எதிரில் கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் அரை கிமீ சென்றால் ஒரு அக்கிரகார தெருவும் அதன் கடைசியில் அகோபில மடமும், அதன் அருகில் சிவன்கோயிலும் உள்ளன. அருகில் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில், இருந்தபோதிலும் வழி மேற்கில் மட்டுமே உள்ளது அழகிய அலங்கார வளைவு வழி உள்ளே சென்றால், கோயிலின் முன்பகுதியில் பெரிய விசாலமான இடம் அதில் அழகிய சதுரவடிவ திருக்குளம். நாற்புறமும் கற்பலகைகள் போடப்பட்டு சுற்றிவர தளமும் அமைக்கப்பட்டு உள்ளது.
கோயில் குளம் உள்ளடக்கிய திருக்கோயில் இப்பகுதியில் திருவையாற்றுக்கு அடுத்து இதுவே எனலாம். அதை தாண்டியும் பெரிய விஸ்தாரமான இடமுள்ளது அதில் கலை நிகழ்ச்சிகள் விழாக்கள் நடத்த ஏதுவாக உள்ளது. இறைவன்-காசிவிஸ்வநாதர். இறைவி-காசி விசாலாட்சி இறைவன் கிழக்கு நோக்கிய அழகிய உயர்ந்த விமானம் கொண்டுள்ளார். அவரின் முன்னம் பெரிய சதுரவடிவிலான உயர்ந்த முகப்பு மண்டபமும் மண்டப விதான தாங்கு சுவர்களில் புராண கதைகள் சொல்லும் பலவகையான சுதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கருவறை வாயிலில் ஆதி விநாயகர் உள்ளார். காலபைரவர் சூரியன் சந்திரன் நால்வர் என அனைவரும் முகப்பு மண்டபத்திலேயே உள்ளனர். முகப்பு மண்டபத்தின் வெளியில் இடது புறம் பஞ்சகோண வலம்புரி விநாயகர் உள்ளார். மறுபுறம் பாலசுப்பிரமணியர் எதிரில் அதிகார நந்தி பலிபீடம் உயர்ந்த பித்தளை கொடிமரமும் உள்ளது. மாலை நேர வெயிலில் தங்க கொடிமரமாகவே காணப்படுகிறது. கருவறையை சுற்றிவரும்போது தக்ஷ்ணமூர்த்தி, லிங்கோத்பவர் பிரம்மன் விஷ்ணு துர்க்கை உள்ளனர். அருகில் சண்டேசரும் உள்ளனர்.
வடமேற்கில் கிழக்கு நோக்கிய அனுக்கிரக ஆஞ்சநேயர் உள்ளார். பசுமடமும் வைத்து பராமரிக்கப்படுகிறது. இறைவனுக்கு இப்பசுக்களே அபிஷேக பால் தருகின்றன. வடகிழக்கில் நவகிரகங்களும் தெற்கில் ஒரு மரத்தடியில் பல அளவுகளில் நாகர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ காசிவிஸ்வநாத சேவா டிரஸ்ட் எனும் அமைப்பின் மூலம் இவ்வூர்வாசிகள் ஒன்று சேர்ந்து இக்கோயிலை பராமரிக்கின்றனர். அனைத்து விழாக்களும், நல்ல முறையில் நடக்கின்றன. கோயிலும் நன்கு பராமரிக்கப்படுகின்றது.


















காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கல்யாணபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி