Monday Nov 18, 2024

கருவேலி சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்) – 605 501 . திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-273 900, 94429 32942.

இறைவன்

இறைவன்: சற்குணநாதேஸ்வரர், இறைவி: சுர்வாய நாயகி

அறிமுகம்

கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் (கருவிலிக்கொட்டிடை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 63ஆவது சிவத்தலமாகும்.சோழர் திருப்பணி பெற்ற தலம் எனப்படுகிறது. அப்பர் பாடல் பெற்றது இத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – நாச்சியார்கோவில் – எரவாஞ்சேரி – பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.

புராண முக்கியத்துவம்

சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் தடுத்தார். அவரது சொல்லைக் கேளாமல் தாட்சாயணி யாகத்திற்கு சென்றாள். அழைப்பில்லாமல் வந்த மகளை அனைவரது முன்னிலையிலும் தட்சன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத பார்வதி ஹோம அக்னியில் விழுந்து எரிந்தாள். தாட்சாயணியின் பிரிவைத் தாங்கமுடியாத சிவபெருமான், யாக குண்டத்திற்கு வந்து அன்னையின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு பித்துபிடித்தவர் போல் ஆடினார். சிவனின் ருத்ர தாண்டவத்தால், ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன. தேவர்கள் நடுங்கினர். அவர்கள் நாராயணனை அணுகி, சிவபெருமானைச் சமாதானம் செய்ய வேண்டினர். நாராயணன் சக்ராயுதத்தை ஏவி, தாட்சாயணியின் உடலைச் சிறிது சிறிதாக துண்டித்தார். உடலின் பாகங்கள் 51 இடங்களில் விழுந்தன. அவை மகாசக்தி பீடங்கள் என அழைக்கப்பட்டன. பின்பு சிவபெருமானைச் சமாதானம் செய்தார். உடலை விட்ட தாட்சாயணி, பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாக பார்வதி என்ற பெயரில் அவதரிப்பாள் என்றும், அங்கு அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றும் திருமால் கூறினார். இதன்படி, கயிலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 126 வது தேவாரத்தலம் ஆகும். முற்பிறவியில் ஒரு கெட்டவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக, ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்க வேண்டி வந்தது. அவள் மறுபிறவியில், இறைவனை அடைந்ததால் பிறவா நிலை பெற்றாள். அது போலவே, இத்தலத்து இறைவனைக் காண்போருக்கும் மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் “கரு இல்லை’ என்ற பொருளில் “கருவிலி’ எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம். இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் “சற்குணேஸ்வரர்’ எனப்படுகிறார். அம்பாள் “சர்வாங்க சுந்தரி’ எனப்படுகிறாள்.

திருவிழாக்கள்

மகாசிவரத்திரி, மார்கழி திருவாதிரை

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கருவேலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top