கருங்குயில்நாதன் பேட்டை சக்திபுரீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி
கருங்குயில்நாதன் பேட்டை சக்திபுரீஸ்வரர் சிவன்கோயில், கருங்குயில்நாதன் பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் – 609001.
இறைவன்
இறைவன்: சக்திபுரீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி
அறிமுகம்
மயிலாடுதுறை – பூம்புகார் சாலையில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது கருங்குயில்நாதன் பேட்டை சிவன்கோயில். பிரதான சாலையில் ஒரு அலங்கார வளைவு ஒன்று உள்ளது அதனுள் நுழைந்து தெருவின் கடைசியில் ஒரு குளமும்,அடுத்து கோயிலும் உள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் முகப்பு கோபுரம் இல்லை, அப்பர் பாடிய வைப்பு தலம். 1400ஆண்டு பழமையான தலம். வ.உ.சாமிநாதய்யர் குயிலாலந்துறை என்பதும், கருங்குயில் நாதன் பேட்டை என்பதும் ஒன்றே என கூறியுள்ளதால் இது அப்பர் பாடிய வைப்பு தலம் என கொள்ளலாம். பெரிய விசாலமான நான்கு ஏக்கர் பரப்புடைய கோயில் பின்னால் உள்ள வாகன வைப்பு அறைகள் சிதிலமடைந்துள்ளன, இது தருமபுரம் மடத்துக்கு சொந்தமான கோயில். குடமுழுக்கு கண்டு நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதிக அளவில் மக்கள் கோயிலுக்கு வருவதில்லை.
புராண முக்கியத்துவம்
திருப்பறியலூரில் சிவநிந்தகனான தக்கன் ஒரு யாகம் செய்தான். அனைத்து தேவர்களையும் அழைத்த தக்கன் ஈசனை அழைக்காமல் அவமதித்தான். அன்னையையும் அவமதித்தான். அதனால் சிவபெருமானுக்கு சீற்றம் பிறந்தது. அவரது நெற்றிக்கண்ணிலிருந்து வீரபத்திரர் தோன்றினார். தக்கனிடம் சென்ற வீரபத்திரர், “வேள்விக்குத் தலைவனாகிய எங்கள் சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தைக் கொடு, வீணாக அழியாதே’ என்று சொல்லியும் தக்கன் உடன்படவில்லை. சிவபெருமானை மேலும் இகழ்ந்தான். உக்ரமூர்த்தியான வீரபத்திரர் யாகத்தை அழிக்கத் தொடங்கிவிட்டார். தேவர்கள் ஓட ஆரம்பித்தனர். இச்சம்பவத்தில், இந்திரன் தப்பித்தால் போது மென்று குயில் வடிவம் எடுத்துப் பறந்தோடினான். பின்னர் தன் தவறினை உணர்ந்து வருந்தினான். சிவநிந்தகன் அளித்த அவியுண்ட பாவந்தீர பல தலங்களுக்குச் சென்று வழிபட்டான். ஆனாலும் அவனால் பழைய நிலைக்கு வரமுடியவில்லை. அப்போது தேவகுருவாகிய வியாழன், “மாயூரத்திற்குக் கிழக்கே ஒருகல் தொலைவில் மாகேஸ்வரி வழிபட்ட தல இறைவனை நீயும் வழிபட்டு அருள் பெறுவாய் என்றார். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நம்பிக்கைகள்
சூரியன்- சனிக்கு தந்தை- மகன் என்ற உறவிருந்தாலும் ஜோதிடரீதியாக இருவரும் பகை கிரகங்கள். ஒருவரது ஜாதகத்தில் சூரியனும் சனியும் ஒன்றாக அமையப்பெற்றால், தந்தையும் மகனும் ஒரு வீட்டில் இருக்கமாட்டார்கள். சித்திரை, ஆடி, ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களும் பித்ருதோஷத்திற்கு ஆளாவார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய தோஷத்திற்குப் பரிகாரம் கிடைக்கின்றபடி அமையப்பெற்றதுதான் இந்த அமைப்பு.
சிறப்பு அம்சங்கள்
தலமரமான வில்வமரத்தின் அருகே சிறப்பு விருட்சமாக வன்னிமரம் உள்ளது. இந்த மரம் 1,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் நவகிரகங்கள் இல்லை. இந்த வன்னி மரத்தை வலம் வந்தால் நவகிரகங்களை வழிபட்ட பலனுண்டு. ஒன்பது முறை வலம்வந்து வழிபடுவது சிறப்பு. ஈசான்யதிக்கில் காலபைரவர் காசியில் உள்ளதுபோல் அருள்புரிகிறார். அதனருகில் சூரியன், சனி ஆகிய இரண்டு பகை கிரகங்கள் அருகருகே நின்ற நிலையில் மேற்கு நோக்கி காட்சிதருவது தனிச்சிறப்பு.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருங்குயில்நாதன் பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி