Thursday Dec 26, 2024

கச்சனம் கைச்சின நாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், (திருக்கைச்சின்னம்)கச்சனம்-610 201. திருவாரூர் மாவட்டம். போன்: +91 94865 33293

இறைவன்

இறைவன்:கைச்சினநாதர், கைச்சினேஸ்வரர் இறைவி: வெள்வளை நாயகி

அறிமுகம்

கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது கை அடையாளம் சுவாமி மீது படிந்தது என்பது தொன்நம்பிக்கை. இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும். இத்தலம் அகத்தியருக்கு பிரமகத்தி தோஷமும், இந்திரனுக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபமும் நீங்கிய திருத்தலமாகும். அர்த்தநாரீசுவரர் சந்நிதி, ரிஷபாரூட தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவை இத்தலத்தில் உள்ளன.

புராண முக்கியத்துவம்

கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆஸ்ரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் சதி செய்தான். கவுதமர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கமுடையவர். எனவே சேவலாக உருவெடுத்து ஆஸ்ரமத்தின் உச்சியில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். அகலிகை வழியனுப்பினாள். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். “”விடியவே இல்லை, ஏதோ ஒரு சேவல் நேரம் கெட்ட நேரத்தில் கூவியுள்ளது,”என்று சொல்லி விட்டு, அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆஸ்ரமத்துக்கு திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார். அகலிகை கற்பில் சிறந்தவளாக இருந்தாலும் அவள் ராமரால் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காக கல்லாக மாற்றினார். சாப விமோசனம் பெறுவதற்காக, இந்திரன் சிவனை நினைத்து உருகி வழிபட்டான். சிவன் அவனிடம், விமோசனம் வேண்டுமானால், மணலால் லிங்கம் செய்து அபிஷேகம் செய்து வழிபடும்படி சொன்னார். மண்ணில் செய்த லிங்கத்திற்கு எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? எனவே இந்திரன் இன்னும் பல காலம் துன்பப்பட்டான். செய்த தவறை நினைத்து உருகினான். கடும் குற்றம் செய்த அவனை சிவன் மன்னிக்கவில்லை. பின்னர் அம்பாளை நினைத்து தவமிருந்தான். இப்படியாக பல்லாண்டு கழித்தும் பலனின்றி, தான் அமைத்த லிங்கத்தைக் கட்டிப்பிடித்து, “”இனி பெண் வாசனையையே நுகர மாட்டேன்,” எனக் கதறினான். அவனது விரல்கள் லிங்கத்தில் பதிந்து விட்டன. தவறு செய்தவரையும் மன்னிக்கும் அருள் குணமுள்ள சிவன், நீண்ட நாள் கானக வாழ்வில் சிக்கிய அவனுக்கு விமோசனம் கொடுத்தார். அவன் எழுப்பிய லிங்கத்தில் எழுந்தருளி, தவறு செய்யும் யாராயினும் தண்டனை கொடுத்தும், தவறை எண்ணி திருந்தி இனி தவறு செய்வதில்லை என உறுதி எடுப்போருக்கு அருள்பாலித்தும் வருகிறார். இந்திரனின் கைவிரல்கள் லிங்கத்தில் பதிந்ததால், “கைச்சின்னேஸ்வரர்’ எனப்படும் இவர், பல்வளை நாயகி அம்பிகையுடன் இத்தலத்தில் உள்ளார்.

நம்பிக்கைகள்

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 186 வது தேவாரத்தலம் ஆகும். மனிதன் வீரமும் ஆற்றலும் உடையவனாகவோ, படித்துவிட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஆற்றலையும், கல்வியையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்குரிய சரஸ்வதியை முதலிலும், அடுத்து ஆற்றலுக்குரிய துர்க்கையையும், இதையடுத்து சோம்பேறித்தனத்தின் சின்னமான ஜேஷ்டாதேவியையும் (மூதேவி) இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கல்வியும் ஆற்றலும் இருந்தாலும் சோம்பலை விட்டவரே செல்வத்தை அடைய முடியும் என்பதற்கேற்ப இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

நவராத்திரி,அகத்தியர் கைலைகாட்சி, சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

மதுரை ஆதீனம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்லிக்காவல்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top