ஒழிந்தியாம்பட்டு ஸ்ரீ அரசலீசஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
![](https://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/temp-0146.jpg)
முகவரி
அருள்மிகு அரசிலிநாதர் திருக்கோவில் ஒழிந்தியாப்பட்டு அஞ்சல் வானூர் வழி வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIn – 605109
இறைவன்
இறைவன்: அரசிலிநாதர் (அரசலீஸ்வரர்) இறைவி: பெரிய நாயகி
அறிமுகம்
ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31வது தலமாகும். சாளுவ மன்னனால் கட்டப்பட்ட கோயில். இது விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்திலுள்ள ஒழிந்தியாம்பட்டில் அமைந்துள்ளது. அரசமரத்தின் கீழ் சுவாமி மூலவர் – சிவலிங்கத் திருமேனி, குட்டையான பாணம், ஆவுடையாரும் தாழவுள்ளது. கருவறையில் இறைவன் அரசிலிநாதர் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர். மூலவர் அரசிலிநாதர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் பெரியநாயகி தனி சந்நிதியில் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
புராண முக்கியத்துவம்
வாமதேவர் என்ற முனிவர் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வந்தார். இந்த ஊருக்கு வந்தபோது ஒரு அரசமரத்தின் அருகே சற்று நேரம் ஒய்வெடுக்கிறார். உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வில் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறது என்றால், இங்கு சிவபெருமான் ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளுகிறார். மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் இத்தலத்திற்கு அரசிலி என்றும், இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. வாமதேவ முனிவருக்குப் பின்னர் பல ஆண்டுகள் பராமரிப்பின்றி இந்த லிங்கம் பூமியில் புதையுண்டு போயிற்று. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அதன் அருகில் இருந்த சிவலிங்கத்திற்கு அந்த நந்தவனத்தில் இருந்த பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தான். பணியாள் ஒருவனிடம் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் வழக்கம்போல் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்கு திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறுகிறான். மன்னரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்டான் மன்னன். அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்பதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன் கோபத்துடன் மான் மீது அம்பு எய்கிறான். மான் தப்பிவிட, காவலர்கள் அதை விரட்டிச் செல்ல, அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் தான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் புதைந்துப் போன வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. அந்த லிங்கத்தின் பாணத்தில் ரத்தம் வழிந்தபடி இருந்ததைக் கண்டு அதிர்ந்த மன்னன், சிவனை வேண்டினான். மன்னனுக்கு காட்சி தந்த சிவன், மான் வடிவில் அருள்புரிந்தது சாட்சாத் தானே என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கிடைத்திட அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான். வாமதேவ முனிவர் காலத்திற்கு பிறகு ஒழிந்து மீண்டும் சத்தியவிரதன் காலத்தில் சிவலிங்கம் அகப்பட்டது. ஒழிந்து அகப்பட்டது என்பதே காலப்போக்கில் ஒழிந்தியாம்பட்டு என மருவி இந்த ஊரின் பெயராக நிலைபெற்றது.
நம்பிக்கைகள்
சாளுவ மன்னனால் கட்டப்பட்ட கோயில். பிரதோஷ வழிபாடு இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது. இத்தலத்தில் வாமேதவ முனிவர் என்பவர் வழிபட்டுப் பிரதோச நாளில் பேறுபெற்றார் என்பது தொன்வரலாறு. பூசம் நட்சத்திரத்திற்குரிய மரம் அரச மரம். அது இத்தலத்தின் தல விருட்சமாக இருப்பதால் இத்தலம் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலம் வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லா நலனையும் அடைவார்கள். பதவி இழந்தவர்கள், தொழிலில் ஆதிக்கமின்றி இருப்போர் இத்தலத்தில் உள்ள அரசமர இலையால் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு வழிபடுவதன் மூலம் இழந்த பதவிகள் திரும்பி, பதவி உயர்வு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவிழாக்கள்
நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா
காலம்
1000 -2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒழிந்தியாம்பட்டு
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாண்டிச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி