ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர் திருக்கோயில், ஊத்துக்காடு, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்- 612701
இறைவன்
இறைவன்: காளிங்கநர்த்தனர் இறைவி : ஸ்ரீதேவி- பூதேவி
அறிமுகம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியே தஞ்சை செல்லும் சாலையில், சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு. இங்கேதான் காளிங்கனின் வாலைக் கையில் பிடித்துக் கொண்டு, ஒரு காலைத் தூக்கியபடி, மறு காலுக்குக் கீழே சர்ப்பத்தின் தலையை மிதிப்பது போன்ற பாவனையில் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாளிங்கநர்த்தனர். அழகு ததும்பும் இந்த கிருஷ்ணரை பார்க்கலாம். தேவலோகப் பசுவான காமதேனு, சிவனார் மீது கொண்ட பக்தியால், தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் பசுக்கள் பலவற்றுடன் ஊத்துக்காட்டில் இருந்ததாம்! தினமும் பூக்களைப் பறித்து, இங்கே உள்ள கயிலாசநாதர் ஆலயத்தில் உறைந்திருக்கும் இறைவனை பூஜித்து வந்ததாம். இதையடுத்து உள்ள ஊரில், பசுக்கள் நிரம்பியிருந்ததால் ஆவூர் எனப்பட்டது. பசுக்கள் மேய்ச்சலுக்கு வந்து செல்லும் இடம்… கோ வந்த குடி என அழைக்கப்பட்டு, பின்னர் கோவிந்தகுடி ஆனது. பட்டி எனும் பசு சிவனாருக்கு பூஜை செய்த ஊர், பட்டீஸ்வரம் என்று புகழப்பட்டது. கிழக்கு நோக்கிய மூன்றடுக்கு கோபுரம் கொண்ட அற்புதமான ஆலயம். கோயிலின் உள்ளே நுழைவதற்கு முன்னதாக ஸ்ரீஆனந்தநர்த்தன கணபதி சந்நிதி அமைந்துள்ளது. இவரை வணங்கிவிட்டு உள்ளே செல்ல, பலிபீடம்; துவஜஸ்தம்பம். மகா மண்டபம், அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவேதநாராயணப் பெருமாள், அமர்ந்த திருக்கோலத்தில் அழகே உருவாகக் காட்சி தருகிறார். அருகில், ருக்மிணி- சத்யபாமா சமேத ஸ்ரீகாளிங்கநர்த்தனப் பெருமாள் உற்ஸவ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
புராண முக்கியத்துவம்
ஒருமுறை அங்கே வந்த நாரதர், காமதேனு முதலான பசுக்களிடம் கிருஷ்ணரின் கதையைச் சொன்னார். அப்போது, காளிங்கன் எனும் பாம்பின் தலையில் நர்த்தனம் ஆடி, அவனையும் அவனது ஆணவத்தையும் கிருஷ்ணர் அடக்கிய கதையை நாரதர் விவரிக்க… மகேசனுடன் மாயக் கண்ணனையும் சேர்த்து மனதுள் வரித்துக் கொண்டது காமதேனு! அன்று முதல் மடுவில் நீர்த்திவலைகள் மோதும் ஓசையைக் கேட்டபடியே இருந்தன பசுக்கள்… குறிப்பாக காமதேனு! ஏனெனில், இந்த ஓசை, கண்ணனின் புல்லாங்குழலில் இருந்து கிளம்பும் இசையை நினைவுபடுத்த… ‘கண்ணன் வரமாட்டானா?’ என ஏங்கித் தவித்தது. பசுவின் ஏக்கத்தைப் புரிந்து கொண்ட ஆயர்குலத்தோன், தனது புல்லாங்குழலை இசைத்தான். அங்கே… நீரில் இருந்து, காளிங்கநர்த்தன வடிவில் எழுந்தருளினான். இங்கேயே கோயில் கொண்டான். இத்தனை புகழும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தில், காளிங்கநர்த்தனருக்கு இப்போது ஒரு கால பூஜைதான் நடைபெறுகிறது என்பது வேதனைக்கு உரிய ஒன்று! வைபவங்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது. அக்கம்பக்கத்து கிராம மக்கள்தான் எப்போதேனும் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
அழகு ததும்பும் காளிங்கநர்த்தனப் பெருமாள், சர்ப்பத்தின் வாலை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலைத் தூக்கி நடனமாடியபடி, மற்றொரு காலை சர்ப்பத்தின் தலையில் வைத்திருக்கிறார். ஆனால், ஸ்வாமியின் திருப்பாதத்துக்கும் சர்ப்பத்தின் தலைக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத இடைவெளி ஒன்று உள்ளது. ஒரு சின்ன நூலை இந்த இடைவெளிக்குள் செலுத்தினால், அந்தப் பக்கமாக வெளியே வந்து விடும் நேர்த்தியை வியந்து போற்றுகின்றனர்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஊத்துக்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி