உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
முகவரி
உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை கோயம்புத்தூர் மாவட்டம் – 642126
இறைவன்
இறைவன்: பிரசன்ன விநாயகர்
அறிமுகம்
உடுமலை நகரில் குடியிருந்து உடுமலை நகர மக்களை சகல விக்கினகளி லிருந்தும் விலக்கி காத்து அருள்கிறார் இத்தல விநாயகப் பெருமான். இந்த விநாயகர் தற்போது கோயில் கொண்டிருக்கும் இடத்தில் தானாக பிரசன்னமாகி காட்சியளித்து அருள்பாலித்ததால் ஸ்ரீபிரசன்ன விநாயகர் எனப் பெயர் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இத்திருக்கோயிலின் மூலவரான அருள்மிகு பிரசன்ன விநாயகர், ராஜ கம்பீரத்தோடு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தம்மை வேண்டிவருவோர்க்கு வேண்டும் வரம் நல்கும் இனியவர். பக்தியுடன் ஸ்ரீவிநாயகப் பெருமான் அடிபற்றி வந்து வணகுவோரின் மனக்குறைகளையும், உடல் குறைகளையும் போக்கி பக்தர்களின் மனமறிந்து வரம் நல்கும் வல்லவர். அரைச் சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் “சக்கரபுரி’ என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் “உடும்புமலை’ என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்றழைக்கப்பட்டது.
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராஜ்யம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, “உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது.
நம்பிக்கைகள்
அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் வேண்டிக்கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் விநாயகருக்கு உகந்த கொழுக்கட்டை நைவேத்யம் படைத்து, பால் அபிஷேகம் செய்து சூரைத்தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
ராஜகம்பீர கோலம் : இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில் ராஜகம்பீரபீ கோலத்தில் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூறையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம்,அரசு ஆகியன இங்குள்ளன. திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசிவிஸ்வநாதர், மூலவர் இடத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுர நாயகி உடனாய சவுரிராஜபெருமாள், அவருக்கு இடப்புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனியே சன்னதி கொண்டுள்ளனர். இவ்வாறு, இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. மாதக்கிருத்திகை தினத்தில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது இக்கோயிலின் சிறப்பு.
திருவிழாக்கள்
சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம்.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உடுமலைப்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
உடுமலைப்பேட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்புத்தூர்