இரும்பை மாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
முகவரி
அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை விழுப்புரம் மாவட்டம் – 605 010
இறைவன்
இறைவன்: மாகாளேசுவரர் இறைவி: மதுரசுந்தர நாயகி
அறிமுகம்
மகாகாளேசுவரர் கோயில் அல்லது திருவிரும்பை மாகாளம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில், இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.இவ்வாலயம் சுமார் 1 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் வலதுபுறம் விநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சுயம்புலிங்க வடிவில் மாகாளேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கியும், இறைவி குயில்மொழிநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.ஆலயம் திருப்பணி செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது. பிராகார மேற்குச் சுற்றில் கருவறைக்குப் பின்புறம் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து ஆறுமுகர் காட்சி அளிக்கிறார். இச்சந்நிதிக்கு அருகில் காலபைரவர் சந்நிதி இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இச்சந்நிதியில் நின்று கொண்டு இறைவன், அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் காட்சி அளிக்கிறார். சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானது. கோவில் கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி சூரியன், சந்திரன் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் ஆஞ்சனேயருக்கும் சந்நிதி உள்ளது. தல விருட்சம்:புன்னை தீர்த்தம்:மாகாள தீர்த்தம் ஆகமம்/பூஜை :சிவாகமம்
புராண முக்கியத்துவம்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இரும்பை மகாகாளேஸ்வரரர் திருக்கோயில். சோழ மன்னர்கள் காலத்தில் நன்கு சீரமைத்து கட்டப்பட்ட கோயில் இது. இந்த கோயிலின் இறைவனான சிவபெருமானின் மூலவர் லிங்கம் மகாகாளேஸ்வரர் என்றும், உற்சவர் திருமேனி சந்திரசேகரர் என்றும் அழைக்கபடுகிறது. அம்பாள் குயில்மொழி நாயகி, மதுரை சுந்தர நாயகி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். புராண காலத்தில் இந்த ஊர் திருஇரும்பைமாகாளம் என அழைக்கப்பட்டது.“இரும்பன், இரும்பாசுரன்” ஆகிய இரண்டு அசுரர்களை மகாகாளி வடிவமெடுத்து வதம் புரிந்த பார்வதி தேவிக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலக இந்த தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்ட போது அந்த தோஷம் நீங்கியது. மேலும் மகாகாளர் என்கிற முனிவர் இக்கோயிலின் லிங்கத்தை ஸ்தாபித்தவர் என்பதால் அவரின் பெயராலேயே மகாகாளேஸ்வர் என்று இக்கோயிலின் இறைவன் அழைக்கப்படுகிறார்.முற்காலத்தில் இவ்வூரில் தங்கி தவம் புரிந்து வந்த “கடுவெளி” சித்தரின் கடுந்தவத்தின் ஆற்றல் காரணமாக இவ்வூரில் மழைபொழிவு ஏற்படவில்லை என கருதிய மக்கள், ஒரு நடன மாதுவை ஏற்பாடு செய்து அவர் முன்னே நடனமாடி அவரது தவத்தை கலைக்கச் செய்தனர். கடுவெளி சித்தர் கண் திறந்து பார்த்த போது, அந்நாட்டின் மன்னன் சித்தரின் தவம் கலைந்தால் மழைப்பொழிவு ஏற்படும் என்கிற நல்லெண்ணத்திலேயே அவரது தவத்தை தாங்கள் கலைக்கச் செய்ததாக கூறி மன்னிப்பு கேட்டார்.இதனால் மனமிரங்கிய கடுவெளி சித்தர் அவ்வூரிலேயே தங்கி சிவபணி செய்து வந்த போது நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டு, பஞ்சம் நீங்கியது. இதனால் மகிழ்ந்த மக்கள் அனைவரும் சிவன் கோயிலுக்கு விழா எடுத்து ஊர்வலமாக சென்ற போது, அந்த நாட்டிய பெண் நடமாடிக்கொண்டு செல்கையில், அவள் காலிலிருந்த சிலம்பு ஒன்று கழன்று விழ, அதை உடனடியாக எடுத்து அந்த நடன பெண்ணின் காலில் மாட்டினார் கடுவெளி சித்தர். இதனை கண்ட அனைவரும் சித்தரை பற்றி தவறாக பேச ஆரம்பித்தனர்.இதனால் வேதனையும், கோபமும் அடைந்த கடுவெளி சித்தர் ஒரு பதிகம் பாட இக்கோயிலின் சிவலிங்கம் மூன்றாக வெடித்து சிதறியது. இதை கண்டு அதிர்ந்த மக்களும் மன்னனும் அவரிடம் வேண்ட, அவர்களை மன்னித்த கடுவெளி சித்தர் மீண்டும் ஒரு பதிகம் பாட உடைந்த சிவலிங்கம் மீண்டும் ஒன்றாகியது.
நம்பிக்கைகள்
ஆயுள் விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இங்கு அரசமரத்திற்கடியில் தவம் செய்த கடுவெளி சித்தரின் தவத்தை அந்த மரத்தின் கிளையில் குயில் வடிவில் இருந்து அம்பாள் கண்காணித்து வந்ததாகவும், சித்தரின் தவத்தை பற்றி சிவ பெருமானிடம் அம்பாள் கூறி வந்ததால் “குயில் மொழி நாயகி” என்ற பெயர் அம்பாளுக்கு ஏற்பட்டது. இக்கோயிலில் அம்பாள் தெற்கு திசை பார்த்தவாறு தனி சந்நிதியில் அம்பாள் மகாலட்சுமின் கோலத்தில் காட்சி தருகிறாள்.இக்கோயிலின் மேற்கு பிரகாரத்தில் சந்திரன் மேற்கு திசை பார்த்தபடி சகலகலா சந்திரனாக காட்சி தருகின்றார். இவருக்கு பால் சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபடுபவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. நவகிரக நாயகர்கள் அனைவரும் தங்கள் மனைவியருடன் காட்சி தருகின்றனர். சூரிய பகவான் தாமரை மலர் மீது அமர்ந்து “உஷா, பிரதியுஷா” ஆகிய இரு மனைவியரையும் தனது மடி மீது அமர்த்தியிருக்கும் சூரியனின் அதிசய கோலமாக இக்கோயிலில் காணப்படுகிறது.பேச்சு சரியாக வராதவர்கள், இசை கலைகளை பயில்பவர்கள், இசை கலைஞர்கள் ஆகியோர் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த தேனின் சில துளிகளை தங்கள் நாக்கில் தடவி கொள்கின்றனர். இதனால் தங்களின் குரல் வளம் மற்றும் இசை திறன் மேம்படுவதாக பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர். ஆயுள்விருத்தி ஏற்படவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொண்ட போதும் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டதாக நினைப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் கோரிக்கைகளும், விருப்பங்களும் நிறைவேறும்.
திருவிழாக்கள்
சிவராத்திரி, மாசிமகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இரும்பை
அருகிலுள்ள இரயில் நிலையம்
விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி