இராமலிங்கம்பட்டி ஓம் பாதாள செம்பு முருகன் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம்
முகவரி :
இராமலிங்கம்பட்டி ஓம் பாதாள செம்பு முருகன் திருக்கோயில்,
இராமலிங்கம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் – 624622.
இறைவன்:
ஓம் பாதாள செம்பு முருகன்
அறிமுகம்:
மேற்கு தொடர்ச்சி மலை, கோபிநாத சுவாமி மலை, தேவர்மலை என சுற்றிலும் மலைகள் இருந்த முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இராமலிங்கம் பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் பழநி சாலையில் ரெட்டியார்சத்திரம் என்ற ஊரிலிருந்து ஸ்ரீராமபுரம் செல்லும் வழியில் 3கி.மீ. தொலைவில் இராமலிங்கம்பட்டி உள்ளது.
புராண முக்கியத்துவம் :
பழநியம்பதியில் பாலகுமாரனின் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கி பக்தர்களை உடல், மன ஆரோக்கியத்தை காத்திட அதை செய்த பெருமை மிக்கவர் சித்தர் போகர். அவரையும் அவரது சீடர் புலிப்பாணியையும் மானசீக குருவாக போற்றி பூஜித்து வந்த திருக்கோவிலூர் சித்தர் பெருமான் 600 ஆண்டுகளுக்கு முன்னர் பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகில் ராமலிங்கம் பட்டி என்னும் ஊரில் வாசம் செய்தபோது, தங்கம், வெள்ளி, செப்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்களின் கலவையால் ஒன்றரை அடி உயரமுள்ள முருகப்பெருமானின் விக்கிரகத்தை செய்து பாதாள அறையில் வைத்து வழிபட்டு வந்ததாகவும் அதற்கு தினமும் அபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்டு உடலுக்கு சக்தியை கொடுத்ததாகவும் கூறுகின்றனர். திருக்கோவிலூர் சித்தரை போகரின் மறு அவதாரம் என்றும் கூறுவோர் உண்டு.
அவரது காலத்திற்குப் பின் சில நூறு ஆண்டுகள் கடந்து ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியில் வந்த கந்தமாறன் இக்கோயிலில் மகிமையை அறிந்து பூஜைகள் நடைபெற செய்துள்ளார். பக்தர்களால் ஓம் பாதாள செம்பு முருகன் திருக்கோயில் என வழங்கப் பெற்று வந்துள்ளது. அதன் பின்னர் பக்தர்கள் பலரும் இணைந்து புதிய கோயில் அமைத்து தந்த கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர்.
நம்பிக்கைகள்:
வியாழனுக்கு உரிய தங்கம், சனிக்கு உரிய இரும்பு, சுக்கிரனுக்கு உரிய வெள்ளி, சூரியனுக்கு உகந்த, கேதுவுக்கு உரிய ஈயம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து பஞ்சலோக விக்கிரகத்தில் பயன்படுத்தி இருப்பதால் இவரை வழிபடும்போது அனைத்து கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நல்லவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு தரக்கூடிய திருநீறு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
ஒவ்வொருநாளும் கருவறையில் முருகப் பெருமான் பாதத்தில் வைத்து பூஜிக்கப்படும் நிலையானது மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது இதை உண்டால் மனமும் புத்துணர்ச்சி தருவதாக பயன்பெற்றவர்கள் கூறுகின்றனர். கருங்காலி மாலையை முருகன் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு தரப்படுகிறது. இந்த மாலை அணிவித்து முருகனின் திருவருளோடு அவரது குல தெய்வத்தின் அருளும் ஒன்று சேர்ந்து கிடைக்க பெறுவதாக நம்பப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
கிழக்கு நோக்கிய கோவிலின் முன்புறம் காவல் தெய்வமான சங்கிலி கருப்பசாமி 15 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். முன் மண்டபத்தில் செல்வ விநாயகர் தரிசனம் தருகிறார். அடுத்து அர்த்த மண்டபத்தில் பரிவார தெய்வமாக காலபைரவர் கிழக்கு நோக்கி அருளுகிறார். அங்கிருந்து 16 அடி பாதாளத்தில் உள்ள கருவறைக்கு செல்ல 18 படிகள் கொண்ட வழி உள்ளது. கருவறையில் சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது செய்யப்பட்ட ஓம் ஸ்ரீ பாதாள செம்பு முருகன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார்.
இத்தலத்தின் அருகே குளம் போல் நீர் நிரம்பி உள்ள இடத்தில் ஜலகண்டேஸ்வரர் என்ற திருநாமத்தில் ஈசன் அருள்பாலிக்கிறார். பிரதோஷ காலத்தில் இவருக்குள் நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் பூஜைகள் நடைபெறுகிறது. முருகப்பெருமானுக்கு தினம் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திருவிழாக்கள்:
கிருத்திகை, சஷ்டி விரத தினங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. சங்கிலி கருப்பு சாமிக்கு அமாவாசை நாளில் விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி போன்ற வருட முக்கிய விரத தினங்களில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இராமலிங்கம்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை