இஞ்சிக்கொல்லை விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
இஞ்சிக்கொல்லை விஸ்வநாதர் சிவன்கோயில் இஞ்சிக்கொல்லை, அக்கிரகார தெரு, கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 612605.
இறைவன்
இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி
அறிமுகம்
கும்பகோணத்துக்கு தெற்குப்பக்கத்தில், திருச்சேறை அடுத்த ஊரில் உள்ளது இஞ்சிகொல்லை. பெரும்பாலும் கோயில் நகரங்களில் ஒரே ஒரு சுற்றுமதில் தவிர ஒன்றினையடுத்து மற்றொன்றாகப் பல மதில்களைக் கட்டுவதும் உண்டு. திருச்சேறை நகரம் ஒரு கோட்டை நகரமாக இருந்திருத்தல் வேண்டும் அதனை சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட சுற்று சுவர் இருந்திருக்க வேண்டும். அதில் பெரிய அகலமான சுற்றுமதில் கொண்ட பகுதி தற்போதைய இஞ்சிக்கொல்லை என விளங்கிக்கொள்ளமுடிகிறது. இன்றைய இஞ்சிக்கொல்லை அமைதியான கிராமம். அதிகபட்சம் நான்கு தெருக்கள் அதில் தெற்கு வடக்கில் இருக்கும் அக்கிரகார தெருவில் சிவாலயம் உள்ளது. கோயில் கிழக்கு நோக்கியது, முகப்பு பகுதி திறந்த வெளியாக உள்ளது. அடுத்து சிறிய நுழைவாயில் அதன் மேற்பகுதி ரிஷபவாகன காட்சி சுதை அலங்கரிக்கிறது. இறைவன் கருவறை கிழக்கு நோக்கியது, விஸ்வநாதர் அழகாக சிறியதாக உள்ளார் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. . இந்து.அற நிலைய கோயில் என்றபோதிலும் உள்ளூர் அக்கிரகார மக்களின் சம்பளத்தில் பராமரிப்பில் நாட்கள் நகர்கின்றன. அருகாமை இல்லத்தில் உள்ள அந்தணர் வீட்டில் சொன்னால் திறந்து தரிசனம் செய்துவைக்கின்றனர். கோயில் போதிய நிதியும் முறையான பூசகரும் இல்லாமல் உள்ளது.
புராண முக்கியத்துவம்
இறைவன் முன்னர் அர்த்த மண்டபம் உள்ளது அதன் முன்னர் திறந்தவெளி முகப்பு மண்டபம் கடந்த குடமுழுக்கில் கட்டப்பட்டுள்ளது. கருவறை வாயிலில் வல்லபகணபதி வல்லபியுடன் காட்சி தருவது அரிதான ஒன்று. வலது மாடத்தில் சுப்பிரமணியர் உள்ளார். இறைவன் திருமுன்னர் நந்தியும் பலிபீடமும் உள்ளது. கருவறை கோட்டங்களில் விநாயகர் மற்றும், தென்முகன் உள்ளார்கள். வடபுறம் பெரிய அளவிலான வனதுர்க்கை அம்மன் அழகாக காட்சி தருகிறார். இந்த துர்க்கை இக்கோயிலுக்கான அளவில்லை என்பதால் இவர் மதில்சுவர் பகுதி துர்க்கையாக இருக்கலாமோ!! பிரகார சிற்றாலயங்களாக கன்னிமூலை கணபதி, வடக்கில் ஒரு மாடம் போன்ற சன்னதியில் ஆஞ்சநேயர் உள்ளார் புதிய இடைசெருகலாக இருக்கலாம். சண்டேசர் வழமையான இடத்தில உள்ளார். வடகிழக்கில் பைரவர், சூரியன் நாகர் உள்ளார்கள். கிழக்கு நோக்கிய சனி பகவான் தனி சன்னதி கொண்டுள்ளார். பூஜை நேரங்களில் திறக்கப்பட்டு உடன் மூடப்படுகிறது. பிரதோஷம் சதூர்த்தி, ஞாயிறுகளில் அருகாமை தெருமக்கள் வருகின்றனர். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இஞ்சிக்கொல்லை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி