ஆலிவலம் அண்ணாமலையார் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆலிவலம் அண்ணாமலையார் சிவன்கோயில்,
ஆலிவலம், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610203.
இறைவன்:
அண்ணாமலையார்
இறைவி:
அபிதகுசலாம்பிகை
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் இருபது கிமீ தூரம் வந்தவுடன் அரிச்சந்திரா நதியை தாண்டி வலதுபுறம் திரும்பி அதன் தென் கரையில் மேற்கு நோக்கி 5 கிமீ தூரம் கரையிலேயே சென்றால் ஆற்றின் கரையில் ஆலிவலம் என கரையில் இருந்து கீழிறங்கும் சாலையில் ½ கிமீ தூரம் சென்றால் ஆலிவலம் உள்ளது. சோழப்பெருவேந்தர் காலத்தில் இவ்வூருக்கு ஆர்வலம் என்று பெயர் வழங்கி வந்திருக்கிறது. ஆர்வலம் என்ற பெயரே காலப்போக்கில் மருவி அலிவலம் – ஆலிவலம் ஆகியிருக்கிறது. சோழப்பெருவேந்தர் காலத்தில் இவ்வூரில் கிராம சபை நன்கு செயல்பட்டிருக்கிறது. இச்சபையார் தஞ்சைப் பெருங்கோயிலுச்குத் பரிசாரகர் ஒருவருக்கான செலவினங்களை ஏற்று செயல்படுத்தியிருக்கிறார்கள். ஊரின் வடகிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் கரையில் உள்ளது சிவன்கோயில்.
கிழக்கு நோக்கிய திருக்கோயில், ஒரு காலத்தில் பெரிய திருக்கோயிலாக இருந்த இக்கோயில் பின்னர் பல மாற்றங்கள் கண்டு இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது. KTK பண்ணையை சேர்ந்தவர்கள் இக்கோயிலை கேரளக்கோயில் போல உருவாக்க எண்ணி கருங்கல் கட்டுக்கல் கொண்டு கட்டி நாற்புறம் சரிந்த ஒரு கூரை அமைப்பில் உருவாக்கி உள்ளனர். இறைவன் அண்ணாமலையார். இறைவி அபிதகுசலாம்பிகை
மத்தியில் இறைவன் கருவறையும், தெற்கு நோக்கிய அம்பிகை கருவறையும், இறைவன் நேர் எதிரில் ஒரு மாடத்தில் நந்தியும், முகப்பில் விநாயகர் மற்றும் முருகன் கருவறையும் உள்ளன. இறைவன் கருவறையில் கோஷ்டம் போன்ற மாடத்தில் தென்புறம் தென்முகனும், வடக்கில் ஆஞ்சநேயரையும் வைத்துள்ளனர். கிழக்கு நோக்கியபடி பதினாறு கரங்கள் கொண்ட சோடச புஜ துர்க்கையம்மன் தனி சிற்றாலயத்தில் உள்ளார். மிகவும் விசேஷமான வடிவு கொண்ட இந்த தேவியை வழிபட கிடைப்பது பெரும் பாக்கியம்.
சண்டேசர் மற்றும் நவகிரகங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இறைவன் கருவறைக்கும் வைக்கப்பட்டுள்ளன. பைரவர் மேற்கு நோக்கிய சனந்தியில் உள்ளார். பண்ணையின் செலவில் அர்ச்சகர் நிவேதனம் மின்கட்டணம் ஆகியவைகள் தரப்படுகிறது என அறிந்தேன். இந்த கோயில் மட்டுமல்லாமல் புஞ்சையூர் சாலையில் இருக்கும் கோயிலும் இவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பக்தர்கள் வரவு ஏதுமின்றி இருந்தாலும் குருக்கள் ஒருவர் தான் கடமையை செவ்வனே செய்து வருவதை காண முடிந்தது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலிவலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி