ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
முகவரி
ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் – 642104 தொலைபேசி எண் : 4253 282337, 4253 283173
இறைவன்
இறைவி: மாசாணியம்மன்
அறிமுகம்
மாசாணியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். மாசாணியம்மன் சக்தி தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. இந்த அம்மன் “மாசாணி தேவி” என்று வட இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இக் கோயில் இந்தியாவிலுள்ள ஆனைமலை, பொள்ளாச்சியில் உள்ளது. பொள்ளாச்சியிலிருந்து தென்-மேற்கு திசையில் 24 கி.மீ. தொலைவில், அருள்மிகு மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இது ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இக் கோயிலின் பின்புலமாக ஆனைமலைக் குன்றின் பசுமையினைக் காணலாம். இக்கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும். இக்கோயிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.. இக்கோயிலின் ராஜகோபுரம் வடக்கு நோக்கி உள்ளது. கோயிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. கருவறையின் கிழக்குப் பக்கத்தில் அம்மன் சுயம்புவாக உள்ளார். பேச்சியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலின் காவல் தெய்வமாக கும்ப முனீஸ்வரர் உள்ளார். கோயில் வளாகத்தில் துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.
புராண முக்கியத்துவம்
பண்டைய காலங்களில், ஆனைமலை நன்னூர் என்றும், இப்பகுதி நன்னூரால் ஆளப்பட்டது. தனக்குச் சொந்தமான அடர்த்தியான மாந்தோப்பில் இருந்து பழங்களை பறித்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அவர் அறிவித்திருந்தார். அவரது படை தளபதியின் பெயர் கோசர். கோசர்க்கு சயணி என்ற ஒரு பெண் இருந்தாள். சயணி மிகுந்த அழகு உடையவள். எனவே தனது மகளுக்கு வீரமான ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டார். மகிழன் என்பவரை தனது மகளுக்கு மணமகனாக தேர்வு செய்தார். மகிழனுக்கும் சயணிக்கும் திருமணம் நடந்தது. இருவரின் வாழ்க்கையும் சிறப்பாக சென்றது. திருமணம் முடிந்து முதல் மாதத்திலேயே சயணி கர்ப்பம் ஆனாள். கோசர் தனது மகளின் வளைகாப்பு வைபவத்தை வெகு விமர்சையாக நடத்தினார். பின் எட்டாவது மாதத்தில் தனது மகளை தன் வீட்டுக்கு அழைத்து செல்ல விரும்பினார். ஆனால் மகிழனுக்கு தனது மனைவியை பிரிய மனமில்லை. அதை அறிந்து கொண்ட கோசர், குழந்தை பிறந்த சில மாதங்களில் சயணியை திரும்ப அனுப்பி வைப்பதாக மகிழனுக்கு வாக்களித்தார். சயணிக்கு மாம்பழம் மீது அதிக ஆசை. எனவே கோசர் விதவிதமான மாம்பழங்களை வாங்கி கொடுத்தார். ஒரு நாள், சயணியின் தோழிகள் சயணியை சந்திக்க அவளது வீட்டுக்கு வந்தனர். தோழிகளை பார்த்த சயணிக்கு, சிறு வயதில் ஏரியில் குளித்த நியாபகம் வந்தது. எனவே தோழிகளிடம் ஏரியில் குளிக்க தனக்கு ஆசை என கூறினாள். பெண்ணின் ஆசையை அறிந்த கோசர் பத்திரமாக சென்று வரும்படி சயணி மற்றும் தோழிகளிடம் கூறினார். அப்படி ஏரிக்கரைக்கு சென்று குளித்து கொண்டிருக்கையில், ஒரு மாம்பழம் தண்ணிரில் மிதந்து வந்தது. அதை எடுத்த சயணி, அப்படியே சாப்பிட ஆரம்பித்தாள். அது நன்னூர் ராஜா தோட்டத்து மாம்பழம் என்பதை அறிந்த காவலாளி மன்னனிடம் முறையிட மன்னன் சயணிக்கு மரண தண்டனை வழங்கினான். இதை அறிந்த சயணியின் கணவனான மகிழன், தனது மனைவியை விடுவிக்குமாறு மன்னனிடம் வேண்டினான். மகிழன் தனது மனைவிக்கு பதிலாக எடைக்கு எடை தங்கமும், பல யானைகளையும் பரிசாக தருவதாக கூறியும் மன்னன் அதை ஏற்காமல் சயணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டான். பின்னர் மகிழன் , மன்னனை கொன்று தானும் உயிர் துறந்தான். அதை அறிந்த கோசர், ஒரு ஈட்டியை தனது மார்பில் குத்திக் கொண்டு இறந்தார். இது நடந்த சில காலம், ஊரில் மழை இல்லாமல் மக்கள் அவதி உற்றனர். கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை தந்ததால் தான் ஊரில் மழை இல்லாததை உணர்ந்த மக்கள், அந்த பெண்ணிற்கு மண்ணில் சிலை எடுத்து பெண் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். வழிபட ஆரம்பித்தவுடன் மழை பெய்து, ஊரின் செழுமை பழைய நிலைக்கு திரும்பியது. அந்த தெய்வமே பின்னர் மாசாணி அம்மன் என்று அழைக்கப்பட்டாள். பிள்ளை பேறு இல்லாதவர்கள் மாசாணி அம்மனை வேண்டினாள், பிள்ளை பேறு சீக்கிரம் கிடைக்கும். அது போல மிளகாய் அரைத்து அம்மன் மீது பூசி வேண்டினால், நினைத்த காரியம் வெற்றி அடையும்
நம்பிக்கைகள்
குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க வேண்டிக்கொள்ளலாம். நேர்த்திக்கடன்: அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளைச் சந்தித்து, உடல் உபாதைகளால்அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள். அவளது தரிசனம் பெற ஆனைமலைக்கு செல்ல வேண்டும். சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், இந்த அம்மனை வணங்கி அருள்பெற்றுச் சென்றுள்ளது சிறப்பு. ராமர் வழிபாடு : சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது, அவளை மீட்க ராமர் இவ்வழியே சென்றார். அப்போது, இம்மயானத்தில் பராசக்தியின் வடிவாய் மாசாணியம்மன் இருப்பதை அறிந்து, மயான மண்னைக் கொண்டு அம்பாளை சயன உருவமாக செய்து வழிபட்டுச் சென்றார். பெயர்காரணம் : இங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் “மயானசயனி’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் “மாசாணி ‘என்றழைக்கப்படுகிறாள். யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை “உம்பற்காடு’ என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. பெண்களின் அம்மன் : இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும். செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயில் வளாகத்தில் உள்ள “நீதிக்கல்லில்’ மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும், “முறையீட்யீ டுச் சீட்டில்’ குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர். அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.
திருவிழாக்கள்
தை மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறுகிறது. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆனைமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
பொள்ளாச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்