ஆனைமங்கலம் மஹாகாளேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஆனைமங்கலம் மஹாகாளேஸ்வரர் சிவன்கோயில்,
ஆனைமங்கலம், கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611104.
இறைவன்:
மஹாகாளேஸ்வரர்
இறைவி:
மங்களநாயகி
அறிமுகம்:
ஆனைமங்கலம் செப்பேடு – சோழ வரலாற்றில் பெரும் பொக்கிஷமாக கருதப்படுவது. திருவாரூரின் வடக்கில் உள்ளது கங்களாஞ்சேரி, இங்கிருந்து நாகூர் செல்லும் சாலையில் சரியாக 12 ½ கிமீல் கடம்பங்குடி நிறுத்தம் உள்ளது. இதன் தெற்கில் செல்லும் கடம்பங்குடி சாலையில் 2½. கிமீ சென்றால் வெட்டாறு ஓடுகிறது, அதன் கரையில் ஒரு கிமீ தூரம் சென்றால் ஆனைமங்கலம் கிராமத்தை அடையலாம். வெட்டாறு வடக்கு கரை சரளைகல் போடப்பட்ட சாலைதான், மகிழுந்து மூலம் செல்ல இயலாது. மிகச்சிறிய கிராமம் ஆற்றின் கரையோரம் சிவன்கோயிலும் அருகில் பத்து வீடுகளே உள்ளன. பழுதடைந்து கிடக்கிறது தனித்தனியாக இரு கருவறைகள் உள்ளன. எதிரில் நந்திக்கு ஒரு மண்டபம், அவ்வளவு தான். இறைவன் பெயர் மஹாகாளேஸ்வரர் இறைவி மங்களநாயகி.
புராண முக்கியத்துவம் :
கீழ்வேளுரில் தவம் செய்த முருகனை பாதுகாக்க அவரது அன்னை மாகாளியாக வந்தார் அவர் வழிபட்ட தலம் இது என்பதால் அன்னைமாகாளம் ஆனது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார் முகப்பில் அர்த்த மண்டபம் கூம்பு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது விமானத்தின் மேல் பெரிய மரங்கள் வளர்ந்து அதன் வேர்கள் மண்டபத்தை பக்கச்சுவற்றை பிளந்து வைத்திருக்கிறது. உள்ளிருந்து பார்த்தால் வானம் தெரிகிறது சுவரின் நாற்புறமும் வேர்கள் சடைசடையாய் வேர்விட்டு கிடக்கிறது. இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். அர்த்த மண்டபத்தில் சண்டேசர் முருகன் சிலைகள் உள்ளன. இறைவன் எதிரில் சற்று தொலைவில் நந்தியும் ஒரு பலிபீடமும் உள்ளது. இறைவி தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் புன்னகை பூத்த முகத்தவளாக நிற்கிறாள். அருகில் மாரி போன்ற ஒரு சிலை உள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆனைமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி