Monday Jul 01, 2024

ஆண்டார்குப்பம் பால சுப்ரமணியர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம், திருவள்ளூர் மாவட்டம் – 601 204. போன்: +91- 44 – 2797 4193, 99629 60112.

இறைவன்

இறைவன்: பாலசுப்பிரமணியசுவாமி

அறிமுகம்

பால சுப்ரமணியர் கோயில், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த பகுதியில் உள்ள பழமையான மற்றும் மிகவும் பிரபலமான முருகன் கோவில். அருணகிரி நாதர் திருப்புகழால் போற்றப்படும் முருகன் கோவில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள அதிகார முருகன், காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம்.

புராண முக்கியத்துவம்

கைலாயம் சென்ற பிரம்மா, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், “”நீங்கள் யார்?” எனக்கேட்டார். “”நான்தான் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா!” என அகங்காரத்துடன் கூறினார். அவரது அகந்தையை ஒழிக்க முருகன், எதன் அடிப்படையில் படைப்புத்தொழில் செய்கிறீர்றீகள் எனக்கேட்டார். அவர் “ஓம்’ என்று சொல்லி அதற்கு பொருள் தெரியாமல் விழிக்க, முருகன் அவரைச் சிறை வைத்தார். பொதுவாக பிறரிடம் கேள்வி கேட்பவர்கள், மேலான பொறுப்பில் உள்ளவராகவோ அல்லது அவரை விடவும் பெரியவராகவோதான் தான் இருக்க முடியும். இங்கு பிரணவத்தின் வடிவமான முருகன், பிரம்மாவை விடவும் உயர்ந்தவராக இருக்கிறார். எனவே பிரம்மாவிடம் அதிகாரத்துடன், தனது இரண்டு கரங்களையும் இடுப்பில் வைத்து கேள்வி கேட்டார். இந்த அமைப்பிலேயே இத்தலத்தில் அருள்புரிகிறார். முருகனை இத்தகைய வடிவில் காண்பது மிக அபூர்வம். பிற்காலத்தில் இந்த முருகனை, ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனர். அப்போது தலயாத்திரை சென்ற பக்தர் ஒருவர், இங்கு தங்கினார். மாலையில் தீர்த்த நீராடிவிட்டு முருகனை வழிபட வேண்டுமென நினைத்து, ஆண்டிகளிடம் நீராடும் இடம் எங்கிருக்கிறது? எனக் கேட்டார். அவர்கள் அப்படி தீர்த்தம் எதுவும் இல்லை என்றனர். அப்போது ஆண்டிக்கோலத்தில் சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். பக்தரிடம் தான் தெப்பத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியவன், தான் வைத்திருந்த வேலால் ஓரிடத்தில் குத்தினான். அங்கு நீர் பொங்கியது. ஆச்சர்யத்துடன் அதில் நீராடிய பக்தருக்கு, சிறுவன் முருகனாகக் காட்சி கொடுத்தார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணியராக அருளுகிறார்.

நம்பிக்கைகள்

பொறுப்பான பதவி கிடைக்க, அதிகாரமுள்ள பதவியில் இருப்போர் பணி சிறக்க, புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

பாலசுப்பிரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என எவ்வித ஆயுதமும் இல்லாமல் காட்சி தருகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையுடன் இருப்பதால் இவரை, “அதிகார முருகன்’ என்றும் அழைக்கிறார்கள். அருணகிரியார் இவரைப் பற்றி திருப்புகழ் பாடியிருக்கிறார். காலையில் இவர் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், ஆண்டியர்குப்பம் என்றழைக்கப்பட்டு, “ஆண்டார்குப்பம்’ என மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். வாகன சிறப்பு: முருகனிடம் சிறைத்தண்டனை பெற்ற பிரம்மா, அவரிடம் வேலையைப் பற்றி சரியாகத் தெரியாமல் செய்ததற்கு மன்னிப்பு வேண்டினார். இவர் சுவாமி சன்னதி எதிரில், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். இதில் பிரம்மாவின் உருவம் இல்லை. அவருக்குரிய தாமரை, கமண்டலம், அட்சரமாலை மட்டும் இருக்கிறது. முருகனின் பிரதான வாகனம் மயில். அறுபடை வீடுகளில் சுவாமிமலை, திருத்தணி மற்றும் சென்னை குமரன்குன்றம் ஆகிய தலங்களில் முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் மயிலுடன், சிம்ம வாகனமும் இருக்கிறது. சிம்மம், அம்பிகைக்குரிய வாகனம். தாய்க்கு உரிய வாகனத்துடன், இங்கு முருகன் அருளுகிறார். இந்த சிம்மம், மயிலைத் தாங்கியபடி இருப்பது மற்றொரு சிறப்பு. சித்திரை பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் தெய்வானை திருமணமும், 9ம் நாளில் வள்ளி திருமணமும் நடக்கிறது. முருகன் அவதரித்த கார்த்திகை மாதத்தில் குமார சஷ்டி விழாவின்போது லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.

திருவிழாக்கள்

சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிகிருத்திகை, கார்த்திகையில் குமார சஷ்டி, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆண்டார்குப்பம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பொன்னேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top