Monday Jul 01, 2024

ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் ஆடுதுறை ஆடுதுறை அஞ்சல் திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 612101

இறைவன்

இறைவன்: ஆபத்சகாயேசுவரர் இறைவி: பவளக்கொடியம்மை

அறிமுகம்

ஆபத்சகாயேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 31ஆவது சிவத்தலமாகும். பவள மல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது. தென் குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் இத்தலம் உள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், தாயார் பவளக்கொடியம்மை

புராண முக்கியத்துவம்

இதிகாச மாகிய இராமயணத்தில் வரும் இராம பக்தன். இவன் தென் குரங்காடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு வரும் நாளில், பகைமை காரணமாகச் சுக்ரீவனைத் தேடிக் கொண்டு வாலி வந்தான். மிகவும் வல்லமை படைத்த அந்த வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ஆடுதுறை அரவச்சடை அந்தணனாகிய அரனை அடைக்கலம் புகுந்து நின்று தன்னைக் காப்பாற்றியருளுமாறு வேண்டிக் கொண்டான். அப்போது சிவபிரான் சுக்ரீவன் அன்னப் பறவையாகவும் அவன் தேவியைப் பாரிஜாத மரமாகவும் (பவள மல்லிகை மரம்) வேற்றுருக் கொள்ளச் செய்து காப்பாற்றியருளினான். சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தைப் போக்கியருளி அவனுக்குச் சகாயம் செய்தமையால், இறைவன் ஆபத்சகாயேசுரர் எனவும், துன்பத்தில் துணைவர் எனவும் வழங்கப்படுகின்றார். அம்மையின் திருநாமம் பிரபாளவல்லி என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகிறது. கோயிலின் அமைப்பு : இராஜகோபுரம் கிழக்கு நோக்கியதாகவும் மூன்று மாடங்களையுடையதாகவும் அமைந்துள்ளது. இதனைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரத்து விநாயகரையும் பலிபீடத்தையும் சிறுமண்டபத்துள்ளே அமைந்துள்ள நந்தியையும் காணலாம். அகன்ற வெளிப் பக்கத்துப் பெரிய பிரகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால் மணிமண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களையும் திருப்புகழ்ப் பாடல்களையும் கல்லெழுத்துக்களில் வடித்துள்ளமையைப் படித்து உணரலாம். இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்குநோக்கிய அருள்தரு பவளக் கொடியம்மன் சந்தியையும் அதன் எதிரில் நோக்கி எழுந்தருளியுள்ள மூத்தபிள்ளையாரையும் தரிசிக்கலாம்.உள்ளே சென்றால் எதிரில் தோன்றும் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன் ஆபத்சகாயேசுரரை வணங்கும் காட்சியும், சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாவும் அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம். உள்ளே மூன்றாம் வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடமும் நந்தியும் அமைந்து விளங்குவதையும், கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு துவாரபாலகர்களையும் காணலாம். அருகில் விநாயகரும் அமர்ந்துள்ளார். மூலஸ்தானத்தில் அருள்தரும் ஆபத்சகாயேசுரரைக் கண்டு தரிசித்துத் திரும்பினால் தெற்குப் பக்கத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கும் பஞ்ச லோகத்தால் அமைந்துள்ள நடராஜர், சிவகாமசுந்தரி சோமாஸ்கந்தர் முதலிய பல வேலைப்பாடமைந்த திருவுருவச் சிலைகளைக் காணலாம். உள் பிரகாரத்தில் தெற்குப் பக்கம் நால்வர் சன்னதியும் தெட்சிணாமூர்த்தி சன்னதியும் அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தின் தெற்குச் சுவரில் அகத்தியர், நடராஜர், காரைக் காலம்மையார், விநாயகர் திருவுருவங்களைப் புடைச் சிற்பங்களாகக் காணலாம். இவற்றின் அருகில் இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் காணலாம். மேற்கு மண்டபத்துத் திருமாலைப் பத்தியில் தென் கோடியில் முதல் இரு வாயில்களில் விநாயகரையும், மூன்றாவது வாயிலில் பிலிபீடம் நந்தியோடு அமைந்துள்ள பண்டைய வரலாற்றுப் பவளக் கொடியுடனாகிய ஆபத்சகாயேசுரரையும் சுக்ரீவனையும் தரிசிக்கலாம். அடுத்துபலிபீடம் நந்தியோடமைந்த சுவாமியையும் அம்பிகையையும்; அதனையடுத்து வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானையும் தரிசிக்கலாம். எதிரில் திருமாலும் பிரமனும் அடியும் முடியும் தேடிய அண்ணாமலையார் சோதிவடிவமாக விளங்கும் புடைச்சிற்பத்தைக் காணலாம். முருகன் சன்னதியை அடுத்து முனிவர்கள் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் அமைந்துள்ளன. இறுதியில் கஜ லட்சுமியைக் கண்டு தரிசித்துத் திரும்பினால் வடக்கு நோக்கிய சன்னதியில் எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும் துர்கா தேவியை தரிசிக்கலாம். அருகில் (மேற்கில்) கங்கா விசர்சன மூர்த்தியையும் பைரவ மூர்த்தியையும் கண்டுகளிக்கலாம். இவ்விருபுடைச் சிற்பங்களும் கைத்திறமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகவும், காண்போர் வியக்கத்தக்கனவாகவும் அமைந்துள்ளன. அவற்றின் அருகில் விஷ்ணு துர்க்கை எழுந்தருளி விளங்குகின்றாள். பின்னர் சண்டேசுரர் சன்னதியை வணங்கிக் கடந்து சென்றால் தெற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள சிவகாமியம்மையுடனாய ஆனந்த தாண்டவ மூர்த்தியைத் தரிசித்துக் கண் பெற்ற பயனைப் பெறலாம். கூத்தப் பெருமான் சன்னதிக்கு மேற்கில் நாயக்கர் கால கலை வேலைப்பாடமைந்த அறுபத்துமூவர் திருவுருவப் படங்களையும், கிழக்கில் அழகிய மஞ்சத்தில் பன்னிரு திருமுறைகளையும் காணலாம். பக்கத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள சுவர்ண பைரவர், சூரியன் சனீச்சரர், பாணலிங்கம், அரதத்தர் ஆகிய திருவுருவங்கள் அமைந்துள்ளன. அவற்றின் அருகில் ஒன்பான் கோள்களும் உயரிய மேடை மீது எழுந்தருளியுள்ளன. வாயிலைக் கடந்து வந்து அருள்தரு பவளக்கொடி யம்மையைக் கண்டு வணங்கி வலம் வந்தால் பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்வதாகவும் செம்பியன் மாதேவி சிவபூசை செய்வதாகவும் அமைந்துள்ள இரண்டு சிறிய புடைச் சிற்பங்களைக் காணலாம். பின்னர் சண்டே சுவரியைத் தரிசித்துக் கொண்டு இராச கோபுரத்தருகில் வந்து தண்டனிட்டு வணங்கிச் சிவம் நிறைந்த சிந்தையுடன் விடைபெறலாம்.

நம்பிக்கைகள்

தந்தை மகன் உறவில் பிரச்னை இருந்தால் சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபடுகின்றனர். தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

இத்தலம் காவிரிதென்கரையில் இருப்பதாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சன்னதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 94 வது தேவாரத்தலம் ஆகும். பைரவரும், அகஸ்தியரும் வழிபட்ட தலம். கண்டராதித்தன் மனைவியார் கட்டிய கற்றளி. பிரகாரத்தில் நால்வர், விநாயகர், சிவலிங்கம் அம்பாள் சுக்ரீவன் அமைத்த சந்நிதி, விசுவநாதர், மயில்வாகனர், கஜலட்சுமி, நடராசர் சந்நிதி, சனீஸ்வரன், சூரியன், சந்திரன், நவக்கிரகம் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இங்குள்ள துர்க்கைக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. நாடொறும் நான்கு கால பூசைகள். சோழ, பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் இத்தலம் “”தென் கரைத் திரைமூர் நாட்டு திருக்குரங்காடுதுறை”; பூபாலகுலவல்லி வள நாட்டு திரைமூர் நாட்டு திருக்குரங்காடுதுறை” எனக் குறிக்கப்படுகின்றது. சுவாமியைத் “திருக்குரங்காடுதுறை மாதேவர்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜர் : தில்லைப் பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடியருளினார். அந்த நடனத்தைக் கண்டுகளிக்க இயலாத அகத்தியரும் ஏனைய முனிவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க குரங்காடுதுறைக் குழகனார் ஆனந்த நடனம் ஆடியருளினார். அதனால் இப்பகுதிக்கு நடராஜபுரம் எனப் பெயர் வழங்குவதாயிற்று. தெற்குப் பிரகாரத்தில் அகத்தியர் நடராஜர் திருவுருவப்புடைச் சிற்பங்களை வரலாற்றுக் கண் கொண்டு காணலாம். அகத்தியர் : சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டு வரும் போது இத்தலத்தை வந்தடைந்தார். இங்கே சுவர்ண பைரவர் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பல வரங்களைப் பெற்று மகிழ்ந்தார். சுவர்ண பைரவரைச் சிறப்போடு பூஜை செய்து அன்புடன் வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். தீராத நோய்கள் தீரும்; தனம் தானியம் பெருகும்; புகழ் உண்டாகும். ஆஞ்சநேயர் : முன்னொரு சமையம் திருக்கயிலை மலையில் கல்லும் கரைந்து உருகும்படி இசைபாடிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையைக் கேட்டு மெய்மறந்து அங்கே அமர்ந்திருந்தார். பிறகு அவர் புறப்படும் போது கீழே வைத்திருந்த “மகதி’ என்னும் வீனை மீது பனி முடியதால் எடுக்க இயலாமல் புதைந்திருந்தது. அது கண்ட நாரதர் வெகுண்டு ஆஞ்சநேயனை நோக்கி உன் இசையை நீ மறப்பாயாக என்று சபித்தார். பின்னர் மனம் வருந்திய ஆஞ்சநேயர் தன்னுடைய மன்னவன் சுக்ரீவன் வழிபட்ட இத்தென்குரங்காடுதுறைக்கு வந்து ஆபத்சகாயேசுரரை மனமுருகி வழிபட்டார். மறந்து போன இசைஞானத்தை மீண்டும் பெற்றுக் களிப்படைந்தார். அரதத்தர் என்பவர் கஞ்சனூரில் அவதரித்த வைணவ பக்தராவார். இவர் இளம்பருவம் முதற்கொண்டே சிவபக்தி மிக்கவராகக் கஞ்சனூரில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளி இருக்கும் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டுச் சிவஞானம் கைவரப் பெற்றவர். பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது ஏறி நின்று சிவபரத்துவத்தைத் தாபித்தவர். இவர் நாள்தோறும் கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, ஆகிய ஏழு சிவத்தலங்களையும் தரிசித்த பின்னரே உணவு கொள்ளும் நியமம் உடையவர், ஒரு நாள் வழக்கம் போல ஆடுதுறையை வழிபட்டு மீளும்போது மழை பெய்தது, இருளும் அடர்ந்தது வழியறியாமல் திகைத்து நின்றார். ஆபத்சகாயேசுரர் வயோதிக அந்தண வடிவங் கொண்டு, கோல் தாங்கிய கையினராய் அவருக்கு வழித் துணையாகச் சென்று அவரது இல்லத்தில் அவரைவிட்டு வந்ததாகக் கூறுவர். வைணவப்பெண் ஒருத்தி திருமங்கலக்குடியில் வாழ்ந்து வந்தாள். அவள் ஆபத்சகாயேசுரர் மீது அளவற்ற பக்தி கொண்டு வழிபடுவது வழக்கம். ஒரு நாள் நிறைமாத கர்ப்பிணியாகிய அவள் ஆடுதுறை அரனைத் தரிசிக்க வந்தாள். தரிசித்துத் திரும்பும்போது காவிரியாற்றில் வெள்ளம் பெருகியது. ஓடக்காரனும் இல்லை. ஊர் செல்ல இயலாமல் உடல்நோவ இவ்வாலயத்தை வந்தடைந்தாள். ஆபத்சகாயேசுரரை மனமுருக வேண்டினாள். அப்பெருமான் “”தாயும் நீயே தந்தை நீயே” என வரும் திருஞானசம்பந்தர் வாக்கின் படி தாயாகத்தோன்றி உதவியருளினார். சுகப் பிரசவமாயிற்று. பின்னும் அவர் திருமங்கலக் குடிக்குச் சென்று அவர் பெற்றோரிடம் சுகப்பிரசவச் செய்தியைச் சொல்லி, “தாயும் சேயும் நலம், சென்று அழைத்து வாருங்கள் என்றார். அவர்கள் “தாங்கள் எந்த ஊரினர் ? என்று வினவ; “மருத்துவக்குடி’ என்று சொல்லி இருப்பிடம் மீண்டார் எனச் சொல்லுவர். இத்தலத்தில் சூரியனுக்கும் சனிக்கும் விசேஷ ஆராதனைகள் செய்து வழிபட்டால், தந்தைக்கு மகனுக்கும் உண்டாகும் மனக்கசப்பும் விரோத குணமும் நீங்கப்பெற்று இன்புறுவர் என்பது உண்மை.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top